About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 2 December 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

தவ ஸுப்ரபா⁴தம் அரவிந்த³ லோசநே
ப⁴வது பிரஸந்ந முக² சந்த்³ர மண்ட³லே|
விதி⁴ ஸங்கரேந்த்³ர வநிதாபி⁴ர் அர்ச்சிதே
விருஷ ஸைலநாத² த³யிதே த³யாநிதே⁴||


தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவளே! முழு நிலவு போன்ற தெளிந்த முகம் உடையவளே! நான்முகன், சிவபெருமான், இந்திரன் முதலானவர்களின் துணைவியர்கள் ஆகிய கலைமகள், மலைமகள் (பார்வதி), இந்திராணி (சசி தேவி) ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவளே! அருளுக்கு உறைவிடம் ஆனவளே! திருவேங்கடமுடையானின் அன்பிற்கு உரியவளான திருத்தேவியே! எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 4

நாஹம் வந்தே³ தவ சரணயோர்
 த்³வந்த்³வ மத்³வந்த்³வ ஹேதோ:
கும்பீ⁴ பாகம் கு³ருமபி ஹரே 
நாரகம் நாப நேதும்| 
ரம்யா ராமா ம்ருது³ தநுலதா 
நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருத³ய ப⁴வநே 
பா⁴வயே யம் ப⁴வந்தம்|| 


ஹே ஹரி! கொடிய பாவங்களை அழிப்பவனே! மிகவும் திவ்யமானதும், தேவர்களால் கூட அடைய முடியாததுமாகிய, அந்த வைகுண்ட பதவியை அடைவதற்காகவோ, அல்லது நரக லோகத்திலுள்ள, மிகவும் கொடியதான, கும்பீபாகத்தில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவோ, அல்லது சுவர்க்க லோகத்திலுள்ள நந்தவனத்தில், மிருதுவான மலர்க் கொடியைப் போன்ற உடலுடைய தேவலோகப் பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ, நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை வணங்கவில்லை! நான் எத்தனை பிறவி எடுத்தாலும், ஒவ்வொரு பிறப்பிலும், உன்னை என் இதயமாகிய கோவிலுக்குள்ளே வைத்து அனுதினமும் பூஜிக்க வேண்டும் என்பதற்காகவே உன் திருவடிகளை வணங்குகின்றேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருவேங்கட மஹாத்மியம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||நாரதர்||

||ஓம் நமோ நாராயணா||

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம்
காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து

வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு

அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு? என
ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்

இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை
இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு என்றனர்

சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்
சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து

பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை  என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு

இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத்
திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை

சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன்

சாவித்திரி காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும் திக்பாலகர்களும் குழுமி

நின்று கொண்டே இருந்தார் பிருகு
அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்

எத்தனை நேரம் தான் நிற்பது? என்று எண்ணிச்
சத்தம் இன்றி அமர்ந்து விட்டார் பிருகு முனிவர்

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை
அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக்
கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 161

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 161||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 23||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

அர்ஜுந உவாச|
பத்³ம பத்ர விஸா²லாக்ஷ 
பத்³ம நாப⁴ ஸுரோத்தம|
ப⁴க்தாநா மனுரக்தானாம் 
த்ராதா ப⁴வ ஜநார்த³ந|| 


அர்ஜுனன், விஷ்ணுவே! உங்கள் கண்கள் தாமரை இலையைப் போல பெரியவை. உங்கள் தொப்புளில் ஒரு தாமரை உள்ளது. நீங்கள் தேவர்களில் சிறந்தவர். உங்கள் வழிபாட்டில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ள உங்கள் தீவிர பக்தர்களைக் காப்பாற்றுங்கள்' என்றார். இதைச் சொல்லும்போது, ​​அர்ஜுனன் தனக்காக மட்டுமல்ல, பகவானின் அனைத்து பக்தர்களுக்காகவும் பேசுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.25 

ஸக்தா: கர்மண்ய வித்³வாம் ஸோ 
யதா² குர்வந்தி பா⁴ரத|
குர்யாத்³ வித்³வாம் ஸ்ததா² ஸக்தஸ்²
சிகீர்ஷுர் லோக ஸங்க்³ரஹம்||

  • ஸக்தாஹ் - பற்றுக் கொண்டு 
  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளில்  
  • அவித்³வாம்ஸோ - அறிவில்லாதோர்
  • யதா² - அதுபோல 
  • குர்வந்தி - செய்கின்றனர்  
  • பா⁴ரத - பரத குலத் தோன்றலே  
  • குர்யாத் - செய்தாக வேண்டும்  
  • வித்³வாம்ஸ்  - அறிஞர் 
  • ததா² - இவ்வாறே 
  • அஸக்தஸ்²- பற்றற்று  
  • சிகீர்ஷு - வழிநடத்தும் விருப்பத்துடன் 
  • லோக ஸங்க்³ரஹம் - பொது மக்களை

பரத குலத்தில் உதித்தவனே! அறியாதோர், பற்றுக் கொண்டு விதிக்கப்பட்ட கடமைகளை செய்கின்றனர். ஆனால் அதை அறிஞர்கள் வழிநடத்தும் விருப்பத்துடன் பற்றற்று செய்கின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.18

தஸ்யை வ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ³
ந லப்⁴யதே யத்³ ப்⁴ரமதாம் உபர்யத⁴:|
தல் லப்⁴யதே து³: க² வத³ந்யத: ஸுக²ம்
காலேந ஸர்வத்ர க³பீ⁴ரரம் ஹஸா||

  • உபரி - மேல் லோகத்தில் பிரம்ம தேவர் வரையிலும்
  • அத⁴:  - கீழ் லோகத்தில் தாவரம் வரையிலும்
  • ப்⁴ரமதாம் - சுழலுகின்ற ஜீவர்களுக்கு
  • யத்³ - யாதொரு பரமானந்த சுகமானது
  • ந லப்⁴யதே - அடையப்படுகிறது இல்லையோ
  • தஸ்ய - அதை அடைவதற்காக 
  • ஏவ ஹேதோஃ - மட்டும் காரணம்
  • கோவிதோ³ - புத்திமான்
  • ப்ரயதேத - முயற்சி செய்ய வேண்டும்
  • தத் ஸுக²ம் - அந்த விஷய சுகமானது
  • அந்யதஸ்  - முன் ஜென்ம வினையினால்
  • து³ஹ்க² வத்³ - துயரங்களைப் போல
  • ஸர்வத்ர - எல்லா இடத்திலும் நரகத்திலும் கூட
  • க³பீ⁴ரரம் ஹஸா - மிக வேகத்தை உடைய
  • காலேந - காலத்தால்
  • லப்⁴யதே - அடையப்படுகிறது

ஆகவே, அறிவுடைய ஒருவன் தாவரம் முதல் பிரும்ம தேவன் முடிய உள்ள பலப்பல பிறவிகளில் சுற்றிச் சுற்றி வரினும் அடைய இயலாத உயரிய பதத்தை அடைவதற்கு முயல வேண்டும். ஏனெனில், இவ்வுகியல் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்ப, தவிர்க்க முடியாத கால வேகத்தால், எங்கும் எப்படியும் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.96

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.96

ராஜ வம்ஸா²ஞ் ஸ²த கு³ணாந்
ஸ்தா² பயிஷ்யதி ராக⁴வ:|
சாதுர் வர்ண்யம் ச லோகே ஸ்மிந்
ஸ்வே ஸ்வே த⁴ர்மே நியோக்ஷ்யதி|| 

  • ராக⁴வர் -  ஸ்ரீராகவர்
  • ராஜ வம்ஸா²ஞ் - ராஜ வம்சங்களை
  • ஸ²த கு³ணாந் -  நூறு மடங்கு
  • ஸ்தா² பயிஷ்யதி -  நிலை நிறுத்த போகிறார்
  • அஸ்மிந் லோகே - இந்த உலகத்தில்
  • சாதுர் வர்ண்யம் ச - நான்கு வர்ணத்தையும்
  • ஸ்வே ஸ்வே - அவரவர்களின்
  • த⁴ர்மே - தர்மத்தை
  • நியோக்ஷ்யதி - காப்பாற்றி அநுக்ரஹிக்க போகிறார்

ஸ்ரீராகவன், நான்கு வர்ணத்தாரையும், தங்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்து, இவ்வுலகில் நூற்றுக்கணக்கான ராஜ வம்சங்களை நிறுவுவான்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 136 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 136 - அமரர்க்கு அமுதளித்தவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்||

அங் கமலப் போதகத்தில்* 
அணி கொள் முத்தம் சிந்தினாற் போல்* 
செங்கமல முகம் வியர்ப்ப* 
தீமை செய்து இம் முற்றத்தூடே*
அங்கம் எல்லாம் புழுதியாக* 
அளைய வேண்டா அம்ம! விம்ம* 
அங்கு அமரர்க்கு அமுது அளித்த* 
அமரர் கோவே! முலை உணாயே|

  • அங் கமல - அழகிய தாமரைப்
  • போதகத்தில் - பூவினுள்ளே
  • அணி கொள் முத்தம் - அழகு மிக்க முத்துகள்
  • சிந்தினாற் போல் - சிந்தியது போல
  • செங் கமல - சிவந்த தாமரை மலர் போன்ற
  • முகம் - உனது முகமானது
  • வியர்ப்ப - வியர்க்கும் அளவு
  • தீமை செய்து - குறும்புகள் செய்து கொண்டு
  • இம் முற்றத்தூடே - இந்த முற்றதுள் நின்று
  • அங்கம் எல்லாம் - உடலெல்லாம்
  • புழுதியாக - புழுதி படிய
  • அளைய வேண்டா - அளைந்து விளையாடாதே
  • அம்ம! - கண்ணம்மா!
  • விம்ம - வயிறு புடைக்க
  • அங்கு அமரர்க்கு - முன்பு தேவர்களுக்கு
  • அமுது அளித்த - அமிர்தம் கடைந்து அளித்த
  • அமரர் கோவே! - தேவாதி தேவனே!
  • முலை உணாயே - தாய்ப் பால் பருக வாராயோ!

ஒரு சமயம், தேவர்கள் வயிறு நிரம்ப அவர்களுக்கு அமுதத்தை அளித்த தேவாதி ராஜனே, தலைவனே! தாமரைப் பூவில் நீர்த்துளி முத்துக்கள் சிந்தியிருப்பது போல், உன் செந்தாமரையை ஓத்த அழகான முகத்தில் வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க, உடம்பை எல்லாம் புழுதியாக்கி கொள்ளாமல் என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 042 - திருக்கோவலூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||042. திருக்கோவலூர்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ த்ரிவிக்ரமன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பூங்கோவல் தாயார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - த்ரிவிக்ரமன்
  • பெருமாள் உற்சவர் - கோபாலன், ஆயனார், தேஹளிசர்
  • தாயார் மூலவர் - பூங்கோவல்
  • தாயார் உற்சவர் - புஷ்பவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - பெண்ணையாறு, கிருஷ்ண, ஸ்ரீசக்ர
  • விமானம் - ஸ்ரீகர
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை
  • ப்ரத்யக்ஷம் - ம்ருகண்ட முனி, மஹாபலி சக்கரவர்த்தி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 23

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

--------------------
ஸ்தல புராணம்

அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள் புரிந்தார் சிவபெருமான்.

அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்து விடக்கூடும் என்று எண்ணினர்.

அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் நின்றனர். அவனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். இந்த தேவர்களுக்குத் தான் எத்தனை பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து உதவிக்கு நிற்கிறார்களே என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு.

இருப்பினும் தேவர்களை காப்பது தனது கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதே சமயம் மகாபலியின் சிறப்பையும் உலகம் அறியச் செய்ய அவர் சித்தம் கொண்டார். அதற்காக வாமன அவதாரம் (குள்ளமான) எடுத்தார் மகாவிஷ்ணு. மூன்று அடி உயரமே கொண்ட அவர், மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.

ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார் மகாபலியிடம், “வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு என்ன எனக்கு இருக்கப் போகிறது?” என்று கூறியதுடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீரை வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.

இனி அவனைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பியின் (வண்டு) உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக் கொண்டார். இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது.

மகாபலி சக்ரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்ரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் “முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்”. பின்னர் மகாபலியிடம், “சக்ரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது” என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.

மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.

மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காண முடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்திருக்கோவில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ராஜகோபுரத்தை தன்னகத்தே கொண்டுள்ள ராஜகோபுரம் 192 அடி உயரத்துடன் பதினோரு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. (முதல் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீரங்கம் - 236 அடி, இரண்டாம் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் - 196 அடி).

இக்கோவிலின் திரிவிக்ரமப் பெருமாளின் நெடிய திருவுருவம் ஒரு காலினைத் தரையில் ஊன்றி நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி மேலே தூக்கிய திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோவிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளன.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் சுற்றுப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சந்நிதியைக் காணலாம். ஆனால் பெருமாள் கோவில் கொண்டுள்ள இத்திருத்தலத்தில் பெருமாளின் அருகிலேயே அமர்ந்து விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசனம் செய்து அருள்பெறும் வாய்ப்பு வேறு எந்த வைணவ திவ்யதேச திருத்தலத்திலும் நமக்குக் கிடைக்காது.

எனவே, பொதுவாக பெருமாளை மட்டுமே மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையையும் (மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்” என்று புகழ்ந்து மங்களாஸாஸநம் செய்திருக்கிறார். மூன்று திருவந்தாதிகள் உருவான ஸ்தலம்

இந்த தலத்தில் விஷ்ணு துர்க்கையும் சுயம்புவாக அருள் பாலிக்கிறாள். இந்த விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.

