About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 030 திரு வண்புருஷோத்தமம். Show all posts
Showing posts with label 030 திரு வண்புருஷோத்தமம். Show all posts

Sunday, 17 March 2024

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||030. திரு வண்புருஷோத்தமம்||
||திருநாங்கூர்||
||முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1258 - பெரிய திருமொழி - 4.2.1
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்* 
கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து* 
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறை கோயில்*
செம் பலா நிரை செண்பகம் மாதவி* சூதகம் வாழைகள் சூழ்*
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1259 - பெரிய திருமொழி - 4.2.2
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக் காளியன் பணவு அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த* உம்பர் கோன் உறை கோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறு அங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1260 - பெரிய திருமொழி - 4.2.3
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று* 
அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
கோ நிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1261 - பெரிய திருமொழி - 4.2.4
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1262 - பெரிய திருமொழி - 4.2.5
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட* வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1263 - பெரிய திருமொழி - 4.2.6
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட* மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1264 - பெரிய திருமொழி - 4.2.7
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும்* வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு* 
எழில் கொள் பந்து அடிப்போர்* 
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1265 - பெரிய திருமொழி - 4.2.8
வாளை ஆர் தடங் கண் உமை பங்கன்* வன் சாபம் மற்று அது நீங்க*
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த* எம் முகில் வண்ணன் உறை கோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண் பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1266 - பெரிய திருமொழி - 4.2.9
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனை தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1267 - பெரிய திருமொழி - 4.2.10
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுளார் தரப் பாடிய பாடல்* இப் பத்தும் வல்லார்* 
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||030. திரு வண்புருஷோத்தமம்||
||திருநாங்கூர்||
||முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1258 - 1267 - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை*
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை*
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்*
ஒண் புருடோத்தமன் தன் ஊர்|

  • வானவர்க்கும் வானவன் ஆம் – தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய
  • ஒள் புருடோத்தமன்தன் – அழகிய புருஷோத்தமன் என்னும் திருமாலினது
  • ஊர் – திருப்பதிகளாவன
  • சாய்ந்த திருவரங்கம் – எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கின்ற ஸ்ரீரங்கமும்
  • தண் வேங்கடம் – குளிர்ந்த திருவேங்கட மலையும்
  • குடந்தை – திருக்குடந்தையும்
  • ஏய்ந்த திருமாலிருஞ்சோலை – எம்பெருமானது திரு உள்ளத்துக்குப் பாங்காகப் பொருந்திய திருமாலிருஞ் சோலை மலையும்
  • பூ துவரை – அழகிய துவாரகையும்
  • வள் புருடோத்தமம் – திருவண்புருடோத்தமம்
  • ஆம் – ஆகும்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 13 March 2024

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||030. திரு வண்புருஷோத்தமம்||
||திருநாங்கூர்||
||முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - புருஷோத்தமன்
  • தாயார் மூலவர் - புருஷோத்தம நாயகி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - திருப்பாற்கடல்
  • விமானம் - சஞ்சீவி விக்ரஹ
  • ஸ்தல விருக்ஷம் - பலா, வாழை
  • ப்ரத்யக்ஷம் - உபமன்யு
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வண்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சந்நதிகள் உள்ளன. அதில் ராமர் சந்நதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார். பாசி படியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப் பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம். இங்கு பெருமாளை அயோத்தி ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வண்புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக் கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். தாயார் புருஷோத்தம நாயகி தென் மேற்கு மூலையில் தனி சந்நதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சந்நதிகள் உள்ளன. பங்குனி மாதம் 10ம் நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப் படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாஸாஸநம் செய்த ஸ்தலம். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதே போல் இந்த திருநாங்கூர் வண்புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சந்நதி இல்லை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்