About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 021 திருநந்திபுர விண்ணகரம். Show all posts
Showing posts with label 021 திருநந்திபுர விண்ணகரம். Show all posts

Wednesday, 24 January 2024

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||021. திருநந்திபுர விண்ணகரம்|| 
||நாதன் கோயில் - கும்பகோணம்||
||இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||
.
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1438 - பெரிய திருமொழி - 5.10.1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* 
அவை ஆய பெருமான்* தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* 
தட மார்வர் தகைசேர்* நாதன் உறைகின்ற நகர்* 
நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1439 - பெரிய திருமொழி - 5.10.2
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு* ஏழும் ஒழி யாமை முன நாள்* 
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன் அவன் மேவும் நகர் தான்*  
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்* 
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1440 - பெரிய திருமொழி - 5.10.3
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* 
தட மார்வர் தகை சேர்* 
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி* மணி கங்குல் வயல் சூழ்* 
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1441 - பெரிய திருமொழி - 5.10.4
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்* 
இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல* 
நின்ற பெருமான்* 
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* 
அடிகொள் நெடு மா* 
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1442 - பெரிய திருமொழி - 5.10.5
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்* 
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்* 
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1443 - பெரிய திருமொழி - 5.10.6
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர் தான்*  
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்* 
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1444 - பெரிய திருமொழி - 5.10.7
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர் தான்*  
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1445 - பெரிய திருமொழி - 5.10.8
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனி யாளர் திரு ஆர்* 
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்* 
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1446 - பெரிய திருமொழி - 5.10.9
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்* 
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்* 
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1447 - பெரிய திருமொழி - 5.10.10
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுர விண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடை யானை* 
ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல* 
கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடு வினைகள்* முழுது அகலுமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

Thursday, 18 January 2024

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||021. திருநந்திபுர விண்ணகரம்|| 
||நாதன் கோயில் - கும்பகோணம்||
||இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1438 - 1447 ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை நெஞ்சே*
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி*
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்*
நந்தி புர விண்ணகரம் நாடு|

  • நெஞ்சே - மனமே! 
  • செயற்கு அரிய செய்வோமை - செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை
  • செய்யாமல் - செய்யவொட்டாமல்
  • வலியால் மயக்குவார் - தமது வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய
  • ஐவர் - ஐந்து புலன்கள் உன்னை நோக்கி
  • ‘நயம் கலவி சிந்தி - இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்
  • விண் நகரம் புர - ஸ்வர்க்க லோகத்தை அரசாட்சி செய்வாய்
  • என்பர் - என்று துர்ப்போதனை செய்வார்கள். நீ அந்தப் பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக் கொள்ளாமல்
  • திரு செங் கண் மால் - அழகிய செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருக்கண்களை டைய திருமாலினது
  • நந்திபுர விண்ணகரம் - திருநந்திபுர விண்ணகரம் என்னும் ஸ்தலத்தை
  • நாடு - எப்போதும் விரும்புவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 10 January 2024

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||021. திருநந்திபுர விண்ணகரம்|| 
||நாதன் கோயில் - கும்பகோணம்||
||இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள் திருக்கோயில்|| 

||ஸ்ரீ செண்பகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - விண்ணகரன், நாதநாதன்
  • பெருமாள் உற்சவர் - ஜெகந்நாதன்
  • தாயார் மூலவர் - செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - வீற்றிருந்த
  • புஷ்கரிணி/தீர்த்தம் - நந்தி
  • விமானம் - மந்தர
  • ஸ்தல விருக்ஷம் - செண்பகம்
  • ப்ரத்யக்ஷம் - நந்தி, சிபி சக்கரவர்த்தி
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக் கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.

நந்தி தேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு, "எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,'' என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர், "பூமியில் திருமகள் தவம் செய்து கொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,'' என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள் பாலித்தார்.

சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள் பாலிக்கிறார். ஆரம்ப காலத்தில் கிழக்கு பார்த்து அருள் பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள் பாலிக்கிறார் என்று தல புராணம் கூறுகிறது. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்