About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 024 திருசிறுப்புலியூர். Show all posts
Showing posts with label 024 திருசிறுப்புலியூர். Show all posts

Thursday, 8 February 2024

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||024. திருசிறுப்புலியூர்||
||திருவாரூர்|| 
||இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1628 - பெரிய திருமொழி - 7.9.1
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக் கழல் தொழுவீர்*
வெள்ளம் முது பரவைத்* திரை விரிய* 
கரை எங்கும் தெள்ளும் மணி திகழும்* 
சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும்* 
எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளீரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1629 - பெரிய திருமொழி - 7.9.2
தெருவில் திரி சிறு நோன்பியர்* செஞ் சோற்றொடு கஞ்சி மருவி* 
பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்து அடைவீர்*
திருவில் பொலி மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள் அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1630 - பெரிய திருமொழி - 7.9.3
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்* பணியும் சிறு தொண்டீர்*
அறையும் புனல் ஒருபால் வயல்* ஒரு பால் பொழில் ஒரு பால்*
சிறை வண்டு இனம் அறையும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும்* 
இறை அடி அல்லது* ஒன்று இறையும் அறியேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1631 - பெரிய திருமொழி - 7.9.4
வான் ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான் ஆகிய தலைவன் அவன்* அமரர்க்கு அதிபதி ஆம்*
தேன் ஆர் பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆன் ஆயனது* 
அடி அல்லது* ஒன்று அறியேன் அடியேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1632 - பெரிய திருமொழி - 7.9.5
நந்தா நெடு நரகத்திடை* நணுகா வகை* 
நாளும் எந்தாய் என* இமையோர் தொழுது ஏத்தும் இடம்* 
எறி நீர்ச் செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம் தாமரை அடியாய்* உனது அடியேற்கு அருள் புரியே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1633 - பெரிய திருமொழி - 7.9.6
முழு நீலமும் மலர் ஆம்பலும்* அரவிந்தமும் விரவி*
கழுநீரொடு மடவார் அவர்* கண் வாய் முகம் மலரும்*
செழு நீர் வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழு நீர்மை அது உடையார்* அடி தொழுவார் துயர் இலரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1634 - பெரிய திருமொழி - 7.9.7
சேய் ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா* 
எனக்கு உரையாய் இது* மறை நான்கின் உளாயோ?*
தீ ஓம்புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ?* 
உனது அடியார் மனத்தாயோ?* அறியேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1635 - பெரிய திருமொழி - 7.9.8
மை ஆர் வரி நீலம்* மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உன கழலே* தொழுது எழுவேன்* 
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐ வாய் அரவு அணை மேல்* உறை அமலா அருளாயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1636 - பெரிய திருமொழி - 7.9.9
கரு மா முகில் உருவா* கனல் உருவா புனல் உருவா*
பெரு மால் வரை உருவா* பிற உருவா நினது உருவா*
திரு மா மகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அரு மா கடல் அமுதே* உனது அடியே சரண் ஆமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1637 - பெரிய திருமொழி - 7.9.10
சீர் ஆர் நெடு மறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை* இமையோர் பெருமானை*
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை* கலியன் ஒலி மாலை*
பாரார் இவை பரவித் தொழப்* பாவம் பயிலாவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 7 February 2024

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||024. திருசிறுப்புலியூர்||
||திருவாரூர்|| 
||இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1628 - 1637 - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்*
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்*
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்*
சிறு புலியூர் எந்தை மேல் சென்று|

  • தாம் - திருவரங்க நாதர் தாம் 
  • கிருஷ்ணாவதாரத்தில் வாணனை மருவி - பாணாசுரனைக் கிட்டி 
  • தோள் சாய்த்த - போரில் அவனது ஆயிரந் தோள்களையும் அறுத்துத் தள்ளிய 
  • நாள் - காலத்தில் 
  • சேமம் உறு - அந்தப் பாணாசுரனுக்குக் காவலாக அமைந்தவனான 
  • புலி ஊர் வல் தோல் உடையான் - புலியானது மேற்கொண்டுள்ள வலிய புலித் தோலை ஆடையாக உடைய சிவபெருமான்
  • சிறுபுலியூர் எந்தைமேல் சென்று - சிறு புலியூர் என்னும் ஸ்ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள எமது தந்தையாகிய அவ்வெம்பெருமானை எதிர்த்துச் சென்று,
  • உடைந்தான் - தோற்றோடினான். ஆதலால் 

  • ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் - கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களை விரும்பி மேய்த்த ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக எவர் தாம் எதிர்த்து நிற்க வல்லவர்? எத்தேவராலும் எதிர்த்து நிற்றல் முடியாது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 3 February 2024

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||024. திருசிறுப்புலியூர்||
||திருவாரூர்|| 
||இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ அருள்மாகடல் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - அருள்மா கடல் அமுதன் 
  • பெருமாள் உற்சவர் - ஸ்தல ஸயனன், கிருபா சமுத்திரன் 
  • தாயார் மூலவர் - திருமாமகள்
  • தாயார் உற்சவர் - தயாநாயகி
  • திருமுக மண்டலம் திசை - தெற்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - மானச, திருவனந்த 
  • விமானம் - நந்த வர்த்தன
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம்
  • ப்ரத்யக்ஷம் - வ்யாஸ முனி, பால வ்யாக்ர முனி
  • ஆகமம் - பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த ஸ்தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் ஸ்தலமான ஸ்ரீரங்கமும், 11வது ஸ்தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப் பெரிய வடிவில் ஸயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக ஸயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ர பாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.

புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் தில்லை நடராஜப் பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணை இட்டார். அதன்படி இந்த ஸ்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ர பாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இந்த ஸ்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இந்த ஸ்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட ஸ்தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், ஸயன நிலையில் உள்ளார்.

புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக ஸயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இந்த ஸ்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இந்த ஸ்தல பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த ஸயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் ஸயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்