About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 004 திருவெள்ளறை. Show all posts
Showing posts with label 004 திருவெள்ளறை. Show all posts

Friday, 25 August 2023

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||004. திருவெள்ளறை||
||ஸ்வேதகிரி – திருச்சி||
||நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 24

பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 71 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.8
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி* 
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்* 
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர* 
கற்றவர் தெற்றி வர பெற்ற எனக்கு அருளி* 
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்* 
சோலை மலைக்கு அரசே! கண்ணபுரத்தமுதே!* 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை|

002. திவ்ய ப்ரபந்தம் - 192 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.1
இந்திரனோடு பிரமன்* ஈசன் இமையவர் எல்லாம்* 
மந்திர மா மலர் கொண்டு* மறைந்து உவராய் வந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும்* சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
அந்தியம் போது இது ஆகும்* அழகனே! காப்பிட வாராய்| (2)

003. திவ்ய ப்ரபந்தம் - 193 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.2
கன்றுகள் இல்லம் புகுந்து* கதறுகின்ற பசு எல்லாம்*
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி* நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப் போது* மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
நன்று கண்டாய் என்தன் சொல்லு* நான் உன்னைக் காப்பிட வாராய்| (2)

004. திவ்ய ப்ரபந்தம் - 194 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.3
செப்பு ஓது மென்முலையார்கள்* சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
அப்போது நான் உரப்பப் போய்* அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 
முப் போதும் வானவர் ஏத்தும்* முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
இப்போது நான் ஒன்றும் செய்யேன்* எம்பிரான் காப்பிட வாராய்| (2)

005. திவ்ய ப்ரபந்தம் - 195 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.4
கண்ணில் மணல் கொடு தூவிக்* காலினால் பாய்ந்தனை என்று என்று* 
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* இவர் ஆர்? முறைப்படுகின்றார்* 
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!* கண்டாரொடே தீமை செய்வாய்! 
வண்ணமே வேலையது ஒப்பாய்!* வள்ளலே! காப்பிட வாராய்| (2)

006. திவ்ய ப்ரபந்தம் - 196 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.5
பல்லாயிரவர் இவ் ஊரில்* பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது* எம்பிரான்! நீ இங்கே வாராய்* 
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!* ஞானச் சுடரே! உன்மேனி*
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்* சொப்படக் காப்பிட வாராய்| (2)

007. திவ்ய ப்ரபந்தம் - 197 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.6
கஞ்சன் கறுக் கொண்டு நின்மேல்* கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
வஞ்சிப்பதற்கு விடுத்தான்* என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 
மஞ்சு தவழ் மணி மாட* மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
அஞ்சுவன் நீ அங்கு நிற்க* அழகனே! காப்பிட வாராய்| (2)

008. திவ்ய ப்ரபந்தம் - 198 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.7
கள்ளச் சகடும் மருதும்* கலக்கு அழிய உதை செய்த* 
பிள்ளையரசே!* நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 
உள்ளவாறு ஒன்றும் அறியேன்* ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளி கொள் போது இது ஆகும்* பரமனே! காப்பிட வாராய்| (2)

009. திவ்ய ப்ரபந்தம் - 199 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.8
இன்பம் அதனை உயர்த்தாய்!* இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
கும்பக் களிறு அட்ட கோவே!* கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 
செம்பொன் மதில் வெள்ளறையாய்!* செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
கம்பக் கபாலி காண் அங்கு* கடிது ஓடிக் காப்பிட வாராய்| (2)

010. திவ்ய ப்ரபந்தம் - 200 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.9
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு* எழில் மறையோர் வந்து நின்றார்* 
தருக்கேல் நம்பி! சந்தி நின்று* தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த* தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
உருக் காட்டும் அந்தி விளக்கு* இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்| (2)

011. திவ்ய ப்ரபந்தம் - 201 - பெரியாழ்வார் திருமொழி - 2.8.10
போது அமர் செல்வக் கொழுந்து* புணர் திருவெள்ளறையானை* 
மாதர்க்கு உயர்ந்த அசோதை* மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 
வேதப் பயன் கொள்ள வல்ல* விட்டுசித்தன் சொன்ன மாலை* 
பாதப் பயன் கொள்ள வல்ல* பத்தர் உள்ளார் வினை போமே| (2)

திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1368 - பெரிய திருமொழி - 5.3.1
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை* 
மூவெழுகால் கொன்ற தேவ!* 
நின் குரை கழல் தொழுவது ஓர் வகை* எனக்கு அருள்புரியே* 
மன்றில் மாம் பொழில் நுழை தந்து* மல்லிகை மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திரு வெள்ளறை நின்றானே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1369 - பெரிய திருமொழி - 5.3.2
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி* முன் பரி முகமாய்* 
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய* மாருதம் வீதியின் வாய்*
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1370 - பெரிய திருமொழி - 5.3.3
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்* உடலகம் இரு பிளவாக்*
கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே*
மையின் ஆர்தரு வரால் இனம் பாய* வண் தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திரு வெள்ளறை நின்றானே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1371 - பெரிய திருமொழி - 5.3.4
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக* ஐவர்கட்கு அரசு அளித்த*
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!* நின் காதலை அருள் எனக்கு*
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்* வாய்-அது துவர்ப்பு எய்த*
தீம் பலங்கனித் தேன் அது நுகர்* திரு வெள்ளறை நின்றானே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1372 - பெரிய திருமொழி - 5.3.5
மான வேல் ஒண் கண் மடவரல்* மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்*
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!* எனக்கு அருள்புரியே*
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி* வெண் முறுவல் செய்து அலர்கின்ற*
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்* திருவெள்ளறை நின்றானே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1373 - பெரிய திருமொழி - 5.3.6
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ* அமுதினைக் கொடுத்தளிப்பான்*
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!* நின் அடிமையை அருள் எனக்கு*
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்* தையலார் குழல் அணைவான்*
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை* திரு வெள்ளறை நின்றானே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1374 - பெரிய திருமொழி - 5.3.7
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி* அரக்கன் தன் சிரம் எல்லாம்*
வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!* எனக்கு அருள்புரியே*
மாறு இல் சோதிய மரதகப் பாசடைத்* தாமரை மலர் வார்ந்த*
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1375 - பெரிய திருமொழி - 5.3.8
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி* இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த*
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
மன்னு கேதகை சூதகம் என்று இவை* வனத்திடைச் சுரும்பு இனங்கள்*
தென்ன என்ன வண்டு இன் இசை முரல்* திரு வெள்ளறை நின்றானே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1376 - பெரிய திருமொழி - 5.3.9
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம! நின் பணிந்து எழுவேன்* எனக்கு அருள்புரியே* 
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு உழிதர* 
மா ஏறித் தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திரு வெள்ளறை நின்றானே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1377 - பெரிய திருமொழி - 5.3.10
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்* திரு வெள்ளறை அதன் மேய*
அஞ்சனம் புரையும் திரு உருவனை* ஆதியை அமுதத்தை*
நஞ்சு உலாவிய வேல் வலவன்* கலி கன்றி சொல் ஐஇரண்டும்*
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்* இமையோர்க்கு அரசு ஆவர்களே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1851 - பெரிய திருமொழி - 10.1.4
துளக்கம் இல் சுடரை* அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப் போய்*
அளப்பு இல் ஆர் அமுதை* அமரர்க்கு அருள்
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே|

023. திவ்ய ப்ரபந்தம் - 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே* 
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

024. திவ்ய ப்ரபந்தம் - 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||004. திருவெள்ளறை||
||ஸ்வேதகிரி – திருச்சி||
||நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 24 பாசுரங்கள்

001. பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 71 – முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 192 - 201 - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்

------------
002. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1368 - 1377 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1851 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1  பாசுரம்                                                                         
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் - (71)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கல் இருந்தான் தந்தை கமலத்தோன்* 
அக்கமலத்தில் இருந்தான் தந்தை அரங்கேசன்* 
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால்* 
உள்ளமே கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு|

  • உள்ளமே - எனது மனமே! 
  • கல் இருந்தான் தந்தை - கைலாச மலையில் இருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை
  • கமலத்தோன் - திருமாலினது நாபித் தாமரையில் தோன்றியவனாகிய பிரம்மனாவன்
  • அக் கமலத்தில் இருந்தான் தந்தை - அந்தத் தாமரை மலரில் வாழ்பவனாகிய பிரம்மனது திருத்தந்தை
  • அரங்கேசன் - திருவரங்கநாதனாவன் என்று 
  • தொல்லை மறையுள் அறையா நின்றமையால் - பழமையாகிய வேதங்களில் சொல்வதனால்
  • கள்ளம் இன்றி - கபடம் இல்லாமல்,
  • வெள்ளறையான் தாளே - திருவெள்ளறை என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே
  • விரும்பு - விரும்பிச் சேர்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 16 August 2023

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||004. திருவெள்ளறை||
||ஸ்வேதகிரி – திருச்சி||
||நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பங்கயச்செல்வி தாயார் ஸமேத ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்புண்டரீகாஷன், செந்தாமரைக் கண்ணன்
  • பெருமாள் உற்சவர் - பங்கயச் செல்வன்
  • தாயார் மூலவர் - ஷெண்பகவல்லி
  • தாயார் உற்சவர் - பங்கயச் செல்வி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - திவ்ய கந்த, கஷீர, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணி கர்ணிகா  
  • விமானம் - விமலாக்ருதி
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம்
  • ப்ரத்யக்ஷம் - கருடன் (பெரிய திருவடி), சிபி, பூதேவி, மார்கண்டேயன், லக்ஷ்மீ, ப்ருஹ்ம ருத்ராதிகள் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 2 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 24

---------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உய்யக்கொண்டார், எங்களாழ்வான் அவதார ஸ்தலம். கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ப்ரகாரத்தில் தென் பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் "வெள்ளறை' என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக "திருவெள்ளறை' ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள்' ஆனார். கருவறையில் பெருமாளின் மேல் புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் சாமரம் வீசுகின்றனர். பெருமாளின் இரு பக்கமும் கருடனும் ஆதிசேஷனும் மனித வடிவில் நின்ற படி இருக்கின்றனர். ஏழு மூலவர்களைக் கொண்ட கோவில். ஸ்வஸ்திக் வடிவில் அமைந்த தீர்த்தம்.

இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலி பீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்ச பூதங்களை குறிக்கிறது. பிறகு ஸ்வாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலி பீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொண்டு, நிறைவேறிய பின் "பலி பீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ர பாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், "லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, "தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், ‘உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும் போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென் பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படை வீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். 

அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், "நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சா ரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடை பெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவே இல்லை. அதற்கு மார்க்கண்டேயர், "உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப் பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக் கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூல ஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்தக் கோயிலில் தாயாருக்கே முதல் மரியாதை. மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு. பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளுவார்கள். பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட முற்றுப் பெறாத குடவரை. இது மார்க்கண்டேயர் தவம் செய்த குகை எனவும் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்