About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 016 திருக்கண்ணமங்கை. Show all posts
Showing posts with label 016 திருக்கண்ணமங்கை. Show all posts

Monday, 20 November 2023

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||016. திருக்கண்ணமங்கை|| 
||க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 14

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1638 - பெரிய திருமொழி - 7.10.1
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப்* பெண்ணை ஆணை* 
எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப்*
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை* 
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை* 
அமுதம் பொதி இன் சுவை* கரும்பினை கனியை சென்று நாடிக்*
 கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1639 - பெரிய திருமொழி - 7.10.2
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை*
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை மாலை* 
ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை* 
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1640 - பெரிய திருமொழி - 7.10.3
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை*
வாச வார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை* 
பங்கில் வைத்து உகந்தான்* தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வட மா மலை உச்சியை* 
நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை* 
பகலை சென்று நாடிக்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1641 - பெரிய திருமொழி - 7.10.4
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்*
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை* 
அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை* 
இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியைச் சென்று நாடிக்* 
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1642 - பெரிய திருமொழி - 7.10.5
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* 
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை*
குரு மா மணிக் குன்றினை* நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்* 
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1643 - பெரிய திருமொழி - 7.10.6
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச்*
சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை* 
திருமங்கை மணாளனைத்* தேவனைத் திகழும் பவளத்து ஒளி ஒப்பனை*
உலகு ஏழினை ஊழியை* ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை* 
கழுநீர் மலரும் வயல்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1644 - பெரிய திருமொழி - 7.10.7
திருத்தனை திசை நான்முகன் தந்தையைத்*
தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை* 
விளங்கும் சுடர்ச் சோதியை* 
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*
அரியைப் பரி கீறிய அப்பனை* அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை* 
களி வண்டு அறையும் பொழில்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1645 - பெரிய திருமொழி - 7.10.8
வெம் சினக் களிற்றை விளங்காய் வீழக்* கன்று வீசிய ஈசனை* 
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத்*
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை* 
அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1646 - பெரிய திருமொழி - 7.10.9
பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை* 
விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின் ஒளி தன்னை* 
மண்ணினை மலையை அலை நீரினை*
மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினை* 
கண்கள் ஆரளவும் நின்று* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1647 - பெரிய திருமொழி - 7.10.10
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* 
காதலால் கலிகன்றி உரை செய்த*
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை*
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்*
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண* 
நின் தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம்* கவியின் பொருள் தானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1848 - பெரிய திருமொழி - 10.1.1
ஒரு நல் சுற்றம்* எனக்கு உயிர் ஒண் பொருள்*
வரும் நல் தொல் கதி* ஆகிய மைந்தனை*
நெரு நல் கண்டது* நீர்மலை இன்று போய்*
கரு நெல் சூழ்* கண்ணமங்கையுள் காண்டுமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 2008 - பெரிய திருமொழி - 11.6.7
மண் நாடும் விண் நாடும்* வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்*
உண்ணாத பெரு வெள்ளம்* உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட*
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல் சூடி அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே|

013. திவ்ய ப்ரபந்தம் - 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* 
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| 

014. திவ்ய ப்ரபந்தம் - 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Sunday, 19 November 2023

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||016. திருக்கண்ணமங்கை|| 
||க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 14 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 14 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) -12 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1638 - 1647 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1848 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2008 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)

----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா*
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்*
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்*
கண்ணமங்கை ஊர் என்று காண்|

  • நெஞ்சே - மனமே! 
  • கருத்தினால் - மனத்தினாலும்
  • வாக்கினால் - வாக்கினாலும்
  • நால் மறையும் - நான்கு வேதங்களும்
  • காணா - கண்ட றிய முடியாத
  • ஒருத்தனை - ஒப்பற்ற திருமாலை
  • நீ உணரின் - நீ அறிய விரும்பினால், அவனுக்கு
  • வண்ணம் - திருமேனி நிறம்
  • பெருத்த முகில் - பெரிய காளமேகமாம்
  • அம் கை - அழகிய திருக்கைகளும்
  • கண் - திருக்கண்களும்
  • கால் - திருவடிகளும்
  • வனசம் - செந்தாமரை மலர்களாம்
  • ஊர் - இருப்பிடம்
  • திருவரங்கம் - ஸ்ரீரங்கமும்
  • கண்ணமங்கை - திருக்கண்ணமங்கையுமாம் என்று 
  • காண் - அறிவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 18 November 2023

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
  ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

||016. திருக்கண்ணமங்கை|| 
||லக்ஷ்மி வனம் - க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ பக்த வத்சல பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்பக்த வத்சலம், பத்தராவி
  • பெருமாள் உற்சவர் - பெரும் புறக்கடல்
  • தாயார் மூலவர் - அபிஷேகவல்லி
  • தாயார் உற்சவர் - கண்ணமங்கை நாயகி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - தர்ஷன
  • விமானம் - உத்பல
  • ஸ்தல விருக்ஷம் - மகிழ மரம்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ப்ரத்யக்ஷம் - வருணன், ரோமச முனி
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 14 

----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால், ‘ஸப்த புண்ய க்ஷேத்ரம்', ‘ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால் - திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன) புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ண மங்கை ஆண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேத பாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்து விட்டது.

பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க் காவலரான விஷ்வக் சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும் புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் 'கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்