இங்குள்ள திரிவிக்ரம பெருமாள் மகாபலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வலக்கையில் சங்கினையும், இடக்கையில் சக்கரத்தினையும் ஏந்தி சேவை சாதிக்கறார். இப்படி சேவை சாதிப்பது பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோவில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது “தென் பெண்ணை” என்ற பெயரில் ஓடுகிறது. “வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்” என்ற பழமொழி உண்டு.

இந்த திருக்கோவிலில், மூலஸ்தானத்தில் மகாலட்சுமி, பிரஹலாதன், மாபலி ஆகியோர் பெருமாளுக்கு வலது புறத்திலும், சுக்கிராச்சாரியார், மிருகண்ட முனிவர், முதல் மூன்று ஆழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கை ஆழ்வார் ஆகியோர் இடது புறத்திலும் காட்சி தருகின்றனர். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் துர்க்கை சன்னதி, மிக அரிதாக பெருமாள் சன்னதி அருகே அமைந்துள்ளது. ஶ்ரீவேணுகோபால பெருமாள், தாயார் லட்சுமி, ஶ்ரீநாராயணன், வீர ஆஞ்சநேயர், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீராமர், ஆண்டாள் நாச்சியார் சக்கரத்தாழ்வார், விஸ்வசேனா, மணவாளமாமுனி, ராமானுஜர் ஆகியவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாமன மூர்த்தியும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார்.

ஸ்ரீசக்ர தீர்த்தம் கோவிலின் வெளிப்புறம் அமைந்துள்ளது. இந்த தீர்த்த நீரை கொண்டு தான் பிரம்மன், வாமனரின் பாதங்களை சுத்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீசக்ர தீர்த்தம் தவிர ஆகாச கங்கை, வராக தீர்த்தம், கலவ தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன.

சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் பல கால கட்டங்களில் இக்கோவிலை புனரமைத்து சீர் செய்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது. ஆரம்பத்தில் இக்கோவில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததாகவும், பிறகு வீரராஜேந்திர சோழன் காலத்திலேயே கிரானைட் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற சன்னதிகளை கிரானைட் கற்களால் கட்டிய பெருமை நரசிம்ம வர்மனையே சேரும். ராஜாதிராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்ரமபாண்டியன் உள்ளிட்டோர் இக்கோவிலை புனரமைத்துள்ளனர். ஹைதர் அலி கால படையெடுப்பின் போது இக்கோவில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 49||

||ஸ்கந்தம் 04|| 

பகவான் சங்கரர் ஸதீதேவியை தக்ஷன் நடத்தும் யாகத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லி அதற்குப் பல்வேறு காரணங்களையும் சொல்லி நிறுத்திக்கொண்டார்.

ஆனால், ஸதீதேவியின்‌ மனம் ஊசலாடியது. வெளியில் போவதும் அவர் என்ன நினைப்பாரோ என்று உள்ளே வருவதுமாக அலைந்தாள்.

தன் உறவினரைப் பார்க்கப் போகவேண்டாம் என்ற பரமேஸ்வரன் மீது கோபம் கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. மனம் கலங்கிய தேவி, அன்பினால் தன் திருமேனியில் பாதி அளித்த சிவனை விட்டுப் பிரிந்து பிறந்தகம் சென்றாள்.

அவள் போவதைக் கண்ட மணிமான் முதலிய பார்ஷதர்கள் சிவனின் அனுமதியுடன் நந்திதேவரை அழைத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றனர். அவளை நந்தியின் மீது அமரச் செய்து, உரிய அரச மரியாதையுடன் வாத்யங்களை முழக்கிக்கொண்டு சென்றனர்.

இவ்வாறு ஸதீதேவி பணியாட்கள் புடைசூழ யாகசாலையில் நுழைந்தாள்.

அங்கு நாற்புறமும் வேதம் ஒலித்தது. யாகத்திற்கான மிக விமரிசையான ஏற்பாடுகளைக் கண்டாள்.

தன் வீட்டை நாடி வந்த பெண்ணை வா என்று கூட தக்ஷன் அழைக்கவில்லை. மாறாக அவமதித்தான். அவனிடம்‌கொண்ட அச்சத்தால் வேதியர்களும் வாளாவிருந்தனர்.

அவளது உடன் பிறந்தோரும் அன்னையும்‌ மகிழ்ந்து கட்டிக்கொண்டு உச்சிமோந்து வரவேற்றனர்.

