About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 008 திருக்கூடலூர். Show all posts
Showing posts with label 008 திருக்கூடலூர். Show all posts

Saturday, 16 September 2023

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||008. திருக்கூடலூர்|| 
||ஸங்கம க்ஷேத்திரம் - ஆடுதுறை - கும்பகோணம்|| 
||எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10 

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1358 - பெரிய திருமொழி - 5.2.1
தாம் தம் பெருமை அறியார்* 
தூது வேந்தர்க்கு ஆய* வேந்தர் ஊர் போல்* 
காந்தள் விரல்* மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும்* கூடலூரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1359 - பெரிய திருமொழி - 5.2.2
செறும் திண்* திமில் ஏறு உடைய* 
பின்னை பெறும் தண் கோலம்* பெற்றார் ஊர் போல்*
நறும் தண் தீம்* தேன் உண்ட வண்டு*
குறிஞ்சி பாடும்* கூடலூரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1360 - பெரிய திருமொழி - 5.2.3
பிள்ளை உருவாய்த்* தயிர் உண்டு* 
அடியேன் உள்ளம் புகுந்த* ஒருவர் ஊர் போல்*
கள்ள நாரை* வயலுள்* 
கயல்மீன் கொள்ளை கொள்ளும்* கூடலூரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1361 - பெரிய திருமொழி - 5.2.4
கூற்று ஏர் உருவின்* குறள் ஆய்* 
நிலம் நீர் ஏற்றான் எந்தை* பெருமான் ஊர் போல்*
சேற்று ஏர் உழவர்* கோதைப் போது ஊண்*
கோல் தேன் முரலும்* கூடலூரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1362 - பெரிய திருமொழி - 5.2.5
தொண்டர் பரவச்* சுடர் சென்று அணவ*
அண்டத்து அமரும்* அடிகள் ஊர் போல்*
வண்டல் அலையுள்* கெண்டை மிளிர*
கொண்டல் அதிரும்* கூடலூரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1363 - பெரிய திருமொழி - 5.2.6
தக்கன் வேள்வி* தகர்த்த தலைவன்*
துக்கம் துடைத்த* துணைவர் ஊர் போல்* 
எக்கல் இடு* நுண் மணல்மேல்* 
எங்கும் கொக்கின் பழம் வீழ்* கூடலூரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1364 - பெரிய திருமொழி - 5.2.7
கருந் தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும் ஊர்போல* 
பெருந் தண் முல்லைப்* பிள்ளை ஓடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1365 - பெரிய திருமொழி - 5.2.8
கலை வாழ்* பிணையோடு அணையும்*  
திருநீர்மலை வாழ் எந்தை* மருவும் ஊர்போல்* 
இலை தாழ் தெங்கின்* மேல்நின்று* 
இளநீர்க் குலை தாழ் கிடங்கின்* கூடலூரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1366 - பெரிய திருமொழி - 5.2.9
பெருகு காதல் அடியேன்* 
உள்ளம் உருகப் புகுந்த* ஒருவர் ஊர் போல்* 
அருகு கைதை மலர* 
கெண்டை குருகு என்று அஞ்சும்* கூடலூரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1367 - பெரிய திருமொழி - 5.2.10
காவிப் பெருநீர் வண்ணன்* 
கண்ணன் மேவித் திகழும்* கூடலூர் மேல்* 
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாட பாவம் போமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Friday, 15 September 2023

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||008. திருக்கூடலூர்|| 
||ஸங்கம க்ஷேத்திரம் - ஆடுதுறை - கும்பகோணம்||
||எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1358 - 1367 - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே*
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்*
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்*
கூடலூராய் இதனைக் கூறு| 

