About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 042 திருக்கோவலூர். Show all posts
Showing posts with label 042 திருக்கோவலூர். Show all posts

Friday, 2 January 2026

108 திவ்ய தேசங்கள் - 042 - திருக்கோவலூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||042. திருக்கோவலூர்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 23 - 1

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1078 - பெரிய திருமொழி - 2.4.1
அன்று ஆயர் குலக் கொடியோடு* 
அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* 
உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே| (2)

002. திவ்ய ப்ரபந்தம் - 1138 - பெரிய திருமொழி - 2.10.1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* 
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர்* 
இளந் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* 
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே| (2)

003. திவ்ய ப்ரபந்தம் - 1139 - பெரிய திருமொழி - 2.10.2
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*
தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை*
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* 
ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்* 
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1140 - பெரிய திருமொழி - 2.10.3
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம் கொள் பொய்கைக்*
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1141 - பெரிய திருமொழி - 2.10.4
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* 
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* 
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* 
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1142 - பெரிய திருமொழி - 2.10.5
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும்*
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1143 - பெரிய திருமொழி - 2.10.6
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* 
அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு*
வியன் கலை எண் தோளினாள் விளங்கு* 
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1144 - பெரிய திருமொழி - 2.10.7
இருங் கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி* 
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* 
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று* 
காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1145 - பெரிய திருமொழி - 2.10.8
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* 
பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்*
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை* 
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* 
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1146 - பெரிய திருமொழி - 2.10.9
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு* 
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று* 
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* 
செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை*
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு* 
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1147 - பெரிய திருமொழி - 2.10.10
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* 
நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* 
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* 
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்* 
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே| (2)

012. திவ்ய ப்ரபந்தம் - 1404 - பெரிய திருமொழி - 5.6.7
சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை* 
பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை* 
வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்* 
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை* யான் கண்டது* 
அணி நீர்த் தென் அரங்கத்தே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 042 - திருக்கோவலூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||042. திருக்கோவலூர்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 23 பாசுரங்கள்
 
001. பொய்கையாழ்வார் - 2 பாசுரங்கள்
1. முதலாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2158 - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (77) - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2167 - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (86) - 1 பாசுரம்

002. பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  1. திவ்ய ப்ரபந்தம் - 2251 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)


003. திருமங்கையாழ்வார் - 20 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 15 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1138 - 1147 - இரண்டாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1404 - ஐந்தாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1542 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1569 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1641 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்

2. திருநெடுந்தாண்டகம் - (இரண்டாம் ஆயிரம்) - 3 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2057, 2058 - முதலாம் திருமொழி - 6, 7 பாசுரங்கள் - 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 2068 - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17) - 1 பாசுரம்

3. சிறிய திருமடல் - (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)

4. பெரிய திருமடல் - (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2776 - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம் (64)

--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன*
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு*
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த*
பூங்கோவல் ஆயன் பொருள்|

  • தாமரையான் ஆதி ஆய் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் முதலாக
  • தாவரங்கள் ஈறு ஆன - தாவரப் பொருள்கள் இறுதியாகவுள்ள
  • சேமம் உயிரும் - உலகத்து வாழ்கின்ற ஜீவராசிகளும்
  • செகம் அனைத்தும் - அவற்றிற்கெல்லாம் இடமான எல்லா உலகங்களும் 
  • பூ மடந்தைக்கு ஆம் கோ - தாமரை மலரில் வசிக்கின்ற இலக்குமிக்கு உகந்த தலைவனும்
  • அலாயுதன் பின் ஆ அவதரித்த - கலப்பையை ஆயுதமாக உடைய பலராமனுக்குத் தம்பியாகத் திருவவதரித்தவனுமாகிய
  • பூ கோவல் ஆயன் - அழகிய திருக்கோவலூர் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளிய ஆயனாரது
  • பொருள் - படைப்புப் பொருள்களாம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 2 December 2025

108 திவ்ய தேசங்கள் - 042 - திருக்கோவலூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||042. திருக்கோவலூர்|| 
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ த்ரிவிக்ரமன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பூங்கோவல் தாயார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - த்ரிவிக்ரமன்
  • பெருமாள் உற்சவர் - கோபாலன், ஆயனார், தேஹளிசர்
  • தாயார் மூலவர் - பூங்கோவல்
  • தாயார் உற்சவர் - புஷ்பவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - பெண்ணையாறு, கிருஷ்ண, ஸ்ரீசக்ர
  • விமானம் - ஸ்ரீகர
  • ஸ்தல விருக்ஷம் - புன்னை
  • ப்ரத்யக்ஷம் - ம்ருகண்ட முனி, மஹாபலி சக்கரவர்த்தி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள் - 23

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

--------------------
ஸ்தல புராணம்

அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள் புரிந்தார் சிவபெருமான்.

அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்து விடக்கூடும் என்று எண்ணினர்.

அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் நின்றனர். அவனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். இந்த தேவர்களுக்குத் தான் எத்தனை பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து உதவிக்கு நிற்கிறார்களே என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு.

இருப்பினும் தேவர்களை காப்பது தனது கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதே சமயம் மகாபலியின் சிறப்பையும் உலகம் அறியச் செய்ய அவர் சித்தம் கொண்டார். அதற்காக வாமன அவதாரம் (குள்ளமான) எடுத்தார் மகாவிஷ்ணு. மூன்று அடி உயரமே கொண்ட அவர், மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.

ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார் மகாபலியிடம், “வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு என்ன எனக்கு இருக்கப் போகிறது?” என்று கூறியதுடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீரை வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.

இனி அவனைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பியின் (வண்டு) உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக் கொண்டார். இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது.

மகாபலி சக்ரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்ரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் “முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்”. பின்னர் மகாபலியிடம், “சக்ரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது” என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.

மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.

மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காண முடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்திருக்கோவில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய ராஜகோபுரத்தை தன்னகத்தே கொண்டுள்ள ராஜகோபுரம் 192 அடி உயரத்துடன் பதினோரு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. (முதல் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீரங்கம் - 236 அடி, இரண்டாம் பெரிய ராஜகோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் - 196 அடி).

இக்கோவிலின் திரிவிக்ரமப் பெருமாளின் நெடிய திருவுருவம் ஒரு காலினைத் தரையில் ஊன்றி நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி மேலே தூக்கிய திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.

பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோவில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோவிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளன.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் சுற்றுப் பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சந்நிதியைக் காணலாம். ஆனால் பெருமாள் கோவில் கொண்டுள்ள இத்திருத்தலத்தில் பெருமாளின் அருகிலேயே அமர்ந்து விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசனம் செய்து அருள்பெறும் வாய்ப்பு வேறு எந்த வைணவ திவ்யதேச திருத்தலத்திலும் நமக்குக் கிடைக்காது.

எனவே, பொதுவாக பெருமாளை மட்டுமே மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையையும் (மாயை) சேர்த்து “விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்” என்று புகழ்ந்து மங்களாஸாஸநம் செய்திருக்கிறார். மூன்று திருவந்தாதிகள் உருவான ஸ்தலம்

இந்த தலத்தில் விஷ்ணு துர்க்கையும் சுயம்புவாக அருள் பாலிக்கிறாள். இந்த விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.

இங்குள்ள திரிவிக்ரம பெருமாள் மகாபலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வலக்கையில் சங்கினையும், இடக்கையில் சக்கரத்தினையும் ஏந்தி சேவை சாதிக்கறார். இப்படி சேவை சாதிப்பது பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோவில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது “தென் பெண்ணை” என்ற பெயரில் ஓடுகிறது. “வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்” என்ற பழமொழி உண்டு.

இந்த திருக்கோவிலில், மூலஸ்தானத்தில் மகாலட்சுமி, பிரஹலாதன், மாபலி ஆகியோர் பெருமாளுக்கு வலது புறத்திலும், சுக்கிராச்சாரியார், மிருகண்ட முனிவர், முதல் மூன்று ஆழ்வார்களான பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கை ஆழ்வார் ஆகியோர் இடது புறத்திலும் காட்சி தருகின்றனர். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் துர்க்கை சன்னதி, மிக அரிதாக பெருமாள் சன்னதி அருகே அமைந்துள்ளது. ஶ்ரீவேணுகோபால பெருமாள், தாயார் லட்சுமி, ஶ்ரீநாராயணன், வீர ஆஞ்சநேயர், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீராமர், ஆண்டாள் நாச்சியார் சக்கரத்தாழ்வார், விஸ்வசேனா, மணவாளமாமுனி, ராமானுஜர் ஆகியவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கே மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாமன மூர்த்தியும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார்.

ஸ்ரீசக்ர தீர்த்தம் கோவிலின் வெளிப்புறம் அமைந்துள்ளது. இந்த தீர்த்த நீரை கொண்டு தான் பிரம்மன், வாமனரின் பாதங்களை சுத்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீசக்ர தீர்த்தம் தவிர ஆகாச கங்கை, வராக தீர்த்தம், கலவ தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் இக்கோவிலில் உள்ளன.

சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் பல கால கட்டங்களில் இக்கோவிலை புனரமைத்து சீர் செய்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது. ஆரம்பத்தில் இக்கோவில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததாகவும், பிறகு வீரராஜேந்திர சோழன் காலத்திலேயே கிரானைட் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்ற சன்னதிகளை கிரானைட் கற்களால் கட்டிய பெருமை நரசிம்ம வர்மனையே சேரும். ராஜாதிராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்ரமபாண்டியன் உள்ளிட்டோர் இக்கோவிலை புனரமைத்துள்ளனர். ஹைதர் அலி கால படையெடுப்பின் போது இக்கோவில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்