001. திவ்ய ப்ரபந்தம் - 183 - பெரியாழ்வார் திருமொழி - 2.7.2
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
உரு உடையாய்! உலகு ஏழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
திரு உடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்ட வாராய்|
002. திவ்ய ப்ரபந்தம் - 189 - பெரியாழ்வார் திருமொழி - 2.7.8
சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்!*
சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால் தலை கொண்டாய்!*
ஆமாறு அறியும் பிரானே!* அணி அரங்கத்தே கிடந்தாய்!*
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்|
003. திவ்ய ப்ரபந்தம் - 212 - பெரியாழ்வார் திருமொழி - 2.9.11
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்* வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்* பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்*
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்* கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி*
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்* இணையடி என்தலை மேலனவே| (2)
004. திவ்ய ப்ரபந்தம் - 245 - பெரியாழ்வார் திருமொழி - 3.3.2
கன்னி நன் மா மதிள் சூழ்தரு* பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்*
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா|
005. திவ்ய ப்ரபந்தம் - 402 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.1
மா தவத்தோன் புத்திரன் போய்* மறி கடல் வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தான் ஊர்*
தோத வத்தித் தூய் மறையோர்* துறை படியத் துளும்பி எங்கும்*
போதில் வைத்த தேன் சொரியும்* புனல் அரங்கம் என்பதுவே| (2)
006. திவ்ய ப்ரபந்தம் - 403 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.2
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படித்த உறைப்பன் ஊர்*
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்* வரு விருந்தை அளித்திருப்பார்*
சிறப்பு உடைய மறையவர் வாழ்* திருவரங்கம் என்பதுவே|
007. திவ்ய ப்ரபந்தம் - 404 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.3
மருமகன் தன் சந்ததியை* உயிர் மீட்டு மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே* குரு முகமாய்க் காத்தான் ஊர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை*
பொரு முகமாய் நின்று அலரும்* புனல் அரங்கம் என்பதுவே|
008. திவ்ய ப்ரபந்தம் - 405 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.4
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்* கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு*
ஈன்று எடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கு ஒழிய*
கான் தொடுத்த நெறி போகிக்* கண்ட கரைக் களைந்தான் ஊர்*
தேன் தொடுத்த மலர்ச் சோலைத்* திருவரங்கம் என்பதுவே|
009. திவ்ய ப்ரபந்தம் - 406 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.5
பெரு வரங்கள் அவை பற்றிப்* பிழக்கு உடைய இராவணனை*
உரு அரங்கப் பொரு தழித்து* இவ் உலகினைக் கண் பெறுத்தான் ஊர்*
குரவு அரும்பக் கோங்கு அலரக்* குயில் கூவும் குளிர் பொழில் சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 407 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.6
கீழ் உலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழி விடுத்து அவருடைய* கரு அழித்த அழிப்பன் ஊர்*
தாழை மடல் ஊடு உரிஞ்சித்* தவள வண்ணப் பொடி அணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம் வைக்கும் அரங்கமே|
011. திவ்ய ப்ரபந்தம் - 408 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.7
கொழுப்பு உடைய செழுங்குருதி* கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய*
பிழக்கு உடைய அசுரர்களைப்* பிணம் படுத்த பெருமான் ஊர்*
தழுப்பு அரிய சந்தனங்கள்* தட வரைவாய் ஈர்த்துக் கொண்டு*
தெழிப்பு உடைய காவிரி வந்து* அடி தொழும் சீர் அரங்கமே|
012. திவ்ய ப்ரபந்தம் - 409 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.8
வல் எயிற்றுக் கேழலுமாய்* வாள் எயிற்றுச் சீயமுமாய்*
எல்லை இல்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தான் ஊர்*
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு* எம்பெருமான் குணம் பாடி*
மல்லிகை வெண் சங்கு ஊதும்* மதிள் அரங்கம் என்பதுவே|
013. திவ்ய ப்ரபந்தம் - 410 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.9
குன்று ஆடு கொழு முகில் போல்* குவளைகள் போல் குரை கடல் போல்*
நின்று ஆடு கண மயில் போல்* நிறம் உடைய நெடுமால் ஊர்*
குன்று ஊடு பொழில் நுழைந்து* கொடி இடையார் முலை அணவி*
மன்று ஊடு தென்றல் உமாம்* மதிள அரங்கம் என்பதுவே|
014. திவ்ய ப்ரபந்தம் - 411 - பெரியாழ்வார் திருமொழி - 4.8.10
பரு வரங்கள் அவை பற்றிப்* படை ஆலித்து எழுந்தானை*
செரு அரங்கப் பொருது அழித்த* திருவாளன் திருப்பதி மேல்*
திருவரங்கத் தமிழ் மாலை* விட்டு சித்தன் விரித்தன கொண்டு*
இருவர் அங்கம் எரித்தானை* ஏத்த வல்லார் அடியோமே| (2)