About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 027 திருக்காவளம்பாடி. Show all posts
Showing posts with label 027 திருக்காவளம்பாடி. Show all posts

Tuesday, 27 February 2024

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||027. திருக்காவளம்பாடி||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1298 - பெரிய திருமொழி - 4.6.1
தா அளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நா வளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கை*
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1299 - பெரிய திருமொழி - 4.6.2
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்* 
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்* 
துண் என மாற்றார் தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய* 
கண்ணனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1300 - பெரிய திருமொழி - 4.6.3
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி* 
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்* 
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கை* 
கருத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1301 - பெரிய திருமொழி - 4.6.4
முனை முகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* 
ஆங்கு அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே* 
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கை* 
கனை கழல் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1302 - பெரிய திருமொழி - 4.6.5
பட அரவு உச்சி தன் மேல்* பாய்ந்து பல் நடங்கள் செய்து* 
மடவரல் மங்கை தன்னை* மார்வகத்து இருத்தினானே* 
தட வரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய* 
கடவுளே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1303 - பெரிய திருமொழி - 4.6.6
மல்லரை அட்டு மாளக்* கஞ்சனை மலைந்து கொன்று* 
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்* 
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய* 
கல் அரண் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1304 - பெரிய திருமொழி - 4.6.7
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி* 
மாத்து அமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்* 
பூத்து அமர் சோலை ஓங்கிப்* புனல் பரந்து ஒழுகும் நாங்கை* 
காத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1305 - பெரிய திருமொழி - 4.6.8
ஏவு இளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று* 
கா வளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்* 
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கை* 
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1306 - பெரிய திருமொழி - 4.6.9
சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்* சமய ஐம் பூதம் ஆகி* 
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்* 
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கை* 
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1307 - பெரிய திருமொழி - 4.6.10
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனைக் கலியன் சொன்ன* 
பா வளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்* 
கோ இள மன்னர் தாழக்* குடை நிழல் பொலிவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 23 February 2024

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||027. திருக்காவளம்பாடி||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1298 - 1307 - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை*
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்*
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது*
நா வளம் பாடித் திரிவேன் நான்|

  • எப்போதும் – நான் எக்காலத்திலும் 
  • என் நெஞ் சொல் தமிழ் மாலை – இன்சொற்கள் நிறைந்த எனது தமிழ்ப் பாமாலையை
  • மனிதருக்கு – மனிதரைப் பற்றி
  • செப்பேன் – ஒரு போதும் பாட மாட்டேன்
  • பிற தெய்வம் காண்பாரை – தேவதாந்தரங்களைத் தரிசிக்கின்ற அவைஷ்ணவரை
  • கைப்பேன் – வெறுப்பேன்
  • காவளம்பாடி திருமால் – திருக்காவளம்பாடி என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள திருமாலினது
  • கால் தாமரை – திருவடித் தாமரைகளை
  • தொழுது – வணங்கி
  • நா – எனது நாவினால்
  • வளம் பாடி – வளமாகக் கவி பாடிக் கொண்டு 
  • திரிவேன் – யாதொரு கவலையுமின்றி இனிது காலம் கழிப்பேன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Sunday, 18 February 2024

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||027. திருக்காவளம்பாடி||
||திருநாங்கூர்||
||இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ மடவரல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோபால கிருஷ்ணன்
  • பெருமாள் உற்சவர் - ராஜ கோபாலன்
  • தாயார் மூலவர் - மடவரல் மங்கை
  • தாயார் உற்சவர் - செங்கமல நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற - பாமா ருக்மணியுடன்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - தடமலர்ப் பொய்கை
  • விமானம் - ஸ்வயம்பு, வேதா மோத
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை
  • ப்ரத்யக்ஷம் - சேனைத் தலைவர், மித்ர தேவர், ருத்ரன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கிருஷ்ண பரமாத்மா சத்ய பாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு, அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்யபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை.

கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்யபாமாவுக்காக பாரிஜாத மலர்ச் செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.

இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.

கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி உள்ளார்.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக் கோவிலில் எழுந்து அருள்வார்கள். இவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காக திருமங்கை ஆழ்வார் இங்கு எழுந்து அருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச் சுற்றி உள்ள வயல் வெளிகளில் உள்ள நெற் பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கை ஆழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாஸாஸநம் செய்த பிறகு, திருமங்கை ஆழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாஸாஸநம் செய்வார். இந்த கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

சிவனுக்கும், சேனைத் தலைவர் விஷ்வக் சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்