தந்தையால் அவமதிக்கப்பட்ட ஸதீதேவி எதையும் ஏற்கவில்லை.


வேள்வியைக்‌ கவனித்தபோது பரமேஸ்வரனுக்கு ஹவிர்பாகம்‌ அளிக்காததைக் கண்டு துணுக்குற்றாள். மூவுலகையும்‌ எரிப்பாள் போலச் சினம்‌ கொண்டாள்.

தேவியின் கோபத்தைக் கண்டு தக்ஷனைக் கொல்ல எழுந்த தன் பூதகணங்களைக் கையமர்த்திவிட்டு கோபத்துடன் கரகரத்த குரலில் தக்ஷனைப் பார்த்து உரக்கப் பேசினாள்.

தந்தையே! அகில சராசரங்களிலும் அன்பு கொண்டவர் சங்கரர். அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் யாருமில்லை.

மிகவும் உயர்ந்தவர். அவரிடம்‌ உம்மைத் தவிர வேறு யார் பகைமை கொள்வார்?

தங்களைப் போன்றோர் மற்றவரின் நற்குணங்களையும்‌ குற்றமாகவே காண்பர்.

பிணமாகப்போகும் இவ்வுடலை ஆத்மா என்று கொண்டாடுபவர் சான்றோரைப் பழிப்பதில் வியப்பேது?

சான்றோர் பொறுமைக்கடல் ஆவர். ஆனால் அவரை அவமதிப்பதைப் பொறுக்காத சான்றோரின் திருவடித்துகள் அவமதிப்பவரின் புகழை அழித்துவிடும்.

இரண்டே எழுத்துக்கள் கொண்ட 'சிவ' என்னும் நாமம் மிக உயர்ந்தது. அதை அறிந்தோ அறியாமலோ சொல்பவர்க்கு பாவங்கள் அனைத்தும் விலகி மங்களம்‌ உண்டாகும்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் உறவான அவரிடம்‌ பகைமை கொண்டீர்.

தர்மரக்ஷகனான பகவானை அறிவிலி என்று எவராவது நிந்திப்பாரேயாகில் அவரைத் தடுத்தி நிறுத்தவேண்டும். அதற்குத் திறனில்லையெனில் காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும்.

நீலகண்டனை அவமதிக்கும் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வுடலை இனி ஒரு கணமும் தரிக்கமாட்டேன். உடலுக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டு விட்டால் வாந்தி எடுத்தாவது அதை வெளியேற்றவேண்டும். இல்லையெனில்‌ தீமை நேரிடும்.

ஆன்மாவை உணர்ந்த ஞானிகளது மனம் வேதத்தில் கூறிய கர்மகாண்டத்தைப் பின்பற்றாது. அவர்களது நடவடிக்கைகளை எவரும் புரிந்துகொள்ள இயலாது.

கர்ம காண்டம் அனைத்துமே ப்ரவிருத்தி தர்மம். உலக வாழ்வை நடத்த உதவுவது. வாழ்வை வெறுப்பவர் பின்பற்றுவதோ நிவ்ருத்தி தர்மம். இரண்டுமே வேதத்தில் கூறப்பட்டவைதாம்.

சங்கரரோ ப்ரும்மஸ்வரூபம். அவர் இவையனைத்தையும்‌ கடந்து நிற்பவர். பரமேஸ்வரன் என்னை தாக்ஷாயணீ என்றழைப்பார். சிவத்வேஷியான உமது பெயரால் இனி என்னை அவர் அழைக்க நேரிட்டால் நான் தலைகுனிந்து வருந்த நேரிடும். உம்மால் ஏற்பட்ட இவ்வுடலை ஒழிக்கிறேன் என்று சொல்லி ஸதீதேவி மஞ்சள் ஆடை அணிந்து மௌனம் மேற்கொண்டு இருகண்களையும் மூடி வடக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்தாள்.

யோக சக்தியானால் ப்ராணனை மேலே எழுப்பி இதய சக்கரத்தில் நிறுத்தினாள். பின்னர் புருவ மத்திக்குக் கொண்டுவந்தாள். அங்கிருந்து அக்னியை மூளச்செய்து உடலெங்கும் நிரப்பினாள். அவளது திருமேனி முழுதும் யோகத்தீ சூழ்ந்தது. பரமேஸ்வரனையே மனத்தில் தியானித்து மிகுந்த தூய்மை மிக்கவளாகி உடலை நீத்தாள்.

அங்கிருந்த தேவரும் ரிஷிகளும் 'ஹாஹா' என்று கூக்குரலிட்டனர். பின்னர் அனைவரும் தக்ஷனைத் தூற்றினர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்