About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

12. ஸ்ரீ பராஸர பட்டர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பரார பட்டர்
(கூரத்தாழ்வானின் திருக்குமாரர்)


பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமாநுசரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்டவர் பராஸர பட்டர் என்ற சிறந்த வைணவர். 

எம்பெருமானார் ஆழ்வானை, பராஸர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது ஸந்நிதியில் வைத்துப் பார்த்துக் கொண்டார். ஒரு முறை , பால ப்ராயத்திலே பட்டர் பெரிய பெருமாளை மங்களாஸாஸனம் செய்து வருகையில், எம்பெருமானார் அநந்தாழ்வான் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களிடம் பட்டரைத் தம்மைப் போலவே கொள்ளும் படிக் கூறினார். பட்டர்  தமது சிறு பிராயம் முதலாகவே மிகவும் விலக்ஷணராய்த் திகழ்ந்தார். 

நான்கு வயது சிறுவனாக இருக்கும் போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் பராஸரர். ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியாரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தார். கூட வந்தவர்கள் அவருடைய புலமையையும் எல்லாமறிந்த வல்லமையையும் புகழ்ந்து பேசிக் கொண்டே வந்தனர். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பராஸரர் கையில் ஒரு பிடி மணலை எடுத்தான். பல்லக்கில் இருந்த பெரியார் முன் சென்று 'உமக்கு எல்லாம் தெரியுமாமே, இந்தப் பிடி மணலில் எவ்வளவு மண் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டார். ஸர்வக்ஞப் பட்டர் திகைத்துப் போனார். அவரிடம் பதிலில்லை என்பதை உணர்ந்த பட்டர் 'கைப்பிடி மண்' என்று தன் கேள்விக்கான பதிலை உரைத்தார். தன் தவற்றை உணர்ந்த ஸர்வக்ஞ பட்டர் அந்த சிறுவனைக் கட்டித் தழுவி மனமார ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

  • மாதம் - வைகாசி
  • திரு நக்ஷத்திரம் - அநுஷம்
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - எம்பார்
  • ஸிஷ்யர்கள் - நஞ்சீயர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவைஅஷ்ட ஸ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஸம், பகவத் குண தர்ப்பணம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வியாக்யானம், ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்ரம், பொது தனியன் - ஆழ்வார்கள் உடையவர், திருப்பாவை தனியன், திருவாய்மொழி தனியன்கள், ரங்கநாத அஷ்டகம், த்வரத்னாகரம், நித்ய கிரந்தம், லக்ஷ்மீ கல்யாணம், அத்யாத்ம கண்ட த்வய விவரணம்,  பகவத் குணா தர்பணம், மைவண்ண நருங்குஞ்சி பாசுரம் வியாக்யானம், கைசிக புராண வியாக்யானம், நம்பெருமாள் மீது பல திருமஞ்சன கட்டியம், அர்ச்சாவதார அனுபவம்

-----
தனியன்
ஸ்ரீ பராஸ²ர பட்டார்ய: 
ஸ்ரீரங்கேஸ² புரோஹித:|
ஸ்ரீவத் ஸாங்க ஸுத: ஸ்ரீ
மான் ஸ்²ரேயஸே மேஸ்து பூயஸே||
-----
வாழி திருநாமம்
தென் அரங்கர் மைந்தன் எனச் சிறக்க வந்தோன் வாழியே|
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்பும் அவன் வாழியே|
அன்ன வயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே|
அந வரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே|
மன்னு திருக்கூரனார் வளம் உரைப்போன் வாழியே|
வைகாசி அனுடத்தில் வந்து உதித்தோன் வாழியே|
பன்னு கலை நால் வேதப் பயன் தெரிந்தோன் வாழியே|
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment