About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 9 December 2025

சித்திரை - ரோஹிணி - ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரோஹிணி நக்ஷத்திரம்

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி 
பாலதந்வி வரதாச்சார்யார்

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - ரோஹிணி

தனியன்
ஸ்ரீமத் கௌஸிக வார் தீந்தும் 
ஸீலாதி குண ஸாகரம்|
ஸ்ரீமத் கநார்ய ஸத் புத்ரம் 
வரதார்யம் அஹம் பஜே||

வாழித் திருநாமம்
1. கௌசிகர் தம் குலத்து உதித்த குணக் கடலோன் வாழியே|
தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயன் அவன் வாழியே|
சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே|
திருவரங்கன் பெரிய கோயில் போற்றும் அவன் வாழியே|
திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே|
காரேய் கருணை இராமாநுசன் கழல் பணிவோன் வாழியே|
பதின்மர் தம் பாசுரத்தில் பற்று உடையோன் வாழியே|
நம் பாலதந்வி வரதாரியன் பொற் பதங்கள் வாழியே||

2. சீராரும் இளையவில்லி இணை அடிகள் வாழியே|
பன்னிரு சீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே|
பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே|
திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே|
திருமுகமும் கருணை மிகுக் கண்ணின் இணைகள் வாழியே|
திருமுடியில் திகழ் அழகுக் குழலொழுங்கும் வாழியே|
தாள் பணிவோர் ஆருரைப் பேணும் அவன் வாழியே|
கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே||

சீர் பாட்டு
1. வாழி இளையவில்லி ஆச்சான்
மாதக வால் வாழும் பால தந்வி வரதாசிரியன்
வாழியவன் ஸரணாகதி மொழிப் பொருளை
சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்|

2. மாலடியார் வாழ மாநகர் அரங்கம் வாழ 
பெரும்பூதூர் மாமுனி தன் மன்னுபுகழ் வாழ
ஆழிசூழ் அனைத்துலகும் தாம் வாழ 
நன்னெறி சேர் ஆத்திகர் புகழ் இளையவில்லி வரதாரியனே 
இன்னுமொரு நூற்றாண்டு இரும்|

வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர், குறிப்பாக ராமானுஜரின் சிறிய தாயாரின் குமாரர், கோயில் கந்தாடை அண்ணனின் தம்பி, மற்றும் பாலதந்வி ஆச்சான் என்றும் போற்றப்பட்டவர். இவர் ஸ்ரீ வைஷ்ணவ மரபில் கொண்டாடப்படும் ஒரு ஞானி. எம்பெருமானாருடைய சிஷ்யர்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர், ஸ்ரீ வைஷ்ணவப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தியுடனும், தத்துவ அறிவும் கொண்டவர். "வாழி இளையவில்லி ஆச்சான், மாதகவால் வாழும் பாலதந்வி" என்ற வரிகள் இவரை வாழ்த்துகின்றன. மேலும் "வரதா" என்ற பெயர் வரத நாராயணரைக் குறிக்கலாம், இவர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருமாளிகை தொடர்பானவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - ரோஹிணி - ஸ்ரீ எங்கள் ஆழ்வான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரோஹிணி நக்ஷத்திரம்

ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
(விஷ்ணுசித்தர்)

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - ரோஹிணி
  • அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)
  • ஆசார்யன் - எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்
  • ஸிஷ்யர்கள் - நடாதூர் அம்மாள்
  • அருளிச் செய்தவை - சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணு புராண வ்யாக்யானம்)

தனியன்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய 
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத:| 
பரேண நோசேந் மமாபி யதி சேகர பாரதீனாம் பாவ: 
கதம் பவிது மர்ஹதி வாக்விதேய:||

வாழித் திருநாமம்
சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே| 
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே| 
பார் புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே| 
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவும் அவன் வாழியே| 
திருக்குருகை பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே| 
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே| 
தாரணியில் விண்டு மதம் தழைக்க வந்தோன் வாழியே| 
தண்ணிளியோன் எங்கள் ஆழ்வான் தாள் இணைகள் வாழியே||

மங்கள ஸ்லோகம்
ரக்தாப் ஜபத்ர நேத்ராய 
ச்வேதாசல நிவாஸிநே|
ஸ்ரீ விஷ்ணு சித்த நிதயேர் 
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்||

ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே  இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்கள் ஆழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது. 

