About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 020 திரு தஞ்சைமாமணி கோவில். Show all posts
Showing posts with label 020 திரு தஞ்சைமாமணி கோவில். Show all posts

Wednesday, 10 January 2024

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||020. திரு தஞ்சை மாமணி கோவில்||
||தஞ்சாவூர்||
||இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 5

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 953 - பெரிய திருமொழி - 1.1.6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* 
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* 
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்**
வம்பு உலாம் சோலை மா மதிள்* 
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்* 
நாராயணா என்னும் நாமம்|

002. திவ்ய ப்ரபந்தம் - 1090 - பெரிய திருமொழி - 2.5.3
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்* 
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி*
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து* 
விளையாட வல்லானை வரைமீ கானில்**
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்* 
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்* 
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1576 - பெரிய திருமொழி - 7.3.9
என் செய்கேன் அடியேன் உரையீர்* 
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன்* 
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை**
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி* 
என் மனம் போற்றி என்னாதே|

பூதத்தாழ்வார்
004. திவ்ய ப்ரபந்தம் – 2251 - இரண்டாம் திருவந்தாதி - 7.10 (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* 
மதிள் குடந்தை என்பரே* ஏ வல்ல எந்தைக்கு இடம்|

நம்மாழ்வார்
005. திவ்ய ப்ரபந்தம் - 3255 - திருவாய்மொழி - 5.3.1
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக் குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே**
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 7 January 2024

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||020. திரு தஞ்சை மாமணி கோவில்||
||தஞ்சாவூர்||
||இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 5 பாசுரங்கள் 

001. பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 2251 - இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)

------------
002. நம்மாழ்வார் - 1 பாசுரம்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 3255 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்

------------
003. திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 953 - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1090 - இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1576 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் - 1 பாசுரம்

----------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்*
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்*
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்*
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று| 

  • நெஞ்சே – மனமே! 
  • ஓத – நான் சொல்வதை
  • கேள் – நீ கேட்பாயாக
  • கேட்டால் இது உனக்கும் நன்று – நான் சொல்லுகின்ற இவ்விஷயம் உனக்கும் நன்மையை உண்டாக்கும்
  • எனக்கும் மேதக்க நன்மை இனி வேறு இல்லை – எனக்கும் மிக்க நன்மையை உண்டாக்குவது இதனினும் வேறொன்று இல்லையாம். இவ்வாறு நம்மிருவர்க்கும் ஒருங்கே நன்மை பயக்கக்கூடிய உபாயம் யாதெனில்
  • பெருந் தஞ்சை மா மணியை போத பேணி – பெரிய திருத்தஞ்சையென்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளிய
  • சிறந்த மாணிக்கம் போன்ற கடவுளை நன்றாக விரும்பித் துதித்து
  • வடிவம் பொருந்து – அப்பெருமானது திருமேனியில் பொருந்திய
  • அஞ்சை – பஞ்சாயுதங்களையும்
  • மா – லஷ்மியையும்
  • மணியை – கௌஸ்துபரத்நத்தையும்
  • போற்று – வாழ்த்துவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 6 January 2024

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||020. திரு தஞ்சை மாமணி கோவில்||
||தஞ்சாவூர்||
||இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ நீல மேகப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ நீலமேக பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - நீல மேகம், மணிக்குன்றம், நரஸிம்ஹர், தஞ்சையாளி 
  • பெருமாள் உற்சவர் - வெண்ணாத்தங்கரை, நாராயணன் 
  • தாயார் மூலவர் - செங்கமலவல்லி, தஞ்சைநாயகி
  • தாயார் உற்சவர் - அம்புஜவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - வீற்றிருந்த
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கன்னிகா, சூரிய, அமிர்த, வெண்ணாறு, ஸ்ரீராம
  • விமானம் - சௌந்தர்ய, மணிக்கூட, வேதஸுந்தர
  • ஸ்தல விருக்ஷம் - மகிழம்
  • ப்ரத்யக்ஷம் - பராசரமுனி, மார்கண்டேயர்
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 5

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமணங் கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாஸாஸநம் செய்துள்ளார். வீர நரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக் காப்பு மட்டுமே செய்யப் படுகிறது.  நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்திய படியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் ஸ்வாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய் விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். ஆசிரமத்துக்கு அருகே ஒரு சுனையில் மட்டும் நன்னீர் இருந்தது. அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் மூவரும் அங்கு வந்து அத் தண்ணீரை பருகி விட்டு அங்குள்ள பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டு விடும் படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும் படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளி தேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப் படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப் பெற்ற அவன் மகா விஷ்ணுவிடம், "எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள் புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது. 

தஞ்சகனின் அழிவைக் கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். யாளியாகிய நரஸிம்ஹர் ரூபத்தில் கஜமுகனை அழித்ததால் தஞ்சையாளி என்றும், தண்டகாசுரனை இங்கே அழித்ததால் தண்டகாரணியம் ஆயிற்று. கருடன் பறந்து வந்து இந் நகரத்தை காப்பதாக சொல்லுவர்கள். இந்நகரத்திற்கு பராசர க்ஷேத்ரம், வம்புலாஞ் சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் என பலப் பெயர்கள் உண்டு மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள் புரிகிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்