About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 006 திருப்பேர் நகர். Show all posts
Showing posts with label 006 திருப்பேர் நகர். Show all posts

Thursday, 31 August 2023

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||006. திருப்பேர் நகர்|| 
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - கோவிலடி – திருச்சி||
||ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 2

திருமங்கையாழ்வார்
021. திவ்ய ப்ரபந்தம் - 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

022. திவ்ய ப்ரபந்தம் - 2774 - பெரிய திருமடல் - 7.2 (62)
வல்லவாழ்ப் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை*
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை*
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை*
மன்னும் கடல்மல்லை மாயவனை|

நம்மாழ்வார்
023. திவ்ய ப்ரபந்தம் - 3860 - திருவாய்மொழி - 10.8.1
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால் வந்து* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குரு மா மணி உந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால் சென்று சேர்விடம்* தென் திருப்பேரே| (2)

024. திவ்ய ப்ரபந்தம் - 3861 - திருவாய்மொழி - 10.8.2
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார் ஏழ் கடல் ஏழ்* மலை ஏழ் உலகு உண்டும்*
ஆரா வயிற்றானை* அடங்கப் பிடித்தேனே|

025. திவ்ய ப்ரபந்தம் - 3862 - திருவாய்மொழி - 10.8.3
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணி சாரேன்*
மடித்தேன் மனை வாழ்க்கையுள்* நிற்பது ஓர் மாயையை*
கொடிக் கோபுர மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
அடிச் சேர்வது எனக்கு* எளிது ஆயினவாறே|

026. திவ்ய ப்ரபந்தம் - 3863 - திருவாய்மொழி - 10.8.4
எளிதாயினவாறு என்று* என் கண்கள் களிப்பக்*
களிது ஆகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளி தாவிய சோலைகள் சூழ்* திருப்பேரான்*
தெளிது ஆகிய* சேண் விசும்பு தருவானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 3864 - திருவாய்மொழி - 10.8.5
வானே தருவான்* எனக்கா என்னோடு ஒட்டி*
ஊன் ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* 
இன்று தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேன் ஏய் பொழில்* தென் திருப்பேர் நகரானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 3865 - திருவாய்மொழி - 10.8.6
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*
பொருப்பே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
இருப்பேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம் உண்டு களித்தேனே|

029. திவ்ய ப்ரபந்தம் - 3866 - திருவாய்மொழி - 10.8.7
உண்டு களித்தேற்கு* உம்பர் என் குறை* 
மேலைத் தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில் சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள் நின்று அகலானே?

030. திவ்ய ப்ரபந்தம் - 3867 - திருவாய்மொழி - 10.8.8
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின் கண் பெரியன்*
எண்ணில் நுண் பொருள்* ஏழ் இசையின் சுவை தானே*
வண்ண நல் மணி மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என் மனத்துப்* புகுந்தான் செறிந்து இன்றே|

031. திவ்ய ப்ரபந்தம் - 3868 - திருவாய்மொழி - 10.8.9
இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்கு அருள் செய்ய* உணர்த்தல் உற்றேனே|

032. திவ்ய ப்ரபந்தம் - 3869 - திருவாய்மொழி - 10.8.10
உற்றேன் உகந்து பணிசெய்து* உன பாதம் பெற்றேன்* 
ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்* வாழ் திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே| (2)

033. திவ்ய ப்ரபந்தம் - 3870 - திருவாய்மொழி - 10.8.11
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர் வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல் ஆர் தமிழ்* ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்* 
தொண்டர் ஆள்வது* சூழ் பொன் விசும்பே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Monday, 28 August 2023

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||006. திருப்பேர் நகர்|| 
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - கோவிலடி – திருச்சி||
||ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 1

பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 173 -  பெரியாழ்வார் திருமொழி - 2.6.2
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்* 
எங்கும் திரிந்து* விளையாடும் என் மகன்* 
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* 
நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!* 
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா| (2)

002. திவ்ய ப்ரபந்தம் - 205 - பெரியாழ்வார் திருமொழி - 2.9.4
கொண்டல் வண்ணா! இங்கே போதராயே* 
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே* 
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே* 
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக் கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே|

திருமங்கையாழ்வார்
003. திவ்ய ப்ரபந்தம் - 1428 - பெரிய திருமொழி - 5.9.1
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன் தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும்*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவு அணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1429 - பெரிய திருமொழி - 5.9.2
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1430 - பெரிய திருமொழி - 5.9.3
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம் தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணை மேல்*
கரு வரை வண்ணன் தென் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1431 - பெரிய திருமொழி - 5.9.4
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்-தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1432 - பெரிய திருமொழி - 5.9.5
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்னப்* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1433 - பெரிய திருமொழி - 5.9.6
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு* 
வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1434 - பெரிய திருமொழி - 5.9.7
வெண்ணெய் தான் அமுது செய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டென்று இருந்தான்**
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* 
வேலை வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1435 - பெரிய திருமொழி - 5.9.8
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1436 - பெரிய திருமொழி - 5.9.9
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1437 - பெரிய திருமொழி - 5.9.10
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவு அணையில் பள்ளி*
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கை*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1851 - பெரிய திருமொழி - 10.1.4
துளக்கம் இல் சுடரை * அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் * 
பேரில் வணங்கிப் போய் * அளப்பு இல் ஆர் அமுதை * 
அமரர்க்கு* அருள் விளக்கினை * 
சென்று வெள்ளறைக் காண்டுமே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1857 - பெரிய திருமொழி - 10.1.10
பெற்ற மாளியைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரை செய்த*
சொல் திறம்* இவை சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே|

015. திவ்ய ப்ரபந்தம் - 2048 - திருக்குறுந்தாண்டகம் - 2.7 (17)
பேசினார் பிறவி நீத்தார்* பேர் உளான் பெருமை பேசி,* 
ஏசினார் உய்ந்து போனார்* என்பது இவ் உலகின் வண்ணம்,*
பேசினேன் ஏச மாட்டேன்* பேதையேன் பிறவி நீத்தற்கு,* 
ஆசையோ பெரிது கொள்க* அலைகடல் வண்ணர் பாலே*

016. திவ்ய ப்ரபந்தம் - 2050 - திருக்குறுந்தாண்டகம் - 2.9 (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

017. திவ்ய ப்ரபந்தம் - 2059 - திருநெடுந்தாண்டகம் - 1.8 (8)
நீரகத்தாய்! நெடு வரையின் உச்சி மேலாய்!*
நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி ஊரகத்தாய்* 
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்* உள்ளுவார் உள்ளத்தாய்* 
உலகம் ஏத்தும் காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்* 
பேராது என் நெஞ்சின் உள்ளாய்!* 
பெருமான்! உன் திருவடியே பேணினேனே| (2)

018. திவ்ய ப்ரபந்தம் - 2060 - திருநெடுந்தாண்டகம் - 1.9 (9)
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய்!* 
மதிள் கச்சி ஊராய்! பேராய்* 
கொங்குத்தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்* 
குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்*
பங்கத்தாய் பாற் கடலாய்! பாரின் மேலாய்!* 
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா!* 
எங்கு உற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி* 
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 2070 - திருநெடுந்தாண்டகம் - 2.9 (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* 
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* 
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* 
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே| 

திருமழிசையாழ்வார் 
020. திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்முகன் திருவந்தாதி - 4.6 (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 27 August 2023

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||006. திருப்பேர் நகர்|| 
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - கோவிலடி – திருச்சி||
||ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
4 ஆழ்வார்கள் – 33 பாசுரங்கள்

001. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம் 
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)

------------
002. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 3860 - 3870 - பத்தாம் பத்து - எட்டாம் திருமொழி

------------
003. பெரியாழ்வார் - 2 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 173 - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் – 1 பாசுரம்            
  • திவ்ய ப்ரபந்தம் - 205 - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்     

------------
004. திருமங்கையாழ்வார் - 19 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 12 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1428 - 1437 - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1851, 1857 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 4, 10 - 2 பாசுரங்கள்
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2048, 2050 - இரண்டாம் திருமொழி - 7, 9 (17, 19)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 3 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2059, 2060 - முதலாம் திருமொழி - 8, 9 (8, 9) - 2 பாசுரங்கள்                 
  • திவ்ய ப்ரபந்தம் - 2070 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19) - 1 பாசுரம்
4. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
5. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2774 - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - (62)
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து*
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்*
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து*
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர்|

  • போம் மானை எய்து - தனக்கு முன்னே மாயமாக ஓடிச் சென்ற மாரீசனாகிய பொன் மானை அம்பெய்து கொன்றும்
  • பொரும் ஆனை கொம்பு பறித்து - யுத்தஞ் செய்ய வந்த குவலயாபீடமென்னும் யானையினது தந்தங்களைப் பிடுங்கியும்
  • ஆம் ஆனை மேய்த்து - மந்தையாகத் திரண்ட பசுக்களை மேய்த்தும்
  • உவந்த - மகிழ்ந்த
  • அம்மானை - ஸ்வாமியும்
  • தாமம் செழுந் திருப்பேரானை - வளப்பமமைந்த திருப்பேர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான திருமாலை
  • சிறுகாலை - சிற்றஞ் சிறு காலையில்
  • சிந்தித்து - தியானித்துக் கொண்டே
  • எழுந்திருப்பேற்கு - எழுந்திருக்கும் எனக்கு
  • இடர் - பிறவித் துன்பம்
  • உண்டோ - உள்ளதாகுமோ? இல்லை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Saturday, 26 August 2023

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||006. திருப்பேர் நகர்|| 
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - கோவிலடி – திருச்சி||
||ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ இந்திராதேவி தாயார் ஸமேத ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள்| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - அப்பக்குடத்தான்
  • பெருமாள் உற்சவர் - அப்பால ரங்கநாதர்
  • தாயார் மூலவர் - இந்திராதேவி
  • தாயார் உற்சவர் - கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - இந்திர, திருக்காவேரி, கொள்ளிடம்
  • விமானம் - இந்திர
  • ஸ்தல விருக்ஷம் - புரஷ
  • ப்ரத்யக்ஷம் - உபமன்யு, பராசரர்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 4 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 33

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் "கோவிலடி' எனப்பட்டது என்றும் கூறுவர். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடி விட்டுத் தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி ஸமேத பெருமாளாக' அருள் பாலிக்கிறார். 

திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக் கண்ட திருமங்கையாழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாளின் "பஞ்சரங்க தலம்' என்று சொல்லக் கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.

  • 1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
  • 2. அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி)
  • 3. மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம்
  • 4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம்
  • 5. பஞ்ச ரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை)

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர், 'மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்', என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்ட நாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், 'ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,' என கேட்டான். அதற்கு அவர், 'எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,'என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்