About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 010 திருப்புள்ளம் பூதங்குடி. Show all posts
Showing posts with label 010 திருப்புள்ளம் பூதங்குடி. Show all posts

Friday, 22 September 2023

108 திவ்ய தேசங்கள் - 010 - திருப்புள்ளம் பூதங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||010. திருப்புள்ளம் பூதங்குடி|| 
||பூத புரி - கும்பகோணம்||
||பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1348 -1357 - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி  

-------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்*
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்*
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்*
புள்ளம் பூதங்குடியில் போம்|

  • பெரும் பொறி கொள் - வலிய ஐம்பொறிகளைக் கொண்டதும்
  • கள்ளம் பூதம் குடி கொள் - வஞ்சனைக் குணமும் பஞ்ச பூதங்களும் பொருந்தப் பெற்றதுமான
  • காயம் - சரீரத்தை
  • உடையீர் - உடையவரான ஜநங்களே! நீங்கள்
  • அடிகள் புள்ளம்பூதங்குடியில் போம் - எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருப்புள்ளம் பூதங்குடி என்னும் ஸ்தலத்தில் போய்ச் சேருங்கள்
  • சேர்ந்த மாத்திரத்தில் - விரும்பினவை எய்தும் - நீங்கள் விரும்பியவை எல்லாம் கைகூடும்
  • வினை அனைத்தும் தீரும் - உங்களது எல்லா வினைகளும் நீங்கும்
  • அரும் பரம வீடும் அடைவீர் - பெறுதற்கு அரிய சிறந்த முத்தி உலகத்தையும் சேர்வீர்கள்
-------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1348 - பெரிய திருமொழி - 5.1.1
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்* 
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* 
புள்ளம் பூதங்குடி தானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1349 - பெரிய திருமொழி - 5.1.2
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகளப்* பழனக் கழனி அதனுள் போய்*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம் பூதங்குடி தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1350 - பெரிய திருமொழி - 5.1.3
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மா வாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்* 
கா ஆர் தெங்கின் பழம் வீழக்* கயல்கள் பாயக் குருகு இரியும்*
பூ ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1351 - பெரிய திருமொழி - 5.1.4
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசை செய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1352 - பெரிய திருமொழி - 5.1.5
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய் ஆர் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய் ஆர் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம் பூதங்குடி தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1353 - பெரிய திருமொழி - 5.1.6
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்* 
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம் பூதங்குடி தானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1354 - பெரிய திருமொழி - 5.1.7
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்* 
குடியா வண்டு கள் உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1355 - பெரிய திருமொழி - 5.1.8
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்* 
மறையால் முத்தீ அவை வளர்க்கும்* மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம் பூதங்குடி தானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1356 - பெரிய திருமொழி - 5.1.9
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்* 
மின்னு சோதி நவ மணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம் பூதங்குடி தானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1357 - பெரிய திருமொழி - 5.1.10
கற்றா மறித்து காளியன் தன்* சென்னி நடுங்க நடம் பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம் பூதங்குடி தன் மேல்* 
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*
சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச்* சோர நில்லா துயர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 17 September 2023

108 திவ்ய தேசங்கள் - 010 - திருப்புள்ளம் பூதங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||010. திருப்புள்ளம் பூதங்குடி|| 
||பூத புரி - கும்பகோணம்||
||பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பொற்றாமறையாள் தாயார் ஸமேத ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - வல்வில் ராமர்
  • பெருமாள் உற்சவர் - சக்கரவர்த்தி திருமகன்
  • தாயார் மூலவர் - பொற்றாமறையாள்
  • தாயார் உற்சவர் - ஹேமாம்புஜவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - ஜடாயு 
  • விமானம் - சோபன
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை
  • ப்ரத்யக்ஷம் - ராமன், ஜடாயு
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமர் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ளம்  பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராதயத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளம் பூதங்குடி. இதை ஆசாரியர்கள் சிறப்பித்தார்கள். ராமர் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமர் காட்சியளித்தார். இதைக் கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமர் வல்வில் ராமர் என அழைக்கப்படுகிறார். 

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறி விட்டு உயிர் துறந்தார். இதைக் கண்டு வருந்திய ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமருக்கு உதவி புரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்