||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ரோஹிணி நக்ஷத்திரம்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
(விஷ்ணுசித்தர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - ரோஹிணி
- அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)
- ஆசார்யன் - எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்
- ஸிஷ்யர்கள் - நடாதூர் அம்மாள்
- அருளிச் செய்தவை - சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணு புராண வ்யாக்யானம்)
தனியன்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத:|
பரேண நோசேந் மமாபி யதி சேகர பாரதீனாம் பாவ:
கதம் பவிது மர்ஹதி வாக்விதேய:||
வாழித் திருநாமம்
சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே|
சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே|
பார் புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே|
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவும் அவன் வாழியே|
திருக்குருகை பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே|
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே|
தாரணியில் விண்டு மதம் தழைக்க வந்தோன் வாழியே|
தண்ணிளியோன் எங்கள் ஆழ்வான் தாள் இணைகள் வாழியே||
மங்கள ஸ்லோகம்
ரக்தாப் ஜபத்ர நேத்ராய
ச்வேதாசல நிவாஸிநே|
ஸ்ரீ விஷ்ணு சித்த நிதயேர்
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்||
ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்கள் ஆழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.
நடாதூர் அம்மாள் தன் பாட்டனாரான நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் செய்ய ஆசைப்பட்டபோது அவர் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் பேரனாரை எங்கள் ஆழ்வானிடம் சென்று கற்குமாறு அனுப்பினார். நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். எங்கள் ஆழ்வான் “வாசலில் நிற்பது யார்?” என்று கேட்டார். அதற்கு அம்மாள் “நான் வரதன்” என்று பதில் கூறினார். அதற்கு ஆழ்வான் “நான்” செத்த பிறகு இங்கு வரவும் என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். அம்மாள் வீட்டிற்கு சென்று தன் பாட்டனாரிடம் நடந்த விஷயத்தைக் கூறி அதன் அர்த்தத்தைக் கேட்டார். ஆழ்வார் தன் பேரனிடம் “நாம் எப்பொழுதும் நம்மை ‘அடியேன் தாஸன்’ என்றே மிகவும் அடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். நாம் எப்பொழுதும் ‘நான்’, ‘என்னுடைய’ என்பது போன்ற அஹங்காரத்தை விளைவிக்கும் வார்த்தைகளை உபயோகப் படுத்தக் கூடாது” என்று கூறினார். “நாம் எல்லோரும் எப்பொழுதும் எம்பெருமானார்க்கும் அவன் அடியவர்களுக்கும் அடியவர்” என்று உணர்ந்து கொண்ட நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வான் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று கூறினார். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த எங்கள் ஆழ்வான், அம்மாளை ஆசையுடன் வரவேற்று அவருக்கு எல்லா ரஹஸ்ய க்ரந்தங்களையும் காலக்ஷேபம் செய்வித்து அருளினார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் மிகப்பெரிய இவரின் ஆசார்யர் ஆன படியால், எங்கள் ஆழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்றே அறியப்பட்டார்.
எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்கள் ஆழ்வானை அழைத்து அவரைத் திருகுருகைப் பிரான் பிள்ளான் திருவடிவாரத்தில் இருக்குமாறு அருளினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment