||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ நம்மாழ்வார்
(ப்ரபந்ந ஜந கூடஸ்தர்)
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆசார்யர்கள் பரம்பரை வளர வேண்டும் என்பதற்காக பெரிய பெருமாள் சேனை முதலியாரைக் கொண்டு நம்மாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்ததாக ஐதீகம். நம்மாழ்வார் பெருமாளின் திருவடியாகவும் (சடாரி) வணங்கப்படுபவர். நம்மாழ்வார் சேனை முதலியாரின் சிஷ்யராகக் கருதப்படுகிறார். இவர் மாறன், ஸடகோபன், பராங்குஸன், வகுளாபரணன், வகுளாபிராமன், மகிழ்மாறன், ஸடஜித், குருகூர் நம்பி என்று பல திருநாமங்களால் போற்றப்படுபவர். திருக்குருகூர் என்றழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில், காரி உடையநங்கை என்பாருக்கு மகனாக, கலியுகம் தொடங்கி சில நாட்களிலே நம்மாழ்வார் பிறந்தார்.
- அம்சம் - ஸேனை முதலியார்
- அவதார ஸ்தலம் - திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
- காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
- வருடம் - பிரமாதி - கலியுகம் தொடங்கி 43 ம் நாள்
- மாதம் - வைகாசி
- திரு நக்ஷத்திரம் - விசாகம்
- திதி - பவுர்ணமி
- கிழமை - வெள்ளி
- தந்தை - காரி
- தாய் - உடைய நங்கை
- ஆசார்யன் - ஸேனை முதலியார்
- ஸிஷ்யர்கள் - மதுரகவியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் வழி மற்றைய ஆசார்யர்கள்
- அருளிச் செய்தவை - 1. திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்) (100 பாசுரங்கள்), 2. திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்) (7 பாசுரங்கள்), 3. பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்) (87 பாசுரங்கள்), 4. திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்) (1102 பாசுரங்கள்)
-----
தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:
ஸர்வம் ய தே³வ நியமேந மத்³ அந்வயா நாம்|
ஆத்³யஸ்யந: குலபதேர் வகுளா பி⁴ராமம்
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரநமாமி மூர்த்⁴நா||
-----
வாழி திருநாமம்
1. ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே|
ஆசிரியம் ஏழு பாட்டும் அளித்த பிரான் வாழியே|
ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே|
இலகு திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு உரைத்தான் வாழியே|
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே|
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே|
ஸேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே|
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே||
2. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே|
வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே|
ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியே|
அனவரதம் ஸேனையர் கோன் அடி தொழுவோன் வாழியே|
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே|
நன் மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே|
மாதவன் பொற் பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே|
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே||
3. திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே|
திருவான திருமுகத்துச் செவி என்றும் வாழியே|
இருக்கு மொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே|
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே|
கருக் குழியில் புகா வண்ணம் காத்து அருள்வோன் வாழியே|
காசினியில் ஆரியனாய்க் காட்டினான் வாழியே|
வருத்தமற வந்ததென்ன வாழ வைத்தான் வாழியே|
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே||
4. திருக்குருகூர்த் திருப்புளியில் வளர்ந்த பிரான் வாழியே|
சேமங்கொள் தென்மறைகள் வெளியிட்டான் வாழியே|
பெருக்கமுற்ற அடி நிலையாய் வந்து உதித்தான் வாழியே|
பெரு நிலைகள் மதுர கவிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
கருத்துடை நாதமுனிக்கும் கருணை செய்தான் வாழியே|
குருக்களுக்குத் திலகம் எனக் கூற நின்றான் வாழியே|
குருகூரன் சடகோபன் குலத் தாள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment