About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 013 திருவிண்ணகரம். Show all posts
Showing posts with label 013 திருவிண்ணகரம். Show all posts

Tuesday, 17 October 2023

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||013. திருவிண்ணகரம்|| 
||மார்க்கண்டேய க்ஷேத்ரம் – ஒப்பிலியப்பன் கோயில் - கும்பகோணம்||
||பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 2

திருமங்கையாழ்வார்
025. திவ்ய ப்ரபந்தம் - 1472 - பெரிய திருமொழி - 6.3.5
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* 
உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன்* 
பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்* 
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்*
செற்றாய் கொற்றவனே* திருவிண்ணகரானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1473 - பெரிய திருமொழி - 6.3.6
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* 
நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி* 
யாதும் மற்று ஓர் தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1474 - பெரிய திருமொழி - 6.3.7
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும் ஆறே* 
நீ பணியாது அடை* நின் திருமனத்து* 
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* 
மற்று ஓர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1475 - பெரிய திருமொழி - 6.3.8
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே* 
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* 
வான் உலகம் தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1476 - பெரிய திருமொழி - 6.3.9
சொல்லாய் திரு மார்வா * 
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை * 
வினைகள் நலியாமை நம்பு *
நம்பீ மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * 
உலகில் செல்லா நல் இசையாய்* திருவிண்ணகரானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1477 - பெரிய திருமொழி - 6.3.10
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானை* 
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1855 - பெரிய திருமொழி - 10.1.8
பத்தர் ஆவியைப்* பால் மதியை* 
அணித் தொத்தை* மாலிருஞ்சோலைத் தொழுது போய்* 
முத்தினை மணியை* மணி மாணிக்க வித்தினை* 
சென்று விண்ணகர்க் காண்டுமே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - திருநெடுந்தாண்டகம் - 3.9 (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை*
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை* 
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|

பேயாழ்வார்
033. திவ்ய ப்ரபந்தம் - 2342 - மூன்றாம் திருவந்தாதி - 7.1 (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்*
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்*
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை*
இளங் குமரன் தன் விண்ணகர்|

034. திவ்ய ப்ரபந்தம் - 2343 - மூன்றாம் திருவந்தாதி - 7.2 (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை*
மண்ணகத்த தென் குடந்தை* 
தேன் ஆர் திருவரங்கம் தென் கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமங்கையாழ்வார்
035. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.5 (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|

036. திவ்ய ப்ரபந்தம் - 2772 - பெரிய திருமடல் - 6.10 (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

நம்மாழ்வார் 
037. திவ்ய ப்ரபந்தம் - 3365 - திருவாய்மொழி - 6.3.1
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்* 
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்கு குடித்* திருவிண்ணகர்க் கண்டேனே|   

038. திவ்ய ப்ரபந்தம் - 3366 - திருவாய்மொழி - 6.3.2
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்* 
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல் சூழ்* திருவிண்ணகர் நல் நகரே|

039. திவ்ய ப்ரபந்தம் - 3367 - திருவாய்மொழி - 6.3.3
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள்* ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்* 
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால்* இல்லை யாவர்க்கும் புண்ணியமே|

040. திவ்ய ப்ரபந்தம் - 3368 - திருவாய்மொழி - 6.3.4
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டு கொள்மின்கள் கைதவமே?

041. திவ்ய ப்ரபந்தம் - 3369 - திருவாய்மொழி - 6.3.5
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்* 
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே| 

042. திவ்ய ப்ரபந்தம் - 3370 - திருவாய்மொழி - 6.3.6
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு* 
ஆய் பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய்* 
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே|

043. திவ்ய ப்ரபந்தம் - 3371 - திருவாய்மொழி - 6.3.7
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்*
விண்ணோர் சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே|

044. திவ்ய ப்ரபந்தம் - 3372 - திருவாய்மொழி - 6.3.8
வன் சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன் சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்* 
தென் சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என் சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே|

045. திவ்ய ப்ரபந்தம் - 3373 - திருவாய்மொழி - 6.3.9
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்* 
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே|

046. திவ்ய ப்ரபந்தம் - 3374 - திருவாய்மொழி - 6.3.10
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களை கண் இலம் காண்மின்களே|

047. திவ்ய ப்ரபந்தம் - 3375 - திருவாய்மொழி - 6.3.11
காண்மின்கள் உலகீர் என்று* கண் முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 15 October 2023

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||013. திருவிண்ணகரம்|| 
||மார்க்கண்டேய க்ஷேத்ரம் – ஒப்பிலியப்பன் கோயில் - கும்பகோணம்||
||பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 1

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1448 - பெரிய திருமொழி - 6.1.1
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* 
அடிமேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று* 
அங்கு அண்டமொடு அகல் இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே| 

002.  திவ்ய ப்ரபந்தம் - 1449 - பெரிய திருமொழி - 6.1.2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*
அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* 
பெண் அமுது உண்ட எம் பெருமானே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1450 - பெரிய திருமொழி - 6.1.3
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட*
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ* 
நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1451 - பெரிய திருமொழி - 6.1.4
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒரு கால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1452 - பெரிய திருமொழி - 6.1.5
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1453 - பெரிய திருமொழி - 6.1.6
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி*
முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச்* 
சீர் கெழு நான்மறை ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1454 - பெரிய திருமொழி - 6.1.7
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*
இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1455 - பெரிய திருமொழி - 6.1.8
காதல் செய்து இளையவர் கலவி தரும்* 
வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்*
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1456 - பெரிய திருமொழி - 6.1.9
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை*
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1457 - பெரிய திருமொழி - 6.1.10
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ் இவை* பாட வல்லார்*
வாமனன் அடி இணை* மருவுவரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1458 - பெரிய திருமொழி - 6.2.1
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்* 
ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி அறுத்தேன்*
ஆர்வச் செற்றம் அவை தம்மை* மனத்து அகற்றி வெறுத்தேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1459 - பெரிய திருமொழி - 6.2.2
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான் திரு மார்பா*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1460 - பெரிய திருமொழி - 6.2.3
மான் ஏய் நோக்கியர் தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே மா நிலமே* வந்து வந்து என் மனத்து இருந்த தேனே!* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1461 - பெரிய திருமொழி - 6.2.4
பிரிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது அறிந்தேன்* 
நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி எறிந்தேன்* 
ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து செறிந்தேன்* 
நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1462 - பெரிய திருமொழி - 6.2.5
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி முன் ஆண்டவரே*
மாண்டார் என்று வந்தார்* அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1463 - பெரிய திருமொழி - 6.2.6
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த மல்லா*
மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1464 - பெரிய திருமொழி - 6.2.7
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி* 
கூறா ஐவர் வந்து குமைக்கக்* குடி விட்டவரை*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1465 - பெரிய திருமொழி - 6.2.8
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர் போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்* 
மூவா வானவர் தம் முதல்வா* மதி கோள் விடுத்த தேவா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1466 - பெரிய திருமொழி - 6.2.9
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர் தம் கோதா* 
கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த தூதா*
தூ மொழியாய் சுடர் போல்* என் மனத்து இருந்த வேதா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1467 - பெரிய திருமொழி - 6.2.10
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர் கோன் மருவார்* 
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர் தம்* கொடி மா நகர் கூடுவரே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1468 - பெரிய திருமொழி - 6.3.1
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* 
நின் உருவம் மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது*
யான் உலகில் பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* 
நின் திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1469 - பெரிய திருமொழி - 6.3.2
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே* 
அறம் தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1470 - பெரிய திருமொழி - 6.3.3
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்* 
கோனே குறுங்குடியுள் குழகா* திருநறையூர்த் தேனே* 
வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1471 - பெரிய திருமொழி - 6.3.4
சாந்து ஏந்து மென் முலையார்* 
தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன்* 
அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்* 
போந்தேன் புண்ணியனே* உன்னை எய்தி என் தீவினைகள் தீர்ந்தேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Saturday, 14 October 2023

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||013. திருவிண்ணகரம்|| 
||மார்க்கண்டேய க்ஷேத்ரம் – ஒப்பிலியப்பன் கோயில் - கும்பகோணம்||
||பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 47 பாசுரங்கள்

001. பேயாழ்வார் - 2 பாசுரங்கள் 
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2342, 2343 - ஏழாம் திருமொழி - 1, 2 (61, 62)

----------
002. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள் 
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 3249 - 3259 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி

----------
003. திருமங்கையாழ்வார் - 34 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 31 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 1448 - 1457 - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1458 - 1467 - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1468 - 1477 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்            
  • திவ்ய ப்ரபந்தம் - 1855 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2080 - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60) 
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை*
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா*
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்*
பெரு விண்ணகர் ஆளும் பேறு|

  • ஐயா - தலைவனே!
  • திருவிண்ணகர் ஆளா - திருவிண்ணகரம் என்னும் திருப்பதிக்குத் தலைவனே!
  • கையும் - எனது கைகளும்
  • உரையும் - வாக்கும்
  • கருத்தும் - எண்ணமும் ஆகிய திரிகரணங்களையும் 
  • உனக்கே அடிமை செய்யும் படி - உன்னையே நினைத்து சரண் அடையும் படி
  • நீ திருத்தினாய் - நீ திருத்தமான வழியில் போகச் செய்தாய். ஆதலால் இனிமேல் 
  • பெரு விண் நகர் ஆளும் பேறு - பெருமை பெற்ற தேவலோகத்தை அரசாளும் செல்வத்தையும் தேவேந்திர பதவியையும்
  • சிந்தையிலும் எண்ணேன் - ஒரு பொருட்டாக மனத்திலும் நினைக்க மாட்டேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Thursday, 12 October 2023

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||013. திருவிண்ணகரம்|| 
||மார்க்கண்டேய க்ஷேத்ரம் – ஒப்பிலியப்பன் கோயில் - கும்பகோணம்||
||பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பூமிதேவி தாயார் ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன்
  • பெருமாள் உற்சவர் - திருவிண்ணகரப்பன், பொன்னப்பன்
  • தாயார் மூலவர் - பூமி தேவி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - அஹோராத்ர
  • விமானம் - விஷ்ணு, சுத்தானந்த
  • ஸ்தல விருக்ஷம் - வன்னி
  • ப்ரத்யக்ஷம் - மார்கண்டேயர், கருடன், காவேரி, தர்ம தேவதை
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 47

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நக்ஷத்ரம் அன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப் படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதய கருட சேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன் பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு ஸ்வாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள் வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

இத்தலத்தில் ஸ்வாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களா ஸாஸநம் செய்துள்ளார். அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் ஸ்வாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம். இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப் படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப் பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், ஸ்வாமிக்கு வலது புறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்த போது ஒரு போதும் தன் மகளை விட்டு பிரியக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், "எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், "நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச் செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞான திருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், "சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரி வராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக் கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசி மாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்