About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

9. ஸ்ரீ பெரிய நம்பி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பெரிய நம்பி
(ஸ்ரீ பராங்குச தாசர், மஹா பூர்ணர்)


ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக விசிஷ்டாத்வைத சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவர் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார். இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே.

ஆளவந்தார் என்னும் ஆசாரியர் அவதரித்து, 21 ஆண்டுகள் கழித்து, கி.பி.997-998 ஹேவிநம்பி வருடத்தில், மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில், புதன் கிழமை ப்ருஹச்சரண ப்ராஹ்மண குலத்தில், பாரத்வாஜ கோத்திரத்தில் ஸ்ரீ பராங்குஸதாஸர் என்னும் திருநாமம் உடையவராய், குமுதர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக  அவதரித்தவர் பெரியநம்பி.

எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)செய்த முக்கிய ஆசார்யர் இவர்.  ஆகையால் தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், "பெரியநம்பி" என்று அழைக்கப்பெற்றார்  ஆளவந்தார் நியமனத்தின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்து வந்தார்.   ஆளவந்தார் காலத்திற்குப்பின், ஆளவந்தாருடைய மற்ற சீடர்களாலே ப்ரார்த்திக்கப் பெற்ற இவரே, ஸ்ரீ ராமானுஜருக்கு ஸமாஸ்ரயணம் செய்து அழைத்து வருவதற்காக ஸ்ரீ காஞ்சிக்குப்  புறப்பட்டார்.  அதே சமயம், தேவப் பெருமாளின் (ஸ்ரீ வரதராஜர்) நியமனம் பெற்று, பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக  ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். ஒரே நோக்குடன் புறப்பட்ட  இருவரும், மதுராந்தகம் ஏரி காத்தபெருமாள் கோயிலிலே சந்திக்க, அங்கு "ஸ்ரீ ராமானுஜ  ஸமாஸ்ரயணம்" நxடைபெற்றது. 

பெரியநம்பிகள் தம் ஆசார்யரான ஆளவந்தாரின் மற்றொரு சீடராய், தாழ்ந்த குலத்தில் தோன்றிய  மாறனேறி நம்பி, ஆளவந்தாரை ராஜபிளவை என்னும் கொடிய நோய் தாக்க,  அவருடைய புண்ணைக் கழுவி, மருந்திட்டு, உணவும் அளித்து கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.  அதனால், மற்ற பிராமணர்கள் அவரைத் திட்டுவதையும் அவர் பொருட்படுத்தவில்லை.  ஒரு சமயம், ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் அனுபவிக்கும் உபாதை நோயைத் தனக்குப்  பிரசாதமாக அளிக்க வேண்டும் என்று வேண்ட, ஆளவந்தாரும் அவரது ஆசார்ய பக்தியைப் பார்த்து மகிழ்ந்து, தன் நோயை மாறனேரி நம்பிக்குக் கொடுத்தார். அந்தக் கொடிய நோயை வாங்கிக் கொண்டதால், மாறனேறி நம்பி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே, இந்தப் பூத உடலை விட்டு அகன்று, திருநாடு அலங்கரித்தார்.  மாறனேறி நம்பியின் தியாக உள்ளத்தை மெச்சி, பெரிய நம்பிகள், அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பாராமல், ஆசார்ய பக்தியில், ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயதத்திற்கே ஏற்றம் அளித்தவர் என்று போற்றி, அவருக்கு ஈமச்சடங்குகள் செய்து, அவரைத் திருப்பள்ளிப்படுத்தினார்.  இதை அறிந்த எம்பெருமானார், வர்ணாஸ்ரம தர்மத்தின் வரம்பை மீறி நீர்  இப்படிச் செய்யலாமோ என்று பெரியநம்பிகளிடம் கேட்க, நம்பிகள் அதற்கு, சாமான்ய தர்மத்தை நிலைநாட்டுகிற சக்கரவர்த்தித் திருமகனார் (ஸ்ரீ ராமர்), பக்ஷி ஜாதியான (பறவை) ஜடாயுவுக்கு இறுதிச் சடங்ககுகளைச்  செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அந்தப் பறவையைக் காட்டிலும், இவர் (மாறனேறி நம்பி  சிறியவரோ? என்றும், மேலும் யுதிஷ்டிரர் (தருமர்) விதுரருக்கு (தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகத் தோன்றியவர்) இறுதிக் கிரியைகள்  செய்தாரே!  நான்  என்ன யுதிஷ்டிரரைக் காட்டிலும் பெரியவனோ? மாறனேறி நம்பி விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? என்றும், மேலும், நம்மாழ்வார், "பயிலும் சுடரொளி" என்ற  பதிகத்திலும், "நெடுமாற்க்கடிமை" என்ற பதிகத்திலும், பாகவதர்களின் (பெருமானின் அடியார்கள்) சிறப்பைக்கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும், "என் கொழுகுலந் தாங்களே" என்றும் கூறினவையெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளோ?  அவை  நடப்பிற்கு ஒத்து வராததோ? என்றும் கேட்டு பாகவத உத்தமர்கள் எல்லாவற்றாலும் சிறப்பிக்கப்பட  வேண்டியவர்களே  என்பதை நிலை நிறுத்தினார். இவற்றைக் கேட்ட எம்பெருமானாரும் சந்தோஷம் அடைந்தார்.  இவற்றையெல்லாம் தாம் அறிந்திருந்தாலும், பெரியோர் மூலமாக உணர, உணர்த்த வேண்டும் என்பதற்காகவே  கேட்டேன் என்றாறாம் எம்பெருமானார். 

ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்க, அவருக்குப் பெரியவரான பெரிய நம்பிகள் கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின்  காலில் பெரியவர் விழலாமா,  அதுவும் அவருக்கு ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன் ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே  இருந்ததால், இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந்தாராகவே பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம். 

  • மாதம் - மார்கழி
  • திரு நக்ஷத்திரம் - கேட்டை
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - ஆளவந்தார்
  • ஸிஷ்யர்கள் - எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஸடகோப தாஸர், அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர் 
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - சோழ தேசத்தில் உள்ள பசுபதி கோவில்
  • அருளிச் செய்தவை - அமலனாதிபிரான் தனியன்

-----
தனியன்
1. தநுர் ஜ்யேஷ்டா ஸமுத்பவம் 
யாமுநாங்க்ரி ஸமா ஸ்ரீதம| 
மாஹாபூர்ணம் யதீந்த்ராய 
மந்த்ர ரத்ந ப்ரதம் பஜே|| 

2. கமலாபதி கல்யாண 
குணாம்ருத நிஷேவயா|
பூர்ண காமாய ஸததம் 
பூர்ணாய மஹதே நம:|| 

3. தயா நிக்னம் யதீந்த்ரஸ்ய 
தேசிகம் பூர்ண மாஸ்ரயே|
யேந விஸ்வ ஸ்ருஜோ 
விஷ்ணோ பூர்யத மனோரத:||
-----
வாழி திருநாமம்
1. அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன் வாழியே|
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்பு உடையோன் வாழியே|
ஓங்கு தனுக் கேட்டை தனில் உதித்த பிரான் வாழியே|
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே|
மாறனேர் நம்பிக்கு வாழ்வு அளித்தான் வாழியே|
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே|
எழில் பெரிய நம்பிகள் சரண் இனிது ஊழி வாழியே||

2. மணிமாட மதிள் அரங்கத்து அவதரித்தான் வாழியே| 
மார்கழியினில் கேட்டை மாண வந்தான் வாழியே| 
குணம் மிகுந்த ஆளவந்தார் அடி தொழுவோன் வாழியே| 
குருக்களுக்குள் முக்கியனாய்க் கூற நின்றான் வாழியே| 
துணை கெழு சீர் பராங்குஸற்குத் தொண்டானான் வாழியே| 
துன்பில்லா உடையவர்க்குத் தேசிகன் தான் வாழியே| 
மண மகிழும் தத்துவத்தின் வளம் அளித்தான் வாழியே| 
வன்புகழார்ப் பெரிய நம்பிகள் மலர்ப் பதங்கள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment