About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 003 திருக்கரம்பனூர். Show all posts
Showing posts with label 003 திருக்கரம்பனூர். Show all posts

Wednesday, 16 August 2023

108 திவ்ய தேசங்கள் - 003 - திருக்கரம்பனூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||003. திருக்கரம்பனூர்||
||உத்தமர் கோயில், கதம்ப க்ஷேத்ரம் – திருச்சி||
||மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்|| 

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

001. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1399 - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

---------- 
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்*
பலமா நதியில் படிந்தும் உலகில்*
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே*
கரம்பனூர் உத்தமன் பேர் கல்|

  • நெஞ்சே - எனது மனமே! 
  • உலகில் - இவ்வுலகத்தில்
  • சில மாதவம் செய்தும் - சில பெரும் தவங்களைச் செய்தும்
  • தீ வேள்வி வேட்டும் - ஓமாக்கினியை உடைய யாகத்தைச் செய்தும்
  • பல மா நதியில் படிந்தும் - பல சிறந்த நதிகளில் மூழ்கியும்
  • பரம்ப நூல் கற்றும் - விரிவாக நூல்களைப் படித்தும்
  • பயன் இல்லை - அவற்றால் யாதொருபயனும் உண்டாகாது. ஆதலால் அவ்வாறெல்லாம் செய்வதை விட்டுத் தவறாமற் பயன் பெறும் படியாக
  • கரம்பனூர் உத்தமன் பேர் கல் - திருக்கரம்பனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள புருஷோத்தமனது திருநாமத்தைப் பல தரம் கூறுவாயாக
----------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1399 - பெரிய திருமொழி - 5.6.2
பேரானைக்* குறுங்குடி எம் பெருமானை* 
திருத்தண்கால் ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும்* 
மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்*
ஆராது என்று இருந்தானைக்* கண்டது தென் அரங்கத்தே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 003 - திருக்கரம்பனூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||003. திருக்கரம்பனூர்||
||உத்தமர் கோயில், கதம்ப க்ஷேத்ரம் – திருச்சி||
||மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்|| 

||ஸ்ரீ உத்தமர் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பூர்வாதேவி தாயார் ஸமேத ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்புருஷோத்தமன்
  • தாயார் மூலவர் - பூர்வா தேவி
  • தாயார் உற்சவர் - பூர்ணவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - புஜங்க யனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கதம்ப
  • விமானம் - உத்யோக
  • ஸ்தல விருக்ஷம் - கதலீ மரம் (வாழை)
  • ப்ரத்யக்ஷம் - கதம்ப மஹரிஷி, உபரிஸரவஸு, ஸநக ஸநந்தன ஸநத் குமாரர்கள், திருமங்கையாழ்வார்                           
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 1

---------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோயில்' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்' என்றும் "கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை "உத்தமர் கோயில்' என்று மங்களாஸாஸநம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

 படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, "நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்' என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் ன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனி ன்னதியில் தெற்கு நோக்கிய படி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச் சுவடி, ஜெப மாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப் பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 

விஷ்ணு கிழக்கு பார்த்த படி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனி ஸன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக் கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனி ஸன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக் கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி ஸன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவ குரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுர குரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின் போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்த குரு தலம்' எனப்படுகிறது.

சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக் கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்