About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 015 திருச்சேறை. Show all posts
Showing posts with label 015 திருச்சேறை. Show all posts

Monday, 13 November 2023

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

||015. திருச்சேறை|| 
||பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்||
||பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 13

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1578 - பெரிய திருமொழி - 7.4.1
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்* வானவர் தம் கோவே என்று* 
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* 
செல்வத் தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* 
காண்மின் என் தலை மேலாரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1579 - பெரிய திருமொழி - 7.4.2
அம் புருவ வரி நெடுங் கண்* அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனி மேல்* 
இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1580 - பெரிய திருமொழி - 7.4.3
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளை*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா என்று நின்று* 
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரில் பொலிகின்றாரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1581 - பெரிய திருமொழி - 7.4.4
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலை அதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*
நாளும் தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1582 - பெரிய திருமொழி - 7.4.5
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* 
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* 
நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1583 - பெரிய திருமொழி - 7.4.6
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* 
துணை இலேன் சொல்லுகின்றேன்* 
வண்டு ஏந்தும் மலர்ப் புறவில்* வண் சேறை எம் பெருமான் அடியார் தம்மை*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1584 - பெரிய திருமொழி - 7.4.7
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்*
மை விரியும் மணி வரை போல்* மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம்**
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடியைச் சிந்தித்தேற்கு* 
என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்பு தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1585 - பெரிய திருமொழி - 7.4.8
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாத பாவங்கள் சேரா* 
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* 
மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* 
பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகிக்* கை ஆரத் தொழுவாரைக் கருதுங்காலே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1586 - பெரிய திருமொழி - 7.4.9
கள்ளத் தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒரு கால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என் கொலோ?* 
விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ள*
தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* 
நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1587 - பெரிய திருமொழி - 7.4.10
பூ மாண் சேர் கருங் குழலார் போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* 
அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* 
தண் சேறை அம்மான் தன்னை* 
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டுமின்* 
நும் துணைக் கையால் தொழுது நின்றே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1853 - பெரிய திருமொழி - 10.1.6
வானை ஆர் அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள் வயல்* சேறையில் கண்டு போய்* 
ஆனை வாட்டி அருளும்* அமரர் தம் கோனை* 
யாம் குடந்தைச் சென்று காண்டுமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 2707 - சிறிய திருமடல் - 4.5 (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*

013. திவ்ய ப்ரபந்தம் - 2772 - பெரிய திருமடல் - 6.10 (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

||015. திருச்சேறை|| 
||பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்||
||பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 13 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1578 - 1587 - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்*
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்*
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்*
சேறைக்கு நாயகன் பேர் செப்பு|

  • செல்வம் செருக்குவார் வாயில்தொறும் - செல்வத்தினால் இறுமாப்புக் கொண்டவரது வீட்டு வாசல்கள் தோறும்
  • சென்று சென்று - போய்ப் போய்
  • நின்று நின்று - அங்கங்கே நெடு நேரம் நின்று
  • தூங்கும் - சோர்வை அடைகின்ற
  • மடம் - அறியாமையை உடைய
  • நெஞ்சமே - எனது மனமே!  நீ
  • இன் தமிழை - இனிய தமிழ்ப் பாடலை
  • கூறைக்கும் - வஸ்திரத்தின் பொருட்டும்
  • சோற்றுக்கும் - சோற்றின் பொருட்டும்
  • கூறாது - மநுஷ்யரைப் பாடாமல்
  • பேறு ஆக - முத்திப் பயன் கை கூடும்படி
  • சேறைக்கு நாயகன் பேர் செப்பு - திருச்சேறை என்னும் திவ்ய ஸ்தலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 10 November 2023

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

||015. திருச்சேறை|| 
||பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்||
||பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஸாரநாதப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ஸாரநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஸாரநாதன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - ஸாரநாதன்
  • தாயார் மூலவர் - ஸாரநாயகி
  • தாயார் உற்சவர் - பஞ்சலெட்சுமி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - ஸார
  • விமானம் - ஸார
  • ஸ்தல விருக்ஷம் - அகத்தி 
  • ப்ரத்யக்ஷம் - காவேரி, மார்கண்டேயன்
  • ஆகமம் - பாஞ்சராத்திரம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 13

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

மூல ஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தி அடைந்தார். உப்பிலியப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறு வயதிலேயே பெருமாள் விரும்புகிறார். மார்க்கண்டேயர், "ஸ்வாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,'' என்கிறார். அதற்கு பெருமாள், "இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்'' என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்று கொள்கிறார்.

மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல் வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக் கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித் தாய் பெருமாளிடம், "அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,'' என கேட்டு இத்தல சார புஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார்.  "தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,'' என காவிரி கூறியவுடன்,  கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி, "தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,'' என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்