About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 3 October 2025

திவ்ய ப்ரபந்தம் - 126 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 126 - களிறு துயர் தீர்த்தவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

பதக முதலை* வாய்ப் பட்ட களிறு* 
கதறிக் கை கூப்பி* என் கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள் ஊர்ந்து* அங்கு உறு துயர் தீர்த்த* 
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்| (2)

  • பதகம் - பாதிக்குந் தன்மையை யுடைய
  • முதலை - முதலையின்
  • வாய் - வாயிலே
  • பட்ட - அகப்பட்ட
  • களிறு – ஸ்ரீ கஜேந்த்ராழ்வான்
  • கதறி - தன் வருத்தந்தோன்றக் கூப்பிட்டு
  • கை கூப்பி - கையைக் குவித்துக் கொண்டு
  • என் கண்ணா கண்ணா என்ன - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க முக் கரண வியாபாரங்கள்
  • அங்கு - அப்போதே
  • உதவ - அந்த யானைக்கு உதவும்படி
  • புள் ஊர்ந்து - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
  • உறு துயர் - அந்த யானையின் மிக்க வருத்தத்தை
  • தீர்த்த - போக்கின
  • அதகன் - ஆஸ்ரித ரக்ஷணத்தில் மிடுக்கை யுடையவன்
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல் 

கொடிய முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் என்ற யானை, தான் பகவானுக்காக பறித்து வைத்திருக்கும் பூவை அவனுக்கு சமர்பிக்க முடியாமல் போகப் போகிறதே என்று தவித்து "என் கண்ணா! கண்ணா!" என தும்பிக்கையை தூக்கியவாறே கதற, உடனே தன்னுடைய வாகனமான கருடன் மேலமர்ந்து விரைந்து வந்து யானையின் துயரத்தைப் போக்கின பக்த ரக்ஷகனான கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ தாமரை நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - தாமரையாள் கேள்வன்
  • பெருமாள் உற்சவர் - பார்த்தசாரதி
  • தாயார் மூலவர் - தாமரை நாயகி
  • திருமுக மண்டலம் திசை - மேற்கு
  • திருக்கோலம் - நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம் - கட்க, ஸங்கர ஸரஸ் (கங்கா) 
  • விமானம் - நாராயண
  • ஸ்தல விருக்ஷம் - மூங்கில், நாகலிங்க
  • ப்ரத்யக்ஷம் - பார்த்தன், 11 ருத்திரர்கள், இந்திரன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள் பாலிக்கிறார்.

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இரு தேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண் குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாக குண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண் திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக் குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், "அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,' என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், "கிருஷ்ணா! கிருஷ்ணா!' என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, "இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 94

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 39

ஸ்கந்தம் 03

கபிலர் ஜீவனின் நிலையை மேலும் சொல்லலானார்.

தாயே! முற்பிறவியில் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நரக வாசம் முடித்த பின், ஜீவன் மீண்டும் பிறவியெடுக்க வேண்டி, ஒரு புருஷனின் வீரியத்தில் விந்து மூலம் நுழைந்து ஒரு பெண்ணின் கருப்பையை அடைகிறான்.

கர்மங்களை அனுபவித்துத் தூய்மையாகி வருகிறான் என்றால் அவனுக்கு கர்ம வினைக்கேற்ப பிறவி ஏற்படுவதெங்ஙனம்? முரணாயிருக்கிறதே..

சட்டென்று கேட்டாள்‌ தேவஹூதி.

கலகலவென்று சிரித்த கபிலர், நன்றாகக்‌ கேட்டீர்கள்‌ அம்மா!

சில தீய வினைகளின் பயனை ஜீவனின் உடலால் தாங்க இயலாது. எனவே அவற்றின் பயனை அவன் யாதனா சரீரத்தில் அனுபவித்துக் கழிக்கிறான். அதனால் முற்றிலுமாக வினைகள்‌ அழிந்து விடுவதில்லை.

மற்றைய பாவ புண்யங்களின் பலனை உடல்‌ எடுத்து சுக துக்கங்கள்‌ மூலம் அனுபவித்தே கழிக்க வேண்டியிருக்கிறது. இதில்‌ முரண் ஏதுமில்லை அம்மா.

என்று சொன்னதும் சமாதானமடைந்தாள் அன்னை.

தெய்வச் சேய் தொடந்து மானுடச் சேயைப் பற்றிச் சொல்லத் துவங்கியது.

பெண்ணின் கர்பத்தில் புகும் வீரியம்‌ ஓரிரவில் அவளின் குருதியில் கலக்கிறது.

ஐந்து நாள்களில் நீர்க்குமிழி போல் உருக்கொள்கிறது.


பத்து நாள்களில் ஓர் இலந்தைப் பழ அளவு உள்ளதாக ஆகிறது. பின் சில நாள்களில் மாமிசப் பிண்டமாகவோ, பறவை முதலிய பிறவிகளில்‌ முட்டையாகவோ ஆகிறது.

ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதங்களில் கை கால்களும், மூன்றாவது மாதத்தில் நகங்கள்,எலும்பு, தோல், தோலின் மேல் உரோமங்கள், ஆண், பெண் குறிகள், கண், காது, மூக்கு முதலிய துவாரங்களும்‌ உண்டாகின்றன.

நான்காம் மாதத்தில் ஏழு தாதுக்களும், ஐந்தாம்‌ மாதத்தில் பசி, தாகம் முதலியன ஏற்படுகின்றன.

ஆறாம்‌ மாதத்தில் தொப்புள் கொடியுடன் கூடிய ஜவ்வு கருவைச் சுற்றிக் கொள்கிறது.

இப்போது ஆணாக இருந்தால், வலது புறமாகவும், பெண்ணாக இருந்தால் இடது புறமாகவும் சுழல்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவால் ரத்தம், மாமிசம் ஆகியவை வளர்கிறது. தாய் உண்ணும் சூடான, குளிர்ந்த, காரமான உணவுகள் ஜீவனை பாதிக்கிறது.

அவனைச் சுற்றி மிக மெல்லிய சிற்சிறு ஜவ்வுப் பைகள். அவற்றில் மல மூத்திரங்கள், பித்த நீர், குழாய்களில் பாயும் உதிரம்.


கருப்பையில் இருக்கும் நீருக்குள் மிதக்கிறான். அதில் உண்டாகும் சிற்சிறு புழு பூச்சிகள் அவன் உடலைத் தீண்டுகின்றன.

அதனால் வேதனையடைகிறான். இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே கழிவறைகள்.

அவை சுத்தமாக இல்லையெனில் அவற்றின் துர்நாற்றம் வீட்டுக்குள் வீசினால் நம்மால் வீட்டினுள் இயங்க முடியாது.

கருப்பையைச் சுற்றி மெல்லிய ஜவ்வுப் பைகளுக்குள் விதம் விதமான மலங்களின் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு விருப்பமே இல்லாமல் படுத்துக் கிடக்கிறான்.

கரு, தொப்புள் கொடி யால் சுற்றப்பட்டு, ஜவ்வினால்‌ மூடப்பட்டு, முதுகும் கழுத்தும்‌ வளைந்து கால் மேல் வயிற்றிலும், தலை கீழாகவும் இருக்க கருப்பைக்குள் வாசம் செய்கிறான்.

கை கால்களை அசைக்க இயலாது. நெடு மூச்சு விட இயலாது. அப்போது தெய்வாதீனமாய் அவனுக்கு தான் செய்த கர்மங்களின் ‌நினைவு வருகிறது.

பாவம்!

ஏழாவது மாதம் முதல் சுக துக்கங்களைப் பற்றிய நினைவு உண்டாகி, கருப்பையில் ப்ரசவக் காற்றினால் (சூதிகா வாயு) வருந்தி, அந்த வயிற்றிலேயே புழு போல் நில்லாமல் சுழன்று கொண்டே இருப்பான்.

இவ்வாறு ஏழு தாதுக்களால் ஏற்பட்ட தேகத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும் ஜீவனுக்கு உடல் வேறு ஆன்மா வேறு என்ற ஞானம் தோன்றுகிறது.
இனி என்ன பிறவி வருமோ? என்னென்ன துன்பங்கள் வருமோ?

தன்னைச் சுமக்கும் தாயும், மற்ற உறவினர்களும் இனியாவது பிறவிச் சுழலிலிருந்து விடுபட உதவி செய்வார்களா? அல்லது, உலக வாழ்க்கையில் பணம், மற்றும் வசதிகளைத் தேடி உழலும்படி பணித்து விடுவார்களா? என்று அஞ்சுவான்.

அப்போது தன்னைக் கருப்பையில் இட்ட பகவானை நோக்கி ஒவ்வொரு ஜீவனும் கரம் கூப்பித் தொழுகின்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Saturday, 27 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 149

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 149

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 11

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ந வாஸு தே³வ ப⁴க்தாநாம்‌
அஸு²ப⁴ம்‌ வித்³யதே க்வசித்‌|
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி⁴
ப⁴யம்‌ நைவோ பஜாயதே||

  • ந - இல்லை
  • வாஸுதே³வ - வாஸுதேவருடைய 
  • ப⁴க்தாநாம் - பக்தர்களுக்கு
  • அஸு²ப⁴ம் - தீமை, துன்பம்
  • வித்³யதே - உள்ளது
  • க்வசித் - எப்போதாவது, எங்கும்
  • ஜந்ம - பிறப்பு
  • ம்ருத்யு - மரணம்
  • ஜரா - முதுமை
  • வ்யாதி⁴ - நோய்
  • ப⁴யம் - அச்சம்
  • ந ஏவ - ஒருபோதும் இல்லை
  • உப ஜாயதே - உண்டாகிறது, தோன்றுகிறது

வாஸுதேவருடைய பக்தர்களுக்கு எப்போதும் எந்தத் தீமையும் ஏற்படாது. பிறப்பு, மரணம், முதுமை, நோய் ஆகியவற்றால் உண்டாகும் அச்சமