About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

11. ஸ்ரீ எம்பார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ எம்பார்
(கோவிந்தப் பெருமாள் - எம்பெருமானாரின் இளைய சகோதரர்)


மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த  தாஸர், கோவிந்த  பட்டர்  மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார். நாளடைவில் இவர் எம்பார் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். இவர் எம்பெருமானாரின் சிரத்தியார் (சிறிய தாயார்) திருமகனாவார். இவர்  யாதவப்ரகாசரின் வாரணாஸி யாத்திரையில் இளையாழ்வாரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு, இவர் தம் குருவான யாதவப்ரகாஶருடன் வாரணாசி யாத்திரையைத் தொடர்ந்தார் . இந்த யாத்திரையில் இவர் பரமசிவனாரின் பக்தராகி காளஹஸ்தியோடே இருந்து விட்டார்.

இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை செவ்வனே செய்து முடிக்கப் பெரிய திருமலை நம்பிகளை ப்ரார்த்தித்தார். பெரிய திருமலை நம்பிகளும் உடனே உகந்து , காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் வேளையிலே , “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே ” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும் அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தை அனுசந்தித்தார் . இதை கேட்ட கணமே, கோவிந்தப்பெருமாள்  தமது தவறை உணர்ந்து , பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் தானும் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை உபதேசித்தார். 

ஸ்ரீ ராமாநுஜர் திருநாடு அலங்கரித்த பொழுது, அவர் பிரிவை தாங்காமல் முடியாமல் தானும் உடன் உயிர் நீத்தார்.

  • மாதம் - தை
  • திரு நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • அவதார ஸ்தலம் - மதுர மங்கலம்
  • ஆசார்யன் - பெரிய திருமலை நம்பிகள்
  • ஸிஷ்யர்கள் - பராஸர பட்டர் , வேத வ்யாஸ  பட்டர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - விஞ்ஞான ஸ்துதி, எம்பெருமானார் வடிவழகு, பெரிய திருமொழித் தனியன்கள்

-----
தனியன்
1. ராமாநுஜ பதச் சாயா 
கோவிந்தாஹ் வந பாயிநீ|
ததா யத்த ஸ்வரூபா ஸா 
ஜீயாந் மத் விஸ்²ரமஸ் தலீ||

2. புஷ்யே புநர்வ ஸூதிதே 
ஜாதம் கோவிந்த தேசிகம்|
ராமானுஜ பதாம் போஜ 
த்வந்த்வ ப்ரவண மானஸம்||
-----
வாழி திருநாமம்
பூவளரும் திருமகளார் பொலிவு உற்றோன் வாழியே|
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருள் உரைப்போன் வாழியே|
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே|
மகரத்தில் புனர்பூசம் வந்து உதித்தோன் வாழியே|
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே|
திருமலை நம்பிக்கு அடிமை செய்யும் அவன் வாழியே|
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே|
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே||

திருநாள் பாட்டு
மட்டெழு பூம்பொழில் மழலை நன்னகர் வாழ் வளம் ஓங்கிய நாள்| 
வட்ட மணிக்குல மாதவர் மனம் இசை வாழ்ச்சி வளர்ந்திடு நாள்| 
கட்டம் அகன்றொரு கால் இளையாழ்வார் கச்சி பொருந்திய நாள்| 
கட்டவிழும்படி காசினியோர்க்கு ஒரு கற்பகம் ஆகிய நாள்| 
பட்டர் இடர் கெட பாஷ்யக்காரர் தம் பார்வை பலித்திடு நாள்| 
பட்ட பராசரர் பாதுகை ஆக்கிய பரமன் உதித்திடு நாள்| 
பொட்டணி மாதர் தம் பொய்க் கலவிக்கு இருள் போந்தணியா| 
எம்பார் போந்து பிறந்திடும் தை அதனில் புனர்பூசம் அதெனு நாளே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment