||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திருவாதிரை நக்ஷத்திரம்
ஸ்ரீ சோமாசியாண்டான்
(ஸ்ரீ ராம க்ரது நாதார்யர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - திருவாதிரை
- அவதார ஸ்தலம் - காராஞ்சி
- ஆசார்யன் - எம்பெருமானார்
- அருளிச் செய்தவை - ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம்
தனியன்
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர
பாதஸேவைக தாரகம்|
ஸ்ரீராமக்ரதுநாதார்யம்
ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம்||
சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர். எம்பெருமானார் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் இவரே. ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பஞ்சாங்கம் தொகுக்கும் கைங்கர்யம் இவர் பரம்பரையே இன்றும் செய்து வருகிறது. ச்ருத பிரகாசிகா பட்டர், நாயனாராச்சான் பிள்ளை, வேதாந்தாசார்யர் போன்றோர் தம் வ்யாக்யானங்களில் இவரை உதாஹரிக்கின்றனர். க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் நாயனாராச்சான் பிள்ளை இவரது குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.அவர் பாடும் திறமை கொண்டவர், அவர் பாடினால் பெருமாளே ஆடுவார் என்று போற்றப்படுகிறார்.
எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து, திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க, தம் வழிபாட்டுக்கு ஒரு எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக, சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார். அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து, ”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே. நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில் இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ, விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார். எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார். உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம். நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால் உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment