About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 031 திருச்செம்பொன்செய் கோவில். Show all posts
Showing posts with label 031 திருச்செம்பொன்செய் கோவில். Show all posts

Saturday, 23 March 2024

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||031. திருச்செம்பொன்செய் கோவில்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1268 - பெரிய திருமொழி - 4.3.1
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர் மகளோடு* மண் மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக்* 
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே||

002. திவ்ய ப்ரபந்தம் - 1269 - பெரிய திருமொழி - 4.3.2
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப்* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவை தன்னை* 
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை* 
கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1270 - பெரிய திருமொழி - 4.3.3
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*
செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*
பங்கயத்து அயன் அவன் அனைய* 
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1271 - பெரிய திருமொழி - 4.3.4
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக்* கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1272 - பெரிய திருமொழி - 4.3.5
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று* சென்று அடைந்தவர் தமக்கு*
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே* 
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* 
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1273 - பெரிய திருமொழி - 4.3.6
மல்லை மா முந்நீர் அதர்பட* 
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை* 
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* 
கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1274 - பெரிய திருமொழி - 4.3.7
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*
வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக்* கரு முகில் திரு நிறத்தவனை* 
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக்* கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1275 - பெரிய திருமொழி - 4.3.8
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய* அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல்* மேவிய வேத நல் விளக்கை* 
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை* 
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1276 - பெரிய திருமொழி - 4.3.9
களங்கனி வண்ணா கண்ணனே என் தன்* கார் முகிலே என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை* 
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* 
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1277 - பெரிய திருமொழி - 4.3.10
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 20 March 2024

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||031. திருச்செம்பொன்செய் கோவில்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1268 - 1277 - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்*
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய*
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்*
செம்பொன் செய் கோயிலினில் சென்று|

  • பார் அறிய – உலகத்தவர் எல்லாம் உணரும் படி வெளிப்படையாக
  • மடம் நாணம் ஒழிவேன் – மடப்பத்தையும் நாணத்தையும் துறந்தவளாகி
  • மடலை ஊர்வேன் – மட லூர்ந்து செல்வேன். அதனாலேனும்
  • அம்பொன் செய் கோயில் அரங்கன் – அழகிய பொன்னினால் செய்யப்பட்ட கோயிலை உடைய திருவரங்க நாதனது
  • அணி – அழகிய
  • நாங்கூர் – திருநாங்கூரைச் சேர்ந்த
  • செம்பொன்செய்கோயிலினில் – திருச்செம்பொன் செய் கோயில் என்னும் ஸ்தலத்தில்
  • சென்று – போய்
  • கரிய திருமாலை – அங்கு எழுந்தருளியுள்ள கரு நிறம் உடைய எம்பெருமானை
  • சேர்வேன் – அடைவேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Monday, 18 March 2024

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||031. திருச்செம்பொன்செய் கோவில்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ பேரருளாளன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அல்லிமாமலர் தாயார் ஸமேத ஸ்ரீ பேரருளாளன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - பேரருளாளன்
  • பெருமாள் உற்சவர் - செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
  • தாயார் மூலவர் - அல்லி மாமலர்
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - நித்ய, கனக 
  • விமானம் - கனக
  • ஸ்தல விருக்ஷம் - மாதவி
  • ப்ரத்யக்ஷம் - ருத்ரன், த்ருடநேத்ர முனி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்" ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தலம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப் பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்