About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 011 திரு ஆதனூர். Show all posts
Showing posts with label 011 திரு ஆதனூர். Show all posts

Tuesday, 26 September 2023

108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||011. திரு ஆதனூர்||
||கும்பகோணம்|| 
||பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

001. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 2781 - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி 
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்*
மடவார் மயக்கின் மயங்கார்* 
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்* 
நான் எனது என்னார் அமலன்*
ஆதனூர் எந்தை அடியார்|

  • அமலன் – குற்றமற்றவனும்
  • ஆதனூர் எந்தை – திருஆதனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமாகிய எம்பெருமானது
  • அடியார் – பக்தர்கள்
  • இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – பலவகைத் துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்து இருக்குமாறு முயற்சி செய்ய மாட்டார்கள்
  • மடவார் மயக்கில் மயங்கார் –இள மகளிரது மோக வலையிற் சிக்கித்து இயங்க மாட்டார்கள்
  • கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் சுவர்க்க லோக இன்பத்தையும் விரும்ப மாட்டார்கள்
  • நான் எனது என்னார் – அகங்கார மமகாரச் சொற்களையும் சொல்ல மாட்டார்கள்

------------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரம் - 1

திருமங்கையாழ்வார் 
001. திவ்ய ப்ரபந்தம் – 2781 - பெரிய திருமடல் - 7.9 (69)
மூழிக்களத்து விளக்கினை*
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை*
நென்னலை இன்றினை நாளையை* 
நீர் மலை மேல் முன்னவனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Friday, 22 September 2023

108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||011. திரு ஆதனூர்||
||கும்பகோணம்|| 
||பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - ஆண்டளக்கும் ஐயன்
  • பெருமாள் உற்சவர் - ஸ்ரீ ரங்கநாதர் 
  • தாயார் மூலவர் - ரங்கநாயகி
  • தாயார் உற்சவர் - பார்க்கவி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சூர்ய, சந்திர  
  • விமானம் - ப்ரணவ
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை, பாடலி
  • ப்ரத்யக்ஷம் - காமதேனு, திருமங்கையாழ்வார்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்த போது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பண உதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கை ஆழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப் பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கை ஆழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி "இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக் கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கை ஆழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார். திருமங்கை ஆழ்வாரும் சரியென ஒப்புக் கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம் கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கை ஆழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கை ஆழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக் கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளி கொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக் கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னி பகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக் கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கை ஆழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும் போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் ஸ்வாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக் கொண்டு ஸ்வாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்ய தேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த போது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக் கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும் போது சாபம் நீங்கப் பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்