||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்
(வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரர்)
ரஹஸ்ய க்ரந்தங்களை இயற்றியவர். திருவரங்கத்தின் உற்சவ விக்கிரகத்தை (நம்பெருமாள்) சுல்தான்கள் படையெடுப்பின் போது பாதுகாத்தவர்.
ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரிய பெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஸிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .
பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஸிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஸித்து வந்தார்.
மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஸங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஸங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஸங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்ய வேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.
- மாதம் - ஐப்பசி
- திரு நக்ஷத்திரம் - திருவோணம்
- அவதார ஸ்தலம் - திருவரங்கம்
- ஆசார்யன் - வடக்குத் திருவீதிப் பிள்ளை
- ஸிஷ்யர்கள் - கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை, திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)
- அருளிச் செய்தவை - யாத்ருச்சிக படி, ஸ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஸேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி, ப்ரமேய ஸேகரம், ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல
-----
தனியன்
லோகாசார்யாய குரவே
க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே|
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட
ஜீவ ஜீவாதவே நம:||
-----
வாழி திருநாமம்
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே|
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே|
முத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்து அருள்வோன் வாழியே|
மூதரிய மணவாளன் முன்பு உதித்தான் வாழியே|
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே|
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே|
உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே|
உலகாரியன் பதங்கள் ஊழி தொறும் வாழியே||
பிள்ளை லோகாசாரியார் மற்றும் அவர் கோஷ்டிக்கு
மங்களாசாசனம்
வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னு குலம்|
வாழி முடும்பை என்னும் மாநகரம்|
வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்|
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment