About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 029 திரு அரிமேய விண்ணகரம். Show all posts
Showing posts with label 029 திரு அரிமேய விண்ணகரம். Show all posts

Tuesday, 12 March 2024

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||029. திரு அரிமேய விண்ணகரம்||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1238 - பெரிய திருமொழி - 3.10.1
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்*
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து* 
இவ் ஏழ் உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்* 
பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் 
மலர்கள் மிகு கைதைகள் செங்கழு நீர்*
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ*
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1239 - பெரிய திருமொழி - 3.10.2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும்*
விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று*
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்*
குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்*
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்*
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1240 - பெரிய திருமொழி - 3.10.3
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்*
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த*
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து* 
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்* 
மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட*
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்*
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1241 - பெரிய திருமொழி - 3.10.4
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு* 
அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி*
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு*
அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்*
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை*
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே*
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1242 - பெரிய திருமொழி - 3.10.5
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்*
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு*
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*
அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே*
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்*
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1243 - பெரிய திருமொழி - 3.10.6
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா* 
இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர*
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய்*
என் தன் தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்*
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை*
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்*
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1244 - பெரிய திருமொழி - 3.10.7
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்*
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்*
கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி*
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம்* 
ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று* 
அங்கு ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1245 - பெரிய திருமொழி - 3.10.8
கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை*
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்*
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்*
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்று மணி மண்டபங்கள் சாலைகள்* தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை*
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1246 - பெரிய திருமொழி - 3.10.9
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு* 
வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு* 
வலி மிக்க கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை*
கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி*
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து*
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1247 - பெரிய திருமொழி - 3.10.10
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து* 
பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்*
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்*
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை*
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்*
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார்* 
உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 9 March 2024

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||029. திரு அரிமேய விண்ணகரம்||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1238 - 1247 - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ*
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்*
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்*
அரிமேய விண்ணகரத் தார்க்கு|

  • மடம் நெஞ்சே – அறியாமையை உடைய மனமே! 
  • அரிமேய விண்ணகரத்தார்க்கு – திரு அரிமேய விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தி எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு
  • வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள் 
  • நம் அளவோ – நாம் மாத்திரம் தானோ? அன்று
  • தாழும் சடையோன் – தொங்குகின்ற கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
  • சதுமுகத்தோன் – நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனும்
  • பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம் பொருந்திய ஐராவதம் என்னும் யானை மேல் ஏறிச் செல்லுகின்ற
  • சுவர்க்க லோகத்துக்கு அரசனாகிய இந்திரனும் அடியவராவர்
  • கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||029. திரு அரிமேய விண்ணகரம்||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ குடமாடு கூத்தன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அம்ருதகடவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ குடமாடு கூத்தன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - குடமாடு கூத்தன்
  • பெருமாள் உற்சவர் - சதுர்புஜ கோபாலன்
  • தாயார் மூலவர் - அம்ருதகடவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - வீற்றிருந்த 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கோடி, அமிர்த
  • விமானம் - உச்ச ச்ருங்க
  • ஸ்தல விருக்ஷம் - பலாச
  • ப்ரத்யக்ஷம் - உதங்க மஹரிஷி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

எம்பெருமான் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும் படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக் கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர் புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார். திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை ஸம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாஸாஸநம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற உற்சவமாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடி மரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச் சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம். 

உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இள வயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குரு பத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக் கொண்டு குரு குலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக் கொண்டே பசுக்களை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத் தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக் கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்து விட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச் செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக் காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக் காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லி விட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி எம்பெருமானை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்