About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

10. ஸ்ரீ ராமாநுஜர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ராமாநுஜர் 
(எம்பெருமானார்)


இவரது தந்தை பெயர் ஆருலகேசவ சோமயாகி, தாய் காந்திமதி அம்மையார். தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் காஞ்சிபுரத்திற்கு அருகே யாதவப் பிரகாசரிடம் அத்வைத வேதாந்தம் பயின்றார், ஆனால் குருவின் சில கருத்துக்களுடன் உடன்படவில்லை.

ஆழ்வார் பாடல்களை கோயில்களில் இசையுடன் பாட வழிவகை செய்தார். தமிழ் மறைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் காரணமாக, தமிழ் வேதத்தின் "செவிலித்தாய்" என்று அழைக்கப்படுகிறார்.

விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநாட்டினார். கடவுளின் பார்வையில் அனைத்து உயிரினங்களும் சமம் என்றும், அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிபடுவதன் மூலம் முக்தி கிடைக்கும் என்றும் போதித்தார்.  பிரம்ம சூத்திரத்திற்கு ஶ்ரீ பாஷ்யம் என்ற உரையெழுதினார். வைணவம் மக்கள் இயக்கமாக மலர்வதற்குக் காரணமாக இருந்தார்.

சமூகத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார், இது அன்றைய காலத்திற்கு மிக முக்கியமானது. இவரது போதனைகள் இன்றுவரை செல்வாக்கு செலுத்தி வருகின்றன, மேலும் இவர் இந்தியாவிலும் உலகெங்கிலும் பலரை பாதித்துள்ளார்.

ராமானுஜர் தம் மனைவியிடம் கண்ட மூன்று குற்றங்களால் அவரை விலக்கித் துறவியானார். கூரத்தாழ்வார், முதலியாண்டான் முதலிய பலரும் சீடராயினர். பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகளின்படி பெரிய நம்பிகளிடம் (மதுராந்தகத்தில்) பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்றார். தம் அம்மான் பெரிய திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தனைத் திருத்திப் பழையபடியே வைணவராக்கினார்.

  • மாதம் - சித்திரை
  • திரு நக்ஷத்திரம் - திருவாதிரை
  • அவதார ஸ்தலம் - ஸ்ரீ பெரும்பூதூர்
  • ஆசார்யன் - பெரிய நம்பி
  • ஸிஷ்யர்கள் - கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 ஸிம்ஹாஸநாதிபதிகள், 700 ஸந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் ஸிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருக்கு ஸிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், ஸரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம், பெருமாள் திருமொழி தனியன், பெரிய திருமொழித் தனியன்கள், திருவெழுகூற்றிருக்கை தனியன்கள், பெரிய திருவந்தாதி தனியன்

-----
தனியன்
1. யோ நித்யம் அச்யுத பதா³ம் பு³ஜ யுக்³ம ருக்ம
வ்யாமோ ஹதஸ் ததி³ தராணி த்ருணாய மேநே|
அஸ்மத்³ கு³ரோர் ப⁴க³வ தோஸ்ய த³யைக ஸிந்தோ⁴:
ராமாநுஜஸ்ய சரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே||

2. மேஷார்த்தா சம்பவம் விஷ்ணோர் 
தர்சன ஸ்தாபன உத் ஸூகம்|
துண்டீர மண்டலே சேஷ மூர்த்திம் 
ராமானுஜம் பஜே||
-----
வாழி திருநாமம்
1. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே|
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே|
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே|
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே|
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே|
தொல் பெரிய நம்பிகள் சரண் தோன்றினான் வாழியே|
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே||

2. எண் திசை எண் இளையாழ்வார் எதிராசன் வாழியே|
எழுபத்து நால்வருக்கும் எண் நான்கு உரைத்தான் வாழியே|
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே|
பரகாலன் அடி இணையைப் பரவும் அவன் வாழியே|
தண் தமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே|
தாரணியும் விண் உலகும் தான் உடையோன் வாழியே|
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே|
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே|| 

மாமுநிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியவை
3. சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி|
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி|
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி|
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி|
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி|
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி|
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி|
இனிது இருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே||

4. அறு சமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே|
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத் துறந்தான் வாழியே|
செறுகலியைச் சிறிது மறத் தீர்த்து விட்டான் வாழியே|
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே|
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே|
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே|
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே|
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே||

5. சீராரும் பெரும்பூதூர் சிறக்க வந்தோன் வாழியே| 
சித்திரையில் ஆதிரை நாள் செகத்து உதித்தான் வாழியே| 
ஆராத அருளாளர் அருள் உடையோன் வாழியே| 
அருமறை சொல் பெரிய நம்பிகள் அடி பணிந்தான் வாழியே| 
ஏராரும் பாஷியத்தை ஈன்ற பிரான் வாழியே| 
எழுபத்து நால்வரையும் எமக்கு அளித்தான் வாழியே| 
ஓராத பரசமயக் குறும்பு அறுத்தான் வாழியே| 
ஒளி திகழும் எதிராசர் இணை அடிகள் வாழியே||

திருநாள் பாட்டு
1. சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்|
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்|
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்|
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்|
மன்னிய தென் அரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்|
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே||

2. இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்|
என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான்| 
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின்| 
எதிராசர் தம் பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்||
 
3. ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்|
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்|
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்| 
சித்திரையில் செய்ய திருவாதிரை||
 
4. எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா|
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்| 
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே|
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்||

எம்பார் அருளிய எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தண் பல்லவமே விரலும்|
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்த நன் மருங்கழகும்|
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்|
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்|
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண் அழகும்|
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்|
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்|
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை| 
எனக்கெதிரே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment