About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 009 திருக்கவித்தலம். Show all posts
Showing posts with label 009 திருக்கவித்தலம். Show all posts

Sunday, 17 September 2023

108 திவ்ய தேசங்கள் - 009 - திருக்கவித்தலம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||009. திருக்கவித்தலம்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கபிஸ்தலம் - கும்பகோணம்||
||ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
------------
001. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2431 - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (50)

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்*
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்*
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்*
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண்| 

  • காணியும் – அடியேனுக்கு பூமியும்
  • இல்லமும் – வீடும்
  • கை பொருளும் – கையிலுள்ள திரவியமும்
  • ஈன்றோரும் – பெற்ற தாய் தந்தையரும்
  • பேணிய வாழ்க்கையும் – விரும்பிய நல்வாழ்வும்
  • பேர் உறவும் – நெருங்கிய சுற்றத்தாரும்
  • சேணில் புவித்தலத்தில் இன்பமும் – மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக்கூடிய இன்பங்களும்
  • கவித்தலத்தில் – திருக்கவித்தலம் என்னும் ஸ்தலத்தில்
  • பொங்கு அரவம் ஏறி – சீறும் தன்மையுள்ள ஆதிசேஷன் மீது ஏறி
  • கண் துயில்வோன் – திருக்கண் வளர்ந்தருளும் திருமாலினுடைய
  • கால் – திருவடிகளேயாம்
                                                                  ------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமழிசையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 2431 - நான்முகன் திருவந்தாதி - 5.10 (50)
கூற்றமும் சாரா* கொடு வினையும் சாரா* 
தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்*
ஆற்றங்கரைக் கிடக்கும்* கண்ணன் கடல் கிடக்கும்* 
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Saturday, 16 September 2023

108 திவ்ய தேசங்கள் - 009 - திருக்கவித்தலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||009. திருக்கவித்தலம்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கபிஸ்தலம் - கும்பகோணம்||
||ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ரமாமணிவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கஜேந்திர வரதன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கஜேந்திர வரதன்
  • பெருமாள் உற்சவர் - ஆதிமூலப் பெருமாள், கண்ணன்
  • தாயார் மூலவர் - ரமாமணிவல்லி
  • தாயார் உற்சவர் - பொற்றாமரையாள்
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கஜேந்திர, கபில
  • விமானம் - ககனாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம் - மகிழம்பூ
  • ப்ரத்யக்ஷம் - கஜேந்திரன், ஆஞ்சநேயர்
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலபெருமாளை ஆழ்வார் "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ண மங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.

கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க இந்த க்ஷேத்திரத்தில் தவம் இருக்கும் படி பெருமாள் கூற அதன் படி அவரும் தவம் இருந்தார். கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரதனாக சேவை சாதித்துள்ளார். இதனால் கபிதலம் என்று பெயர் பெற்றது.

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதும் இல்லை. இவனும் யாரையும் காண்பதும் இல்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக் குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர் மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி இருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில் ’மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும் பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும் நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண் விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும் பாப விமோசனமும் கேட்டான். இவனது நிலை உணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு ‘நீ யானையாக இருந்தாலும் அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன் ’ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி உனக்கு மோட்சமும் சாப விமோசனமும் கிடைக்கும் ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப் பிடித்து இழுத்து கொடுமை படுத்துவதையே  தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப் பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர், "நீ வருபவர்களை எல்லாம் காலைப் பிடித்து இழுப்பதால் முதலையாக மாறுவாய்'' என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். 

அகத்தியர் ’கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப் பிடிப்பாய் அப்போது அதைக் காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக் கண்ட முதலை யானையின் காலைக் கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்