||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அஸ்விநி நக்ஷத்திரம்
1. பண்டிகை
சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு
2. ஸ்ரீ வடுக நம்பி
(ஆந்திர பூர்ணர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - அஸ்விநி
- அவதார ஸ்தலம் - சாளக்ராமம் (கர்நாடகம்)
- ஆசார்யன் – எம்பெருமானார்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - சாளக்ராமம்
- அருளிச் செய்தவை - யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி
தனியன்
1. சைத்ரே த்வஸ்²விநி ஸஞ்ஜாதம்
ஸம்ஸார் ஆர்ண வதாரகம்|
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம்
ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே||
2. ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம்
ஸாலக்ராம நிவாஸிநம்|
பஞ்சம உபாய ஸம்பந்நம்
ஸால க்ராமார்யம் ஆச்ரயே||
3. ராமாநுஜார்ய சரண
ப்ரவணம் பரதேவவத்|
வடு பூர்ண மஹம் வந்தே
பரஜ்ஞாந பயோ நிதம்||
வாழித் திருநாமம்
1. சித்திரையில் அஸ்விநியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே|
மிதுன ஸாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே|
அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதல் உற்றான் வாழியே|
ஆசார்யன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே|
முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே|
பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே|
எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே|
வடுக நம்பி திருவடிகள் ஊழிதோர் ஊழி வாழியே||
2. ஏராரும் சித்திரையில் அசுவதி வந்தான் வாழியே|
எழில் ஸாலக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே|
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே|
எம்பெருமானாரே தெய்வம் என்று அநுஷ்டித்தான் வாழியே|
அந வரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே|
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே|
ஸ்வாச்சார்யர் அஷ்டோத்ர சத நாமங்களை அருளினான் வாழியே|
ஸ்ரீ ராமாநுஜர் வைபவமே நிரந்தரம் அநுசந்தித்தான் வாழியே|
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே|
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே||
வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார்.
வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளை விட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.
எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.
வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்த படியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.
ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப் பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment