About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 028 திருக்காழி சீராம விண்ணகரம். Show all posts
Showing posts with label 028 திருக்காழி சீராம விண்ணகரம். Show all posts

Sunday, 3 March 2024

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||028. திருக்காழி சீராம விண்ணகரம்||
||சீர்காழி||
||இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1178 - பெரிய திருமொழி - 3.4.1
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி* 
உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்*
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த* 
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி*
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்* 
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1179 - பெரிய திருமொழி - 3.4.2
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை* 
நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்*
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை* 
ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்*
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்* 
தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்*
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1180 - பெரிய திருமொழி - 3.4.3
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்* 
மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்* 
நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு*
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்* 
மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1181 - பெரிய திருமொழி - 3.4.4
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்* 
பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட* 
நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்*
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே* 
தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1182 - பெரிய திருமொழி - 3.4.5
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு* 
திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட* 
விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்*
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட* 
அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1183 - பெரிய திருமொழி - 3.4.6
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப்* 
படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த* 
விண்ணவர் கோன் தாள் அணைவீர் வெற்புப்போலும்*
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்* 
துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1184 - பெரிய திருமொழி - 3.4.7
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்* 
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்* 
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி*
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி* 
வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1185 - பெரிய திருமொழி - 3.4.8
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்* 
பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில்* 
மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ*
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ* 
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்*
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1186 - பெரிய திருமொழி - 3.4.9
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்* 
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்* 
கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித்*
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்* 
தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி*
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ்* 
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1187 - பெரிய திருமொழி - 3.4.10
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்* 
சீராம விண்ணகர் என் செங் கண் மாலை*
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்* 
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்*
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்* 
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 2 March 2024

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||028. திருக்காழி சீராம விண்ணகரம்||
||சீர்காழி||
||இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1178 - 1187 - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை*
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்*
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத*
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு|

  • செல்லும் தொறும் – உடலை விட்டு உயிர் போகின்ற இடங்களில் எல்லாம்
  • உயிர் பின் செல்லும் – அவ்வுயிரின் பின்னே விடாது தொடர்ந்து செல்லுகின்ற
  • இரு வினையை – நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளையும்
  • வெல்லும் – கடத்தற்குத் தக்க
  • உபாயம் – வழியை
  • விரும்புவீர் – இச்சிக்கின்றவர்களே! நீங்கள்
  • தொல் அரங்கர் சீராமவிண்ணகரம் சேர்மின் – பழைய திருவரங்கநாதனுடைய திருச்சீராம விண்ணகரம் என்னும் ஸ்தலத்தைப் போய்ச் சேருங்கள்
  • பின் – அவ்வாறு சேர்ந்த பிறகு
  • மீளாத ஊர் ஆம் அ விண்நகரம் – தன்னைச் சேர்ந்தவர் திரும்பிச் செல்லுதல் இல்லாத திருநகரமாகிய அந்தப் பரமபதம்
  • உண்டு – உங்களுக்குச் சித்திக்கும்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Thursday, 29 February 2024

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||028. திருக்காழி சீராம விண்ணகரம்||
||சீர்காழி||
||இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ திரிவிக்கிரமன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ லோக நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ திரிவிக்ரமன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - திரிவிக்ரம நாராயணன், திருவிக்ரம மூர்த்தி
  • பெருமாள் உற்சவர் - தாடாளன்
  • தாயார் மூலவர் - லோக நாயகி
  • தாயார் உற்சவர் - மட்டவிழுங்குழலி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் -  சங்கு, சக்கர  
  • விமானம் - புஷ்பகலா வர்த்தக
  • ஸ்தல விருக்ஷம் - பலா
  • ப்ரத்யக்ஷம் - அஷ்டகோண மஹரிஷி
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலக்கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து, இடக்கையில் குடை பிடித்து படி சாளக்கிராம மாலை அணிந்து காட்சி தருகிறார். ஸ்வாமியிடம் வேண்டிய செயல்கள் நிறைவேறிய பின் இவரிடம் நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள். இவருக்கு அருகிலேயே கையில் வேலுடன், காலில் தண்டை அணிந்த கோலத்தில் திருமங்கையாழ்வார் இருக்கிறார். உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு ஸ்வாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ராமர் சந்நதியும், கோயிலுக்கு எதிரே வெளிப் புறத்தில் ஆஞ்சநேயர் சந்நதியும் இருக்கிறது. இங்குள்ள தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு மிக அருகிலேயே திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பாலூட்டிய சட்டை நாதர் கோயில் இருக்கிறது.

கருவறையில் இடது காலை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு, வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையை மீதி ஒரு அடி எங்கே? எனக் கேட்டு ஒரு விரலை மட்டும் தூக்கிய படி திரிவிக்கிரமர் காட்சி தருகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும்.  சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் இவரது சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்த படியே இருக்கிறது. வலது பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை "தவிட்டுப் பானை தாடாளன்' என்றும் சொல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்."தாள்' என்றால் "பூமி அல்லது உலகம்', "ஆளன்' என்றால் "அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால், ஆண்டாள் இவருக்கு "தாடாளன்' என்ற பெயரை சூட்டினாள். ஸ்வாமியை குறித்து ஆண்டாள் தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியிலும் பாடி இருக்கிறாள். அருகில் குழந்தை தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணர் இருக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பெருமாள் தன் மார்பில் மகாலக்ஷ்மியை தாங்கிய படி இருப்பதைப் போல, இங்கு தாயார் லோக நாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டு இருப்பதால் ஸ்வாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலக்ஷ்மி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் ஸ்வாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் கணவர் மீது கூடுதல் அன்பு காட்டுவர், பிரிந்து இருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. உற்சவ தாயார், மூலவர் தாயாரை மறைத்தபடி இருப்பதால், இவளது திருமுகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். தன்னை தாங்கும் கணவனை தான் தாங்குவதை யாரும் பார்த்து விடாமல் இருக்க இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் இவ்வூரில் தான் பிறந்தார். அவர் இங்கேயே தங்கி இருந்து சிவத் தொண்டு செய்து வந்தார். இக்கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதிருந்த போது, உற்சவர் தாடாளனை ஒரு மூதாட்டி தன் வீட்டில் ஒரு தவிட்டுப் பானையில் மறைத்து வைத்து தினமும் பூஜைகள் செய்து ஸ்வாமியை வணங்கி வந்தாள். ஒரு சமயம் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருடன் வந்தவர்கள் திருமங்கையைப் போற்றிப் பாடிக் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சம்பந்தரின் சீடர்கள் அவர்களை அமைதியாகச் செல்லும்படி கூறினர். அவர்களோ மறுத்தனர். இருவருக்கும் இடையே வாதம் உண்டானது. இறுதியில் திருமங்கைக்கும், சம்பந்தருக்கும் மறு நாளில் வாத போட்டி வைப்பது என முடிவானது. எனவே, அன்றைய தினம் திருமங்கை சீர்காழியிலேயே தங்கினார்.  இரவில் திருமங்கையின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டியின் தவிட்டுப் பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும் படி சொன்னார். அதன்படி மூதாட்டியிடம் தாடாளனை திருமங்கை வாங்கிக் கொண்டார். மறுநாள் போட்டி ஆரம்பமானது. சம்பந்தர் திருமங்கையிடம், ஒரு குறள் சொல்லும்படி கூறினார். திருமங்கை, "குறள்' எனும் சொல்லையே முதலாவதாக தொடங்கி பெருமாளின் பத்து அவதாரங்களைப் பற்றி ஒன்று, இரண்டு என வரிசையாக பாடினார். திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை அவருக்கு பரிசாகக் கொடுத்து, காலில் தண்டையையும் அணிவித்தார். திருமங்கையாழ்வார் ஞான சம்பந்தரை வாதத்தில் வென்று நாலு கவிப் பெருமாள் என்ற விருதை பெற்ற ஸ்தலம். பின் திருமங்கை இக்கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். தாடாளனையும், தாயாரையும் பாடியதோடு ஸ்வாமி எழுந்தருள காரணமான உரோமசரையும் சேர்த்து தன் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாஸாஸநம் செய்தார்.

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்று இருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. ஸ்வாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், "என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்' என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப் பெற்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்