  • விண்டு இலங்கும் – விட்டு விட்டுப் பிரிகாசிக்கின்ற
  • ஆடல் ஊர் – வெற்றி பொருந்திய
  • நேமிமுதல் – சக்கரம் முதலிய
  • ஐம் படையாய் – பஞ்சாயுதங்களை உடையவனே!
  • அன்பு உடையாய் – உயிர்களிடத்தில் நிர்ஹேதுகமான கிருபையை உடையவனே!
  • கூடலூராய் – திருக்கூடலூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • உன் தொண்டனேன் – உனக்கே அடியவனாகிய நான் அவ்வாறு அடிமையாக இருத்தலை விட்டு
  • உண்டு – இனிய உணவுகளைச் சுவைத்தும்
  • கேட்டு – இனிய இசை முதலியவற்றைக் கேட்டும்
  • உற்று – இன்பம் உண்டாக்கும் பொருள்களைப் பரிசித்தும்
  • மோந்து – நறுமணமுள்ள பொருள்களை மோந்தும்
  • பார்க்கும் – நற்காட்சியுள்ள பொருள்களைக் கண்டும் மகிழ்கின்ற
  • ஐவர்க்கே – பஞ்சேந்திரியங்கட்கே
  • தொண்டு படல் ஆமோ – அடிமைப்படுதல் தகுதியாகுமோ?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||008. திருக்கூடலூர்|| 
||ஸங்கம க்ஷேத்திரம் - ஆடுதுறை - கும்பகோணம்||
||எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ பத்மாசினி தாயார் ஸமேத ஸ்ரீ வையம் காத்த பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - வையம் காத்த பெருமாள்
  • பெருமாள் உற்சவர் - ஜகத்ரட்சகன், உய்ய வந்தார்
  • தாயார் மூலவர் - பத்மாசினி
  • தாயார் உற்சவர் - புஷ்பவல்லி 
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சக்கர
  • விமானம் - ஸுந்தர சத்வ
  • ஸ்தல விருக்ஷம் - பலா
  • ப்ரத்யக்ஷம் - நந்தக மாமுனி
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - ஒரு ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தில் பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் "பிரயோகச் சக்கரத்துடன்' இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னனர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். தன் படைகள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரிகளிடம் தன் நாட்டையும் இழந்தார். ஆனாலும் கவலைப்படாத அம்பரீஷன், எப்போதும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒரு சமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்த போது துர்வாச மகரிஷி அவரைப் பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அம்பரீஷன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபித்தார். மகரிஷியின் கோபத்திற்கு ஆளான அம்பரீஷன் மனம் வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டினான். தன் பக்தனை காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார். சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் மகாவிஷ்ணுவை சரணடைந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மகாவிஷ்ணுவும் மன்னித்து அருளினார். பின் அம்பரீஷன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டான். அவனது பெயரால் சுவாமிக்கு "அம்பரீஷ வரதர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழி நடத்தும் என்பது நம்பிக்கை.

உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பர். அந்த நதிகள் எல்லாம் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். இவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரி, தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். அவர் பூலோகில் இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கிக் கொண்டாளாம். முன்னொரு காலத்தில் இக்கோயில் வளாகத்தில் வசித்த கிளியொன்று அருகில் உள்ள நாவல் மரத்தில் இருந்து ஒரு பழத்தை பறித்து வந்து அதனை பெருமாள் முன் வைத்து "ஹரிஹரி' என்று சொல்லி அவரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஒருநாள் அந்த கிளி நாவல் பழம் பறித்துக் கொண்டு வந்தபோது, வேடன் ஒருவன் அதன் மீது அம்பை எய்தான். அம்பு தைத்த கிளி "ஹரிஹரி' என்று சொல்லியபடியே தரையில் வீழ்ந்தது. அருகில் சென்ற வேடன், கிளி பெருமாள் நாமத்தை சொல்லியதைக் கேட்டு பயந்து ஓடிவிட்டான். அப்போது மகாவிஷ்ணு அக்கிளிக்கு காட்சி கொடுத்தார். அதனிடம், "நீ முற்பிறவியில் கற்றிருந்த கல்வியால் செருக்குடன் இருந்தாய். எனவே, கிளியாக சாபம் பெற்ற நீ இப்பிறவியில் என் திருநாமத்தை மட்டும் உச்சரிக்கும் பணியை செய்தாய்'' எனச் சொல்லி சாபவிமோசனம் கொடுத்தார். இங்கு  வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றி இருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்ற போது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் "ஸ்ரீ ஷீக்த ஹோமம்' நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் "கூடலூர்' என்ற பெயர் பெற்றது.

இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங் காத்த பெருமாள்' எனப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்