About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

8. ஸ்ரீ ஆளவந்தார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஆளவந்தார்
(யாமுனாசார்யர் - நாதமுனியின் பேரன்)

ஸ்ரீ ஆளவந்தார் (யாமுனாச்சாரி என்றும் அழைக்கப்படுகிறார்) விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய வைணவ ஆசாரியர் ஆவார். இவர் நாதமுனிகளின் பேரனும், ஈசுவரமுனியின் மகனும் ஆவார். இவரது முக்கியப் பணி, இராமானுஜரின் குருவாக இருந்ததும், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை நிலைநிறுத்தியதும் ஆகும். இவர் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.  மணக்கால் நம்பி என்பவரால் இவர் யமுனைத்துறைவன் என்று பெயரிடப்பட்டு, பின்னர் ஆச்சாரிய பட்டத்தையும் பெற்றார். 

ஆளவந்தாருக்கு கடைசி கைங்கர்யம் செய்யும் பொழுது, அவருடைய ஒரு கையில் 3 விரல்கள் மடங்கி இருப்பதை அனைவரும் கவனித்தார்கள். என்ன காரணம் என்று அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் இளையாழ்வார் கேட்க, ஆளவந்தாருக்கு 3 நிறைவேறாத ஆசைகள் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

1. வ்யாஸ மற்றும் பராஸர ரிஷிகளுக்கு நமது க்ருதஜ்ஞதையைக் காட்ட வேண்டும்.
2. நம்மாழ்வரிடம் நமது அன்பைக் காட்ட வேண்டும்.
3. வ்யாஸருடைய ப்ரஹ்ம சூத்திரத்திற்கு விஶிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் படி உரை (பாஷ்யம்) எழுத வேண்டும்.

இதைக் கேட்டவுடன் இளையாழ்வார் இந்த 3 ஆசைகளையும் நிறைவேற்றுவேன் என்று ப்ரதிஜ்ஞை எடுத்தார், உடனே அந்த 3 விரல்களும் நேராக ஆயின. இதைப் பார்த்த அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் மிகவும் ஸந்தோஷமடைந்து, ஆளவந்தார் தன்னுடைய முழுமையான சக்தியையும், க்ருபையையும் கொண்டு இளையாழ்வாரை நன்றாக குளிரக் கடாக்ஷித்திருக்கிறார், அதோடு இளையாழ்வார் தான் அடுத்த தர்ஸன ப்ரவர்த்தகர் என்று கூறினார்கள். அனைத்து கைங்கர்யங்களும் முடிந்தவுடன், இளையாழ்வார் ஆளவந்தாரை இழந்த வருத்ததில் நம்பெருமாளை மங்களாஸாஸனம்  செய்யாமலே காஞ்சிபுரத்திற்கு  எழுந்தருளினார்.

ஆளவந்தார் உபய வேதாந்ததிலும் நல்ல பண்டிதராக இருந்தார். அவருடைய க்ரந்தங்களில் இருந்தே அதை நாம் தெரிந்துகொள்ள முடியும். வைணவ ஆச்சார்ய பரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தாரின் பணி மிகவும் போற்றுதற்குரியது. விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை ஸ்தாபிக்க அடிக்கோல் நாட்டியவர் ஸ்ரீமந் நாதமுனிகள் என்றால் அவற்றை உலகில் நன்கு நிலைபெறச் செய்தவர் ஸ்ரீ ஆளவந்தார். வைணவ மதத்தை பரப்பிய மஹாசார்யர்களில் ஆளவந்தார் போன்ற மாமேதைகள் இதற்கு முன் தோன்றியதுமில்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை எனலாம். ஸ்ரீ ராமாநுஜர் “ஸ்ரீ ஆளவந்தாரோடு நான் கூடி இருந்தேனாகில் பரமபதத்திற்கு படி கட்டியிருப்பேன்” என்றும் “ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யன் அன்றோ” என்றும் பறைசாற்றியதிலிருந்து இவருடைய ஒப்புயர்வற்ற பெருமை விளங்கும். இவை அனைத்துக்கும் மேலாக ஸ்ரீ ஆளவந்தார் வைணவ உலகத்துக்கு ஆற்றிய மாபெரும் சேவை காஞ்சிபுரத்தில் குருகுலவாசம் செய்து வந்த நம் ராமாநுஜரைக் கண்டு கொண்டு, அவரை தனக்கடுத்த தர்சன ஸ்தாபகராக அலங்கரிக்கச் செய்ததே ஆகும்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஆளவந்தார் படித்துறை அமைந்துள்ளது. இங்கு தான் ஸ்ரீ ஆளவந்தார் திருமேனியில் மூன்று விரல் மடங்கிய இடம். ஸ்வாமி எம்பெருமானார் முதன்முதலில் ஆளவந்தாரை சேவித்த இடம்.

  • மாதம் - ஆடி
  • திரு நக்ஷத்திரம் - உத்திராடம்
  • அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில்
  • ஆசார்யன் - மணக்கால் நம்பி
  • ஸிஷ்யர்கள் - பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெயிவவாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈஸ்வராண்டான், ஜீயராண்டான் ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவபெருமாள், மாறனேறி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்க பெருமாள் அரையர் (மணக்கால் நம்பியினுடைய சிஷ்யர் மற்றும் ஆளவந்தாருடைய திருக்குமாரர்), திருக்குருகூர் தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, கோவிந்த தாஸர் (வடமதுரையில் அவதரித்தவர்), நாதமுனி தாஸர் (ராஜ புரோஹிதர்), திருவரங்கத்தம்மான் (ராஜ மஹிஷி) 
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் – திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - சதுஸ் ஸ்லோகீ, ஸ்தோத்ர ரத்னம், ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம், கீதார்த்த சங்ரஹம், பொது தனியன் - நம்மாழ்வார் 

----
தனியன்
யத் பதாம் போரு ஹத்யாந 
வித்வஸ் தாஸே²ஷ கல்மஷ:|
வஸ்து தாமுபயா தோஹம் 
யாமு நேயம் நமாமி தம்||
---- 
வாழி திருநாமம்
1. மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே|
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே|
பச்சையிட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே|
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே|
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே|
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே|
அச்சமற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே|
ஆளவந்தார் தாளிணைகள் அநவரதம் வாழியே||

2. நாகணையான் வீர நாராயணத்து உதித்தான் வாழியே| 
நற் கடக உத்திராடத்து அவதரித்தான் வாழியே| 
போக முறு மணக்காலான் பொன் அடியோன் வாழியே| 
பொய்யாரும் குமதி மதப் பூண்டு அறுத்தான் வாழியே| 
ஊகமுடைத் தத்வார்த்த நிலை இட்டான் வாழியே| 
உடையவரும் ஈடேற உகந்து இருந்தான் வாழியே| 
அழகாரும் ஆளவந்தார் அடி இணை தான் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

7. ஸ்ரீ மணக்கால் நம்பி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ மணக்கால் நம்பி 
(ஸ்ரீராம மிச்ரர்)
மணக்கால் நம்பி, உய்யக்கொண்டாரின் சிஷ்யர். நாதமுனிகள் தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத் துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக் கொண்டாரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக் கொண்டார் தன் இறுதிக் காலத்தில் தனது சிஷ்யன் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசார்யரின், விருப்பப்படி ஈசுரமுனியின் மகனுக்கு 'யமுனைத் துறைவன்' என்று பெயர் சூட்டினார்.

  • மாதம் - மாசி
  • திரு நக்ஷத்திரம் - மகம்
  • அவதார ஸ்தலம் - மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதிக்கரையில் இருக்கும் கிராமம்)
  • ஆசார்யன் - உய்யக் கொண்டார்
  • ஸிஷ்யர்கள் - ஆளவந்தார், திருவரங்கப் பெருமாள் அரையர் (ஆளவந்தாருடைய திருக்குமாரர்), தெய்வதுக்கரசு நம்பி, பிள்ளை அரசு நம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை தாஸர், வங்கிபுரத்து ஆச்சி
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - பெருமாள் திருமொழி தனியன்

----
தனியன்
1. அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் 
அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண|
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவ ராஜ்யம் 
நமாமிதம் ராம மேய ஸத்வம்||

2. கும்ப மாஸே மகோத போதம் 
ராம மிஸ்ரம் உபாஸ்மஹே|
புண்டரீகாக்ஷ பாதாப்ஜ 
ஸமாஸ்ரயண சாலினம்||
----
வாழி திருநாமம்
1. தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே|
தென் அரங்கர் சீர் அருளைச் சேர்ந்து இருப்போன் வாழியே|
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே|
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே|
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே|
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே|
மாசி மகம் தனில் விளங்க வந்து உதித்தான் வாழியே|
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே||

2. உய்யக்கொண்டார் அடியை உகந்து அடைந்தோன் வாழியே| 
ஒப்பில் மணக்கால் பதியில் உதித்து அருளோன் வாழியே|
துய்ய கும்ப மக நாளில் தோன்றல் உற்றோன் வாழியே| 
துயரில் குணக் குழுவாகிச் சகம் புகழ்ந்தோன் வாழியே| 
ஐயமற ஆளவந்தார்க்கு அருள் புரிந்தோன் வாழியே| 
அவர்ப் பணிய அரங்கன் அடி நிதி கொடுத்தான் வாழியே| 
செய்ய தமிழ் மாலைகளைச் சிந்திப்போன் வாழியே| 
சீர் மணக்கால் நம்பிகள் தம் சேவடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

6. ஸ்ரீ உய்யக் கொண்டார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)

திவ்ய தேசத்து எம்பெருமான் திருநாமத்தையே இவருக்கு வைத்தார்கள். இவருக்கு பத்மாக்ஷர் என்ற திருநாமமும் உண்டு, ஆனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக உள்ளது. 

உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான அந்தரங்க ஸிஷ்யர்களாக இருந்தார்கள். நாதமுனிகளுக்குப் பிறகு, உய்யக்கொண்டார் தர்ஸன ப்ரவர்த்தகராக (நம் ஸம்ப்ரதாயத்தைப் பாதுகாத்துப் பரப்புபவர்) ஆனார். அவருடய ஸிஷ்யர்களுக்கு அருளி செயல் மற்றும் சகல அர்த்த விசேஷங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவர் பரமபதத்துக்கு செல்வதற்கு முன், மணக்கால் நம்பி (ப்ரதான அந்தரங்க ஸிஷ்யர்) அடுத்த தர்ஸன ப்ரவர்தகர் யார் என்று கேட்க, அவர் மணக்கால் நம்பியையே  ஸம்ப்ரதாயத்தை வளர்க்குமாறு கூறினார். யமுனைத்துறைவரை அடுத்த தர்ஸன ப்ரவர்த்தகராக உருவாக்குமாறு கட்டளையிட்டார்.

  • மாதம் - சித்திரை
  • திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
  • ஆசார்யன் - நாதமுனிகள்
  • ஸிஷ்யர்கள் - மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
  • அருளிச் செய்தவை - திருப்பாவை தனியன்கள்

----
தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத: 
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் 
குல நாதாய தீமதே||

2. மேஷ மாஸே சரோஜாஷம் 
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ 
த்வந்த ப்ரவண மாநசம்||

3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம் 
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம் சவ்ரேர் 
அவதாரம் இவா பரம்||
----
வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||

2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே| 
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே| 
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

5. ஸ்ரீமந் நாதமுனிகள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமந் நாதமுனிகள்
(ஸ்ரீரங்க நாத முனி)


நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தவர். நம்மாழ்வாரின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பின்பு வாழ்ந்தவர். குடந்தையில் 'ஆரா அமுதே' என்ற நம்மாழ்வார் பாசுரத்தை சிலர் சேவிக்கக் கேட்டு 'குருகூர் சடகோபன்' என அதன் இறுதி வரியில் இருந்த பதத்தைக் கொண்டு மற்ற பாடல்களைத் தேடி திருக்குருகூருக்கு வந்து மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை 12,000 முறை நம்மாழ்வார் இருந்த புளிய மரத்தின் முன் நின்று ஓத, நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தான் இயற்றிய பிரபந்தங்கள் அனைத்தையும் நாதமுனிகளுக்கு அளித்ததாகத் தொன்மம் கூறுகிறது. இதனால் நம்மாழ்வார் நாதமுனியின் ஆசார்யராகவே கருதப்படுகிறார்.

  • மாதம் - ஆனி
  • திரு நக்ஷத்திரம் - அநுஷம்
  • அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)
  • ஸிஷ்யர்கள் - உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான், வானமாமலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான்
  • ஆசார்யன் - நம்மாழ்வார்
  • அருளிச் செய்தவை - நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன், கண்ணிநுண் சிறுத்தாம்பு தனியன்கள், திருவாய்மொழி தனியன்

-----
தனியன்
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட 
ஜ்ஞாந வைராக்ய ராஸயே|
நாதாய முனயே அகாத 
பகவத் பக்தி ஸிந்தவே||
-----
வாழி திருநாமம்
1. ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே|
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே|
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே|
பராங்குசனார் சொல் ப்ரபந்தம் பரிந்து கற்றான் வாழியே|
கானமுறத் தாளத்தில் கண்டு இசைத்தான் வாழியே|
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே|
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே|
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே||

2. சேமம் கொள் வீர நாராயண புரத்தான் வாழியே| 
செல்வ முற்றும் ஆனி தனில் அனிடத்தான் வாழியே| 
தேமருவு தென்குருகூர் நகர் அமர்ந்தான் வாழியே| 
தேசு மிகு சடகோபன் சரண் அடைந்தான் வாழியே| 
நாம் உய்ய நாலாயிரத்தின் பொருள் அளித்தான் வாழியே| 
நன்றாக தாளத்தில் இசைத்து உரைத்தான் வாழியே| 
சீர் முகுத்த யோகமுடைச் செல்வனார் வாழியே| 
திருப்பொலிந்த நாதமுனி திருவடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||