நடாதூர் அம்மாள் தன் பாட்டனாரான நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் செய்ய ஆசைப்பட்டபோது அவர் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் பேரனாரை எங்கள் ஆழ்வானிடம் சென்று கற்குமாறு அனுப்பினார். நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். எங்கள் ஆழ்வான் “வாசலில் நிற்பது யார்?” என்று கேட்டார். அதற்கு அம்மாள் “நான் வரதன்” என்று பதில் கூறினார். அதற்கு ஆழ்வான் “நான்” செத்த பிறகு இங்கு வரவும் என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். அம்மாள் வீட்டிற்கு சென்று தன் பாட்டனாரிடம் நடந்த விஷயத்தைக் கூறி அதன் அர்த்தத்தைக் கேட்டார். ஆழ்வார் தன் பேரனிடம் “நாம் எப்பொழுதும் நம்மை ‘அடியேன் தாஸன்’ என்றே மிகவும் அடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். நாம் எப்பொழுதும் ‘நான்’, ‘என்னுடைய’ என்பது போன்ற அஹங்காரத்தை விளைவிக்கும் வார்த்தைகளை உபயோகப் படுத்தக் கூடாது” என்று கூறினார். “நாம் எல்லோரும் எப்பொழுதும் எம்பெருமானார்க்கும் அவன் அடியவர்களுக்கும் அடியவர்” என்று உணர்ந்து கொண்ட நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வான் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று கூறினார். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த எங்கள் ஆழ்வான், அம்மாளை ஆசையுடன் வரவேற்று அவருக்கு எல்லா ரஹஸ்ய க்ரந்தங்களையும் காலக்ஷேபம் செய்வித்து அருளினார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் மிகப்பெரிய இவரின் ஆசார்யர் ஆன படியால், எங்கள் ஆழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்றே அறியப்பட்டார்.

எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்கள் ஆழ்வானை அழைத்து அவரைத் திருகுருகைப் பிரான் பிள்ளான் திருவடிவாரத்தில் இருக்குமாறு அருளினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - க்ருத்திகை - ஸ்ரீ ஜீயர் நாயனார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

க்ருத்திகை நக்ஷத்திரம் 

ஸ்ரீ ஜீயர் நாயனார்
(மணவாள மாமுனிகளின் பூர்வாஸ்ரம பௌத்ரன்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் - க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - அழகிய மணவாள மாமுநிகள்
  • அருளிச் செய்தவை - ஸ்ரீ நக்ஷத்ர மாலிகை

தனியன்
அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயா சா பூய:
ஸ்வேச்சாவ தீர்ணமிவ ஸௌம்ய வரம் முநீந்த்ரம்| 
ஆசார்ய பௌத்ரம் அபிராம வராபி தாநம் 
அஸ்மத் குரும் பரம காருணிகம் பஜாமி||

வாழித் திருநாமம்
1. சீராரும் வர முனிவன் செழும் குலத்தோன் வாழியே| 
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே| 
பாராரும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே| 
பாடியத்தின் உட்பொருளை பகரும் அவன் வாழியே| 
ஆரம் சூழ் குருகை தனில் அவதரித்தோன் வாழியே| 
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே| 
வரத குரு கருணையினால் வாழ்வு உடையோன் வாழியே| 
வான் சீர் நயினார் மலர்ப் பதங்கள் வாழியே|| 

2. பாகவதர் வாழ பராங்குசன் தன் சீர் வாழ| 
தாமுடன் வந்து அணைந்தோன் தாம் வாழ| 
போதமிகு தென் அரங்கம் வாழ| 
சீயர் நயினார் இன்னமொரு நூற்றாண்டு இரும்||

பெரிய ஜீயர் ஸ்ரீ பாதத்து ஸிஷ்யர்கள் எல்லோரும் தங்கள் புத்திரர்களுக்கு நாயனார் என்று திருநாமம் சாற்றி இருந்த படியால் மூத்த திருக்குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை ஜீயர் நாயனார் என்று குறிப்பிட்டு அழைத்தனர். ஜீயர் நாயனார் பெரிய ஜீயர் திருவடிகளை பிரியாது சேவை செய்து வந்தார். ஜீயர் நாயனார்  உபதேச ரத்தின மாலையை  வடமொழியில் ஸ்லோகமாக எழுதினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Monday, 8 December 2025

சித்திரை - க்ருத்திகை - ஸ்ரீ உய்யக் கொண்டார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

க்ருத்திகை நக்ஷத்திரம் 

1. ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் -  க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் -  திருவெள்ளறை
  • ஆசார்யன் –  நாதமுனிகள்
  • ஸிஷ்யர்கள் - மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குருகூர்
  • அருளிச் செய்தவை -  திருப்பாவை தனியன்கள்

தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத: 
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய 
அஸ்மத் குல நாதாய தீமதே||

2. மேஷ மாஸே சரோஜாஷம் 
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ 
த்வந்த ப்ரவண மாநசம்||

3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம் 
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம் 
சவ்ரேர் அவதாரம் இவா பரம்||

வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||

2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே| 
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே| 
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||

நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர்.   நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார்.    இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார்.  நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||