About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

8. ஸ்ரீ ஆளவந்தார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஆளவந்தார்
(யாமுனாசார்யர் - நாதமுனியின் பேரன்)


ஸ்ரீ ஆளவந்தார் (யாமுனாச்சாரி என்றும் அழைக்கப்படுகிறார்) விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய வைணவ ஆசாரியர் ஆவார். இவர் நாதமுனிகளின் பேரனும், ஈசுவரமுனியின் மகனும் ஆவார். இவரது முக்கியப் பணி, இராமானுஜரின் குருவாக இருந்ததும், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை நிலைநிறுத்தியதும் ஆகும். இவர் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.  மணக்கால் நம்பி என்பவரால் இவர் யமுனைத்துறைவன் என்று பெயரிடப்பட்டு, பின்னர் ஆச்சாரிய பட்டத்தையும் பெற்றார். 

ஆளவந்தாருக்கு கடைசி கைங்கர்யம் செய்யும் பொழுது, அவருடைய ஒரு கையில் 3 விரல்கள் மடங்கி இருப்பதை அனைவரும் கவனித்தார்கள். என்ன காரணம் என்று அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் இளையாழ்வார் கேட்க, ஆளவந்தாருக்கு 3 நிறைவேறாத ஆசைகள் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

1. வ்யாஸ மற்றும் பராஸர ரிஷிகளுக்கு நமது க்ருதஜ்ஞதையைக் காட்ட வேண்டும்.
2. நம்மாழ்வரிடம் நமது அன்பைக் காட்ட வேண்டும்.
3. வ்யாஸருடைய ப்ரஹ்ம சூத்திரத்திற்கு விஶிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் படி உரை (பாஷ்யம்) எழுத வேண்டும்.

இதைக்கேட்டவுடன் இளையாழ்வார் இந்த 3 ஆசைகளையும் நிறைவேற்றுவேன் என்று ப்ரதிஜ்ஞை எடுத்தார், உடனே அந்த 3 விரல்களும் நேராக ஆயின. இதைப் பார்த்த அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் மிகவும் ஸந்தோஷமடைந்து, ஆளவந்தார் தன்னுடைய முழுமையான சக்தியையும், க்ருபையையும் கொண்டு இளையாழ்வாரை நன்றாக குளிரக் கடாக்ஷித்திருக்கிறார், அதோடு இளையாழ்வார் தான் அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகர் என்று கூறினார்கள். அனைத்து கைங்கர்யங்களும் முடிந்தவுடன், இளையாழ்வார் ஆளவந்தாரை இழந்த வருத்ததில் நம்பெருமாளை மங்களாஸாஸனம்  செய்யாமலே காஞ்சிபுரத்திற்கு  எழுந்தருளினார்.

ஆளவந்தார் உபய வேதாந்ததிலும் நல்ல பண்டிதராக இருந்தார். அவருடைய க்ரந்தங்களிலிருந்தே அதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
வைணவ ஆச்சார்ய பரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தாரின் பணி மிகவும் போற்றுதற்குரியது. விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை ஸ்தாபிக்க அடிக்கோல் நாட்டியவர் ஸ்ரீமந் நாதமுனிகள் என்றால் அவற்றை உலகில் நன்கு நிலைபெறச் செய்தவர் ஸ்ரீ ஆளவந்தார். வைணவ மதத்தை பரப்பிய மஹாசார்யர்களில் ஆளவந்தார் போன்ற மாமேதைகள் இதற்கு முன் தோன்றியதுமில்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை எனலாம். ஸ்ரீ ராமாநுஜர் “ஸ்ரீ ஆளவந்தாரோடு நான் கூடி இருந்தேனாகில் பரமபதத்திற்கு படி கட்டியிருப்பேன்” என்றும் “ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யன் அன்றோ” என்றும் பறைசாற்றியதிலிருந்து இவருடைய ஒப்புயர்வற்ற பெருமை விளங்கும். இவை அனைத்துக்கும் மேலாக ஸ்ரீ ஆளவந்தார் வைணவ உலகத்துக்கு ஆற்றிய மாபெரும் சேவை காஞ்சிபுரத்தில் குருகுலவாசம் செய்து வந்த நம் ராமாநுஜரைக் கண்டு கொண்டு, அவரை தனக்கடுத்த தர்சன ஸ்தாபகராக அலங்கரிக்கச் செய்ததே ஆகும்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஆளவந்தார் படித்துறை அமைந்துள்ளது. இங்கு தான் ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் மூன்று விரல் மடங்கிய இடம். ஸ்வாமி எம்பெருமானார் முதன்முதலில் ஆளவந்தாரை சேவித்த இடம்.

  • மாதம் - ஆடி
  • திரு நக்ஷத்திரம் - உத்திராடம்
  • அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில்
  • ஆசார்யன் - மணக்கால் நம்பி
  • ஸிஷ்யர்கள் - பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஸ்வராண்டான், ஜீயராண்டான் ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவபெருமாள், மாறனேறி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்க பெருமாள் அரையர் (மணக்கால் நம்பியினுடைய சிஷ்யர் மற்றும் ஆளவந்தாருடைய திருக்குமாரர்), திருக்குருகூர் தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, கோவிந்த தாஸர் (வடமதுரையில் அவதரித்தவர்), நாதமுனி தாஸர் (ராஜ புரோஹிதர்), திருவரங்கத்தம்மான் (ராஜ மஹிஷி) 
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் – திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - சதுஸ் ஸ்லோகீ, ஸ்தோத்ர ரத்னம், ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம், கீதார்த்த சங்ரஹம், பொது தனியன் - நம்மாழ்வார் 

----
தனியன்
யத் பதாம் போரு ஹத்யாந 
வித்வஸ் தாஸே²ஷ கல்மஷ:|
வஸ்து தாமுபயா தோஹம் 
யாமு நேயம் நமாமி தம்||
---- 
வாழி திருநாமம்
1. மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே|
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே|
பச்சையிட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே|
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே|
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே|
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே|
அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே|
ஆளவந்தார் தாளிணைகள் அநவரதம் வாழியே||

2. நாகணையான் வீர நாராயணத்து உதித்தான் வாழியே| 
நற் கடக உத்திராடத்து அவதரித்தான் வாழியே| 
போக முறு மணக்காலான் பொன் அடியோன் வாழியே| 
பொய்யாரும் குமதி மதப் பூண்டு அறுத்தான் வாழியே| 
ஊகமுடைத் தத்வார்த்த நிலை இட்டான் வாழியே| 
உடையவரும் ஈடேற உகந்து இருந்தான் வாழியே| 
அழகாரும் ஆளவந்தார் அடி இணை தான் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment