||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||042. திருக்கோவலூர்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கடலூர்||
||நாற்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 23 - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1078 - பெரிய திருமொழி - 2.4.1
அன்று ஆயர் குலக் கொடியோடு*
அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*
உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*
மா மலை ஆவது நீர்மலையே| (2)
002. திவ்ய ப்ரபந்தம் - 1138 - பெரிய திருமொழி - 2.10.1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர்*
இளந் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே| (2)
003. திவ்ய ப்ரபந்தம் - 1139 - பெரிய திருமொழி - 2.10.2
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*
தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை*
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*
ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1140 - பெரிய திருமொழி - 2.10.3
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம் கொள் பொய்கைக்*
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட*
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1141 - பெரிய திருமொழி - 2.10.4
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1142 - பெரிய திருமொழி - 2.10.5
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடம்தோறும்*
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1143 - பெரிய திருமொழி - 2.10.6
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*
அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு*
வியன் கலை எண் தோளினாள் விளங்கு*
செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1144 - பெரிய திருமொழி - 2.10.7
இருங் கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி*
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*
காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1145 - பெரிய திருமொழி - 2.10.8
பார் ஏறு பெரும் பாரம் தீரப்*
பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்*
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1146 - பெரிய திருமொழி - 2.10.9
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு*
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று*
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*
செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை*
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு*
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1147 - பெரிய திருமொழி - 2.10.10
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*
நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்*
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்*
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே| (2)
012. திவ்ய ப்ரபந்தம் - 1404 - பெரிய திருமொழி - 5.6.7
சிந்தனையைத் தவநெறியைத்* திருமாலை*
பிரியாது வந்து எனது மனத்து இருந்த* வடமலையை*
வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல்*
உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை* யான் கண்டது*
அணி நீர்த் தென் அரங்கத்தே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்