About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 035 திருதேவனார் தொகை. Show all posts
Showing posts with label 035 திருதேவனார் தொகை. Show all posts

Sunday, 9 June 2024

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||035. திருதேவனார் தொகை||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1248 - பெரிய திருமொழி - 4.1.1
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரை மேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார் தொகையே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1249 - பெரிய திருமொழி - 4.1.2
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மா வரும் திண் படை மன்னை* வென்றி கொள்வார் மன்னு நாங்கை*
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்* திருத்தேவனார் தொகையே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1250 -  பெரிய திருமொழி - 4.1.3
வான் நாடும் மண் நாடும்* மற்று உள்ள பல் உயிரும்*
தான் ஆய எம் பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும் இடம்*
ஆனாத பெருஞ் செல்வத்து* அரு மறையோர் நாங்கை தன்னுள்*
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1251 - பெரிய திருமொழி - 4.1.4
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்று* அருளும் இடம் எழில் நாங்கை*
சுந்தர நல் பொழில் புடை சூழ்* திருத்தேவனார் தொகையே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1252 - பெரிய திருமொழி - 4.1.5
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரை மேல்*
திண் திறலார் பயில் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1253 - பெரிய திருமொழி - 4.1.6
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளி கொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1254 - பெரிய திருமொழி - 4.1.7
ஓடாத வாளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார் தொகையே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1255 - பெரிய திருமொழி - 4.1.8
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1256 - பெரிய திருமொழி - 4.1.9
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்தின்* மணம் கமழும் நாங்கை தன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார் தொகையே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1257 - பெரிய திருமொழி - 4.1.10
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார் தொகை மேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Tuesday, 16 April 2024

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||035. திருதேவனார் தொகை||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1248 - 1257 - நான்காம் பத்து - முதலாம் திருமொழி 

--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்*
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்*
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்*
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து|

  • சீர்க்கும் – சிறப்புப் பெற்ற
  • திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார் தொகை என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற திருமால்
  • பாரிஜாத விருக்ஷத்தைத் தேவ லோகத்தில் இருந்து பேர்த்துக் கொணரும் போது
  • செம் வாய் வைத்து ஊத – பாஞ்ச ஜந்யத்தைத் தமது சிவந்த வாயிலே வைத்து ஊதுகையில்
  • ஆர்க்கும் வலம்புரியால் – பேர் ஆரவாரம் செய்கின்ற அந்த வலம்புரிச் சங்கத்தினால்
  • தரு தேவனார் தொகையும் – கற்பக தருவின் நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்
  • சாய்ந்து – மூர்ச்சித்து விழ 
  • அண்டமும் – அண்டங்களும்
  • எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்
  • கார் கடலும் – கரிய சமுத்திரமும்
  • வெற்பும் – அஷ்ட குல பருவதங்களும்
  • கலங்கின – கலங்கிப் போயின

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 12 April 2024

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||035. திருதேவனார் தொகை||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ கடல் மகள் தாயார் ஸமேத ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - தெய்வ நாயகன்
  • பெருமாள் உற்சவர் - மாதவன்
  • தாயார் மூலவர் - கடல் மகள் நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம் - தேவஸபா, சோபன
  • விமானம் - சோபன
  • ஸ்தல விருக்ஷம் - மா
  • ப்ரத்யக்ஷம் - வஸிஷ்டர்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார் 
  • பாசுரங்கள் - 10

-----------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திருமகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த் தொகை என பெயர் ஏற்பட்டது. கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது சிறப்பு.

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். 

துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப் பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்