About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 018 திருக்கண்ணங்குடி. Show all posts
Showing posts with label 018 திருக்கண்ணங்குடி. Show all posts

Sunday, 24 December 2023

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||018. திருக்கண்ணங்குடி||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்|| 
||பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1748 - பெரிய திருமொழி - 9.1.1
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய* வாள் அரவின் அணை மேவி*
சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித்* சாம மா மேனி என் தலைவன்*
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்* அருங் கலை பயின்று* 
எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1749 - பெரிய திருமொழி - 9.1.2
கவள மா கதத்த கரி உய்யப்* பொய்கைக் கராம் கொளக் கலங்கி* 
உள் நினைந்து துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபடச்* 
சுடு படை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்*
கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி*
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1750 - பெரிய திருமொழி - 9.1.3
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலை கடல் குளிப்ப*
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி* விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்*
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்* புது விரை மது மலர் அணைந்து*
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1751 - பெரிய திருமொழி - 9.1.4
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி*
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்*
பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை* தீர்த்தவன் பஞ்சவர் பாகன்*
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து*
உயர் கொடி ஒளி வளர் மதியம்*
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1752 - பெரிய திருமொழி - 9.1.5
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்* மூவடி நீரொடும் கொண்டு*
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக* பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து* 
அலை புனல் இலைக் குடை நீழல்*
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1753 - பெரிய திருமொழி - 9.1.5
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணி முடி பொடிபடுத்து* 
உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து* 
வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி*
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்* குளிர் தரு சூத மாதவியும்*
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1754 - பெரிய திருமொழி - 9.1.7
வான் உளார் அவரை வலிமையால் நலியும்* மறி கடல் இலங்கையார் கோனை*
பானு நேர் சரத்தால் பனங்கனி போலப்* பரு முடி உதிர வில் வளைத்தோன்*
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக்* 
கண முகில் முரசம் நின்று அதிர*
தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1755 - பெரிய திருமொழி - 9.1.8
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட* 
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப்*
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
வரையின் மா மணியும் மரதகத் திரளும்* வயிரமும் வெதிர் உதிர் முத்தும்*
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

009.  திவ்ய ப்ரபந்தம் - 1756 - பெரிய திருமொழி - 9.1.9
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழியப்* பாரத மா பெரும் போரில்*
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்* மைத்துனற்கு உய்த்த மா மாயன்*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்*
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1757 - பெரிய திருமொழி - 9.1.10
கலை உலா அல்குல் காரிகைதிறத்துக்* கடல் பெரும் படையொடும் சென்று*
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற* திருக்கண்ணங்குடியுள் நின்றானை*
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 22 December 2023

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||018. திருக்கண்ணங்குடி||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்||
||பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1748 - 1757 - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை*
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்*
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்*
கண்ணங்குடியான் கருத்து|

  • எண்ணம் – எனது மனத்தை
  • குடி ஆய் – தான் வாழும் இடமாகக் கொண்டு
  • இருந்தான் நின்றான் கிடந்தான் – அந்நெஞ்சினில் வீற்றிருத்தலையும் நிற்றலையும் சயனித்தலையும் செய்பவனும்
  • கண்ணங்குடியான் – திருக்கண்ணங்குடி என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமான் 
  • என்னை – அடியேனை
  • கூறு புகழ் தன் அடிக்கே கூட்டுவனோ – வேதங்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற கீர்த்தியை உடைய
  • தனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்வனோ? அன்றி
  • இன்னம் – இனி மேலும்
  • வேறுபட – அவ்வாறு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுவதற்கு மாறாக
  • பல் பிறப்பில் – பலவகைப் பிறப்புக்களிலும்
  • வீழ்த்துவனோ – தள்ளி வருத்துவனோ?
  • கருத்து – அவனது திரு உள்ளக் கருத்தை
  • தேறுகிலேன் – இன்னதென்று அறியேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 20 December 2023

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||018. திருக்கண்ணங்குடி||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்||
||பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ லோக நாதப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஷ்யாமள மேனி பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - லோக நாதன், ஷ்யாமள மேனி
  • பெருமாள் உற்சவர் - தாமோதர நாராயணன் - ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பதைப் போல் 
  • தாயார் மூலவர் - லோகநாயகி
  • தாயார் உற்சவர் - அரவிந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - ஷ்ரவண
  • விமானம் - உத்பல 
  • ஸ்தல விருக்ஷம் - மகிழம்
  • ப்ரத்யக்ஷம் - ப்ருகு சைத்யர், கௌதம முனி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1. திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3. கபிஸ்தலம். 4. திருக்கோவிலூர். 5. திருக்கண்ணங்குடி. இத்தல தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப் போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேரா வழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ண பிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டு இருந்த வெண்ணெய்யை,  கண்ணன் அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக் கண்ட வசிஷ்டர், "அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டு இருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக் கயிற்றால் கட்டிப் போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன், "வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப் பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள், "கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள வேண்டும்,'' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கு இணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக் கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதை அறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக் காட்டாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்