About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

17. ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை
(ஸ்ரீ சைலேசர்)


ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும்.  அதனால் இவர் திருமலை ஆழ்வார் எனப்பட்டார்.  அவருக்கு ஸ்ரீஸைலேஸர் மற்றும் ஸடகோபதாஸர் என்ற திருநாமமும் உண்டு. எப்பொழுதுமே  இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே இன்றளவும் மிகப் பிரசித்தமாக உள்ளது. 

இவர் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசார்யரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவரது சிஷ்யரானார்.  இவர் சிறு வயதிலேயே சிறந்த  ஞானியாக இருந்தமையால் மதுரையில் இருந்த அரசன் தனக்கு மந்திரியாக இருக்கும்படி ஸ்ரீசைலேசரை வேண்டினான்.  சிறிது காலத்தில் அரசன் இறந்து விட அடுத்து பட்டத்திற்கு வந்த இளவரசருக்கு சிறந்த ஆலோசகராக இருந்து ராஜ்ய பரிபாலனம் சிறப்பாக நடக்க வழி வகுத்தார்.

இவர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த காலத்தில் பிள்ளை லோகாசார்யரின் மற்றொரு சிஷ்யரான கூரகுலோத்தம தாசர் என்பவர் இவரைத் திருத்திப் பணி கொண்டு நம்முடைய சம்பிரதாயத்தில் சிறந்த ஆசார்யராக உருவாக்கினார்.  பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளும் முன்பு இந்த முக்கியமான பொறுப்பை கூரகுலோத்தம தாசரிடம் ஒப்படைத்தார்.  அதன்படி கூரகுலோத்தம தாசரும் எவ்வாறு மணக்கால் நம்பி ஆளவந்தாரை ஆசார்யராக உருவாக்கினாரோ அதே போன்று திருமலை ஆழ்வாரை சிறந்த ஆசார்யராக உருவாக்கும் பொறுப்பினை ஏற்று நடத்தினார்.  திருமலை ஆழ்வார் மந்திரியாக இருக்கும் காலத்தில் வீதி உலா வரும் இடங்களில் கூரகுலோத்தம தாசர் நின்று கொண்டு பாசுரங்களை அநுசந்தித்தார்.  திருமலை ஆழ்வாரும் பாசுரங்களால் ஈர்க்கப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு சிறிது சிறிதாக சம்பிரதாய விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தார்.  கூரகுலோத்தம தாசர் திருநாடு எய்தும் வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.

திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையைச் சந்தித்து திருவாய்மொழியினுடைய அர்த்த விஸேஷங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். திருவய்மொழியினுடைய ஸாராம்ஸத்தைக் கற்றுக் கொடுக்கும் போது, திருமலையாழ்வார் பதவுரைக்கு (வார்த்தைக்கு வார்த்தை) அர்த்தம் கேட்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகக் கூறினார். அதனால் பிள்ளை திருமலையாழ்வரை திருப்புட்குழி ஜீயரிடம் சென்று இவ்வர்த்தத்தைக் கேட்குமாறு நியமித்தார். 

அவர் திருநாடு எய்திய பின், திருமலை ஆழ்வார் ராஜ்ய பதவியைத் துறந்து, நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் ஆழ்வார் திருநகரியை வந்தடைந்தார். பல ஆசார்யர்களிடம் இருந்து சம்பிரதாய விஷயங்களை கற்றுக் கொண்டார். நம்மாழ்வாருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  அதனால் இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனப்பட்டார்.  சடகோபருக்காக வாழ்ந்தவர் எனும் பொருள் படும்படி சடகோப தாசர் என்றும் அழைக்கப்பட்டார். 

  • மாதம் - வைகாசி
  • திரு நக்ஷத்திரம் - விசாகம்
  • அவதார ஸ்தலம் - குந்தீ நகரம் (கொந்தகை)
  • ஆசார்யன் - பிள்ளை லோகாசார்யர்
  • ஸிஷ்யர்கள் - அழகிய மணவாள மாமுனிகள், ஸடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), தத்வேஸ ஜீயர் மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • அருளிச் செய்தவை - பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேஸம்

-----
தனியன்
நம ஸ்ரீ ஸை²ல நாதாய 
குந்தீ நகர ஜந்மநே|
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய 
கைங்கர்ய ஸா²லிநே||
-----
வாழி திருநாமம்
வையகமெண் சடகோபன் மறை வளர்த்தோன் வாழியே|
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே|
ஐயன் அருண் மாரி கலை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
அழகாரும் எதிராசர் அடி பணிவோன் வாழியே|
துய்ய உலகாரியன் தன் துணைப் பதத்தோன் வாழியே|
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே|
தெய்வ நகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே|
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment