About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 8 December 2025

சித்திரை - க்ருத்திகை - ஸ்ரீ உய்யக் கொண்டார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

க்ருத்திகை நக்ஷத்திரம் 

1. ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் -  க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் -  திருவெள்ளறை
  • ஆசார்யன் –  நாதமுனிகள்
  • ஸிஷ்யர்கள் - மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குருகூர்
  • அருளிச் செய்தவை -  திருப்பாவை தனியன்கள்

தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத: 
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய 
அஸ்மத் குல நாதாய தீமதே||

2. மேஷ மாஸே சரோஜாஷம் 
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ 
த்வந்த ப்ரவண மாநசம்||

3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம் 
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம் 
சவ்ரேர் அவதாரம் இவா பரம்||

வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||

2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே| 
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே| 
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||

நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர்.   நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார்.    இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார்.  நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - அஸ்விநி - ஸ்ரீ வடுக நம்பி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஸ்விநி நக்ஷத்திரம்

1. பண்டிகை
சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு

2. ஸ்ரீ வடுக நம்பி
(ஆந்திர பூர்ணர்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் - அஸ்விநி
  • அவதார ஸ்தலம் - சாளக்ராமம் (கர்நாடகம்)
  • ஆசார்யன் – எம்பெருமானார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - சாளக்ராமம்
  • அருளிச் செய்தவை - யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி   

தனியன்
1. சைத்ரே த்வஸ்²விநி ஸஞ்ஜாதம் 
ஸம்ஸார் ஆர்ண வதாரகம்|
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் 
ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே||
 
2. ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் 
ஸாலக்ராம நிவாஸிநம்|
பஞ்சம உபாய ஸம்பந்நம் 
ஸால க்ராமார்யம் ஆச்ரயே||

3. ராமாநுஜார்ய சரண 
ப்ரவணம் பரதேவவத்| 
வடு பூர்ண மஹம் வந்தே 
பரஜ்ஞாந பயோ நிதம்||

வாழித் திருநாமம்
1. சித்திரையில் அஸ்விநியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே| 
மிதுன ஸாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே| 
அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதல் உற்றான் வாழியே| 
ஆசார்யன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே| 
முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே| 
பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே| 
எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே| 
வடுக நம்பி திருவடிகள் ஊழிதோர் ஊழி வாழியே|| 

2. ஏராரும் சித்திரையில் அசுவதி வந்தான் வாழியே| 
எழில் ஸாலக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே| 
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே| 
எம்பெருமானாரே தெய்வம் என்று அநுஷ்டித்தான் வாழியே| 
அந வரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே| 
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே| 
ஸ்வாச்சார்யர் அஷ்டோத்ர சத நாமங்களை அருளினான் வாழியே| 
ஸ்ரீ ராமாநுஜர் வைபவமே நிரந்தரம் அநுசந்தித்தான் வாழியே| 
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே| 
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே||

வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார். 

வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளை விட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்த படியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப் பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக  மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை மாதம் - Apr Mid - May Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சித்திரை மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

  • 1. சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு - பண்டிகை

அஸ்விநி 

  • 2. ஸ்ரீ வடுக நம்பி (ஆந்திர பூர்ணர்)

க்ருத்திகை

  • 3. ஸ்ரீ உய்யக் கொண்டார் (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)
  • 4. ஸ்ரீ ஜீயர் நாயனார் (மணவாள மாமுனிகளின் பூர்வாஸ்ரம பௌத்ரன்)

ரோஹிணி

  • 5. ஸ்ரீ எங்கள் ஆழ்வான் (விஷ்ணுசித்தர்)
  • 6. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார்

திருவாதிரை

  • 7. ஸ்ரீ ராமாநுஜர் (எம்பெருமானார்)
  • 8. ஸ்ரீ ஆட்கொண்டவில்லி ஜீயர்
  • 9. ஸ்ரீ சோமாசியாண்டான் (ஸ்ரீ ராம க்ரது நாதார்யர்)

புனர்பூசம்

  • 10. ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் - ஸ்ரீராம நவமி - பண்டிகை 
  • 11. ஸ்ரீ முதலியாண்டான் (தாசரதி)

ஆயில்யம்

  • 12. ஸ்ரீ கோயில் கந்தாடை கொமாண்டூர் இளைய வல்லி ஆச்சான் (பாலதந்வி, 74 ஸிம்ஹாஸநாதி பதிகளுள் ஒருவர்)

ஹஸ்தம்

  • 13. ஸ்ரீ தேவப் பெருமாள்
  • 14. ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (ப்ரணதார்த்தி ஹரர்)

சித்திரை

  • 15. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
  • 16. ஸ்ரீ அநந்தாழ்வான் (அநந்தார்யர்)
  • 17. ஸ்ரீ நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யர்)
  • 18. ஸ்ரீ பெரியாண்டான் (சுந்தர சிங்கப் பிரான்)
  • 19. ஸ்ரீ திருத்தாழ்வரை தாசர்

அனுஷம்

  • 20. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர்

திருவோணம்

  • 21. ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (லோகார்ய முநி)
  • 22. ஸ்ரீ ஞான தீருஷ்டீ அழகப்பைய்யங்கார் (ஆத்தான் ஸ்வாமியின் திருக்குமாரர்)
  • 23. ஸ்ரீ விஞ்சிமூர் தாதாச்சாரியார்
  • 24. ஸ்ரீ ஒன்றான திருக்குறுங்குடி ராமாநுஜ ஜீயர்

ரேவதி

  • 25. ஸ்ரீ நம்பெருமாள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

Wednesday, 3 December 2025

18. ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள்
(பெரிய ஜீயர், ரம்யஜா மாத்ரு முனி)

திருவாய்மொழிப் பிள்ளையின் காலத்துக்குப் பின் சிதிலம் அடைந்திருந்த திருவரங்கம் கோயிலை சீர் செய்து, கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர். ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசை மணவாள மாமுநியுடன் முற்றுப் பெறுகிறது.

ரம்யஜாமாத்ரு முநி, வரவர முநி என்று கொண்டாடப்படக் கூடியவர் மணவாள மாமுநிகள். 

இவரது இயற்பெயர் ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தியின் பெயரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பதாகும்.  இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்தில் சிறு வயதில் வாழ்ந்திருந்தார்.  தனது தகப்பனாரிடம் அடிப்படை சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார்.  திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேள்விப்பட்டு மீண்டும் ஆழ்வார் திருநகரி வந்தார்.   திருவாய்மொழிப் பிள்ளையிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யராக ஆச்ரயித்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை சம்பிரதாயத்தின் அர்த்தங்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், வ்யாக்யானங்கள், முக்கியமாக நம்பிள்ளையின் திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி ஈடு (வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடு படுத்தியது) வ்யாக்யானத்தை உபதேசித்தார்.

இவர் ஆதிசேஷனின் புனர் அவதாரம் என்று கருதப்படுகிறார்.  எம்பெருமானார் தமிழ் ப்ரபந்தங்களுக்கு விளக்கங்களோ,  வ்யாக்யானங்களோ அருளிச் செய்யவில்லை.  அந்தக் குறை தீரும்படி மணவாள மாமுநிகளாக மறு அவதாரம் எடுத்து தமிழ் ப்ரபந்தங்களில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்குக் கைங்கர்யங்கள் செய்தார். 

எம்பெருமான் திருவுள்ளப்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார்.  மணவாள மாமுநிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு பலரும் வந்து இவரை ஆசார்யராக ஆஸ்ரயித்தனர்.

ஒரு முறை நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் பூர்த்தியான பின், மணவாள மாமுநிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுநிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் (ஆனி மாதம் திருமூல நக்ஷத்ரத்தன்று) சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுநிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுநிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  மேலும் அர்ச்சகர் மூலமாக எம்பெருமான் ஆவேசித்து மணவாள மாமுநிகளின் திருவிக்ரஹம் அனைத்து திவ்யதேசங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும்,  “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனை சேவாகாலம் தொடக்கத்திலும், முடிவிலும் சேவிக்க வேண்டும் என்று ஸ்ரீமுகம் அருளினான்.  எம்பெருமானே ஆசார்யனாகக் கொண்டாடும் சிறப்புப் பெற்றவர் மணவாள மாமுநிகள்.

  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - மூலம்
  • அவதார ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • ஆசார்யன் - திருவாய்மொழிப் பிள்ளை
  • ஸிஷ்யர்கள் - அஷ்ட திக் கஜங்கள் - பொன்னடிக்கால் ஜீயர், கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் - ஸேனை முதலியாண்டான் நாயனார், ஸடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களில் இருந்தும், திருமாளிகையில் இருந்தும் மற்றும் திவ்ய தேஸங்களில் இருந்தும் மேலும் பல ஸிஷ்யர்கள் இருந்தார்கள்.
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஸதி, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம், திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள்
  • வ்யாக்யானங்கள் - முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களில் இருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும்), இராமானுச நூற்றந்தாதி. ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஸ்லோகங்கள் மற்றும் ஸாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்): ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், தத்வ த்ரயம், ஸ்ரீ வசன பூஷணம்

-----
தனியன்
ஸ்ரீ ஸை²லேஸ² தயா பாத்ரம் 
தீபக்த்யாதி குணார்ணவம்|
யதீந்த்ர ப்ரவணம் வந்தே 
ரம்ய ஜாமாதரம் முநிம்||
-----
வாழி திருநாமம்
1. செய்ய தாமரை தாளினை வாழியே|
சேலை வாழி திருநாபி வாழியே|
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே|
சுந்தரத் திருத்தோளிணை வாழியே|
கையுமேந்திய முக்கோலும் வாழியே|
கருணை பொங்கிய கண்ணினை வாழியே|
பொய்யிலாத மணவாள மாமுநி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே||

அப்பிள்ளை அருளிச் செய்தது
2. இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே|
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணை அடியோன் வாழியே|
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே|
அரவரசப் பெருஞ்சோதி அநந்தன் என்றும் வாழியே|
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே|
ஏராரும் எதிராசர் என உதித்தான் வாழியே|
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தான் வாழியே|
மூதறியும் மணவாள மாமுநிவன் வாழியே||

கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்தது
3. முந்தை மறைத் தமிழ் விரிக்கும் முத்திரைக் கை வாழியே| 
முந்நூலும் திருமார்பும் முக்கோலும் வாழியே| 
உந்தி அமை திருவரையும் உடை அழகும் வாழியே| 
ஒரு நாளும் மறக்க ஒண்ணா ஒளி முறுவல் வாழியே| 
சிந்தை தனை கொண்டு அருளும் திருமேனி வாழியே| 
செழும் கருணை குடி இருக்கும் திரு நயனம் வாழியே| 
வந்தருளி எனை எடுத்த மலர்த் தாள்கள் வாழியே|
மணவாள மாமுனிவன் வாக்கின்பம் வாழியே||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்தது
4. திணைப் பொழுதும் தனை மறவா சிந்தை தந்தோன் வாழியே| 
சீர் திருவாய்மொழிப் பிள்ளை சேவடியோன் வாழியே|
நினைப்பவர்கள் தம் பிறவி தனை நீக்கும் அவன் வாழியே| 
நீள் புவியில் தன் புகழை நிறுத்தினான் வாழியே| 
அனைத்தாழ்வார் கலைப் பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே| 
அழகாரும் எதிராசர்க்கு அன்புடையோன் வாழியே| 
எனைப் போலும் பாவியர்கட்கு இரங்கும் அவன் வாழியே| 
என் அப்பன் மணவாள மாமுனிவன் வாழியே||

அப்புள்ளார் அருளிச் செய்தது
5. சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே|
திரு மருங்கும் துவராடை இடை அழகும் வாழியே| 
ஏராரும் திருமார்பும் புரிநூலும் வாழியே| 
எப்பொழுதும் சங்காழி இலங்கு புயம் வாழியே|
கார் போலும் செங்கை உறை முக்கோலும் வாழியே| 
கருணை குடி கொண்டு அருளும் கண் இணைகள் வாழியே|
வார்க் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே| 
மணவாள மாமனி தன் வடிவழகும் வாழியே||

எறும்பியப்பா அருளிச் செய்தது
6. மல்லிகைகள் வகுள மலர் மண முடியில் நாறும்| 
வம்பவள வாய் அலரில் மொழிகள் மண நாறும்| 
நல்லிசை சேர்ப் பதின்மர் அருள் நற்கலைகள் எல்லாம்| 
நலமுடைய கருணை விழி நாடோறும் மணக்கும்| 
சொல்லரிய பாதம் அபிடேக மண நாறும்| 
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்| 
செல்வ மணவாள மாமுனி லோக குரு எங்கோன்| 
திருவடிகள் அல்லதொரு தெய்வம் அறியேனே|

திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச் செய்தது
7. வாது செயவென்னு சில வாதியர்கள் வந்து தின மனமுறிய நிற்பர் ஒரு பால்|
வாழி எனவே பெரிய சாபம் அறவென்று சிலர் வந்தனைகள் செய்வர் ஒரு பால்|
போதும் இனி வாதம் உன பாதம் அருள் என்றனர் புகழ்ந்து நிற்பர் ஒரு பால்|
பொங்கி வரும் எங்கள் வினை மங்க அருள் என்று சிலர் போற்றி செய்து நிற்பர் ஒரு பால்|
ஈதிவை கிடக்க மறை நூல் தமிழ் தெரிந்தவர் ஏதமற வாழ்வர் ஒரு பால்|
ஏதமற வாதுலர்கள் பேதையர்கள் தாம் இறைஞ்சியே நிற்பர் ஒரு பால்|
மாதகையினால் உலகம் ஏழையும் அளிக்க வல்ல வந்த எதிராசன் அடி சேர்|
மாமுனிவர் தீபம் அருளான மணவாள மாமுனி மன்னும் இடம் வாழும் வளமே||

சீர் பாட்டு
வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மாமுனிவன்
வாழியவன் மாறன் திருவாய்மொழிப் பொருளை 
மாநிலத்தோர் தேறும் படியுரைக்கும் சீர்|

திருநாள் பாட்டு
பொன்னடிக்கால் ஜீயர் அருளிச் செய்தது
1. செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்|
சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடு நாள்|
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள்|
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்|
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்|
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்|
அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்|
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமது எனு நாளே||

பரவஸ்து பட்டர் பிரான் ஜியர் அருளிச் செய்தது
2. சதுமறையின் உபநிடதிவை ஆகிய நாரணன் தாளினை வணங்க வரு நாள்| 
சகல குண ஸம்பன்னர் எதிராசர் பாஷியமும் சற்குறவர் போற்ற வரு நாள்|
மதி தவழும் மணிமாட மதிள் அரங்கேசனார் மாறன் உரை கேட்க வரு நாள்| 
வரை ஆழி புரி சங்கம் ஆரியர்கள் தோளிசைய வைத்தவர் இறைஞ்ச வரு நாள்| 
பதிகள் நூற்றெட்டிலும் ஸ்ரீ சைல மந்திரம் பாகவதர் போற்ற வரு நாள்| 
பல்லாண்டு செப்பினப் பின் இன்னும் ஒரு நூற்றாண்டு பகருபவர் இறைஞ்ச வரு நாள்| 
அதி மதுரகவி எதிராசர் குருகை வண் சடகோபர் தாளினைகள் அணியும் அவர் நாள்| 
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமது எனு நாளே||

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ|
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ| 
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ| 
மணவாள மாமுனியே! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||