About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 039 திரு பார்த்தன்பள்ளி. Show all posts
Showing posts with label 039 திரு பார்த்தன்பள்ளி. Show all posts

Saturday, 15 November 2025

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1318 - பெரிய திருமொழி - 4.8.1
கவள யானைக் கொம்பு ஒசித்த* கண்ணன் என்றும் காமரு சீர்க்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1319 - பெரிய திருமொழி - 4.8.2
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1320 - பெரிய திருமொழி - 4.8.3
அண்டர் கோன் என் ஆனை என்றும்* 
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும்* 
நான்மறைகள் தேடி ஓடும்* செல்வன் என்றும்* 
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
பண்டு போல் அன்று என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1321 - பெரிய திருமொழி - 4.8.4
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம் முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1322 - பெரிய திருமொழி - 4.8.5
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும்* 
மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை*
நின்மலன் தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1323 - பெரிய திருமொழி - 4.8.6
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்* 
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* 
தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1324 - பெரிய திருமொழி - 4.8.7
நாடி என் தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* 
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச்*
செல்வன் என்றும்* சிறை கொள் வண்டு சேடு உலவு* 
பொழில் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்லடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1325 - பெரிய திருமொழி - 4.8.8
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* 
தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*
தேவ தேவன் என்று என்று ஓதி* பலரும் ஏச என் மடந்தை*
பார்த்தன் பள்ளி பாடுவாளே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1326 - பெரிய திருமொழி - 4.8.9
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1327 - பெரிய திருமொழி - 4.8.10
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன் பள்ளிச் செங்கண் மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 12 November 2025

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1318 - 1327 - நான்காம் பத்து - எட்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்*
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த*
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்*
பார்த்தன் பள்ளிக்குள் பணி|

  • ஒத்து - என் நெஞ்சே! ஒன்று கூடி
  • அமரர் - நித்யசூரிகளும், தேவர்களும்
  • ஏத்தும் - துதிக்கின்ற
  • ஒளி விசும்பும் - பேரொளி வடிவமான பரமபதமும்
  • பால்கடலும் - திருப்பாற்கடலும்
  • இ தலத்தில் - இந்தப் பூமியில்
  • காண்பு அரிய - காணுதற்கு அரியனவாம்; ஆதலால், அவைகளை விட்டு
  • சித்து உணர்ந்த - ஜீவாத்மாவின் உண்மை நிலையை உணர்ந்த
  • தீர்த்தன் - பரிசுத்தனான பிரகலாதாழ்வான்
  • பள்ளிக்கு இருந்து - பள்ளிக் கூடத்திலிருந்து பள்ளிக்கூடத்திற் படிக்கின்ற சிறுவனாயிருந்தும்
  • செப்ப - தனது தந்தை வினவியதற்கு “எங்குமுளன்“ என்று மறுமொழிகூற
  • வெளி நின்றானை - அது கேட்டு வெகுண்டு இரணியன் தூணைத் தட்ட அதனினின்று நரஸிங்கமாகி வெளித் தோன்றிய திருமாலை
  • பார்த்தன் பள்ளிக்குள் - திருப்பார்த்தன் பள்ளி என்னும் திவ்ய ஸ்தலத்தில் சென்று
  • பணி - வணங்குவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 3 October 2025

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ தாமரை நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - தாமரையாள் கேள்வன்
  • பெருமாள் உற்சவர் - பார்த்தசாரதி
  • தாயார் மூலவர் - தாமரை நாயகி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கட்க, ஸங்கர ஸரஸ் (கங்கா) 
  • விமானம் - நாராயண
  • ஸ்தல விருக்ஷம் - மூங்கில், நாகலிங்க
  • ப்ரத்யக்ஷம் - பார்த்தன், 11 ருத்திரர்கள், இந்திரன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள் பாலிக்கிறார்.

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இரு தேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண் குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாக குண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண் திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக் குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், "அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,' என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், "கிருஷ்ணா! கிருஷ்ணா!' என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, "இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்