About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 036 திருத்தெற்றியம்பலம். Show all posts
Showing posts with label 036 திருத்தெற்றியம்பலம். Show all posts

Thursday, 1 August 2024

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||036. திருத்தெற்றியம்பலம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1278 - பெரிய திருமொழி - 4.4.1
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*
மற்று அவர் தம் காதலிமார் குழையும்* 
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக்*
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1279 - பெரிய திருமொழி - 4.4.2
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* 
ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்* 
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1280 - பெரிய திருமொழி - 4.4.3
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்*
பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்* 
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*
மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1281 - பெரிய திருமொழி - 4.4.4
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்* 
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1282 - பெரிய திருமொழி - 4.4.5
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*
கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*
ஆடவரை மட மொழியார் முகத்து* 
இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1283 - பெரிய திருமொழி - 4.4.6
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்* 
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1284 - பெரிய திருமொழி - 4.4.7
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*
பொல்லாத குறள் உரு ஆய்ப் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு*
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்* 
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1285 - பெரிய திருமொழி - 4.4.8
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நில மடந்தை தனை இடந்து புல்கிக்*
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1286 - பெரிய திருமொழி - 4.4.9
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*
எண் திசையும் மண்டலமும் மண்டி* அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்* 
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1287 - பெரிய திருமொழி - 4.4.10
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*
கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி* 
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Tuesday, 30 July 2024

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||036. திருத்தெற்றியம்பலம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1278 – 1287 - நான்காம் பத்து - நான்காம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி*
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்*
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்*
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர்|

  • என் நெஞ்சே – எனது மனமே!
  • சென்றது காலம் – நமக்கோ வாழ்நாள் பெரும்பாலும் கழிந்திட்டது
  • திரை – தோல் சுருக்கமும்
  • நரை – மயிர் வெளுத்தலும்
  • மூப்பு – கிழத்தனமும்
  • ஆன – தோன்றியுள்ளன
  • இனி – இனிமேல்
  • சாவு – மரணம்
  • என்றுகொல் – என்றைக்கோ?
  • அறியோம் – அறிந்திலோம். ஆதலால் நமது ஆயுள் முடிவதற்குள்
  • ஓர் விளவின் அம் பலத்தை – ஒரு விளாமரத்தில் உள்ள அழகிய பழத்தைக் கண்டு
  • உருத்து – கோபித்து
  • கன்றால் – அசுர ஆவேசம் கொண்ட இளங்கன்றைக் கொண்டு
  • எற்றி – வீசியெறிந்து
  • வீழ்த்தான் – விழச் செய்தவனான திருமாலினது
  • திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • சேர் – இடைவிடாது தியானிப்பாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Saturday, 29 June 2024

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||036. திருத்தெற்றியம்பலம்||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ செங்கண்மால்ரங்கநாதன் பெருமாள்| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கர்
  • பெருமாள் உற்சவர் - பள்ளி கொண்ட ரங்கநாதர்
  • தாயார் மூலவர் - செங்கமலவல்லி
  • தாயார் உற்சவர் - செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சூரிய 
  • விமானம் - வேத
  • ஸ்தல விருக்ஷம் - பூவரசு
  • ப்ரத்யக்ஷம் - செங்கமல நாச்சியார், அநந்தன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கருவறையில் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள் பாலிகின்றனர். செங்கமலவல்லி தாயார் தனி ஸந்நதியில் உள்ளார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார்கள் காட்சியளிக்கின்றனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்' என அழைக்கப் படுகிறது. திருநாங்கூரில் "பள்ளி கொண்ட பெருமாள் கோயில்' என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப் பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலக்ஷ்மி, "பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்க போவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,''என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், "பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?'' என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,'' என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்' என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரக்ஷிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,'' என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலக்ஷ்மியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலக்ஷ்மி, ஆதிசேஷனுக்கு அருள் புரிந்தார். பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் "செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்