||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||
||ஸ்ரீ அண்ணன் பெருமாள் திருக்கோயில்||
||ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர் - கண்ணன், நாராயணன், அண்ணன்
- பெருமாள் உற்சவர் - ஸ்ரீநிவாசன்
- தாயார் மூலவர் - அலர்மேல் மங்கை
- தாயார் உற்சவர் - பூவார் திருமகள், பத்மாவதி
- திருமுக மண்டலம் திசை - கிழக்கு
- திருக்கோலம் - நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம் - வெள்ளக் குளம்
- விமானம் - தத்வரசித
- ஸ்தல விருக்ஷம் - வில்வம், பரசு
- ப்ரத்யக்ஷம் - ருத்ரர், ஸ்வேத ராஜன்
- ஸம்ப்ரதாயம் - தென் கலை
- மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
- பாசுரங்கள் - 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா" என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்" ஆகி விடுகிறார். எனவே தான் இங்குள்ள சீனிவாசப் பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்" என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப் போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "ஸ்ரீநிவாசன்", தாயாரின் திருநாமம் "அலர்மேல்மங்கை". திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்.
ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச் செய்தார். இதனை அறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு" மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்" என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
துந்துமாரன் என்ற அரசனுக்கு ஸ்வேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி ஸ்வேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய "நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை" ஸ்ரீநிவாசப் பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறி வந்தான். மனமிறங்கிய பெருமாள், "ஸ்வேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையாது'' என்று கூறினார். வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்


No comments:
Post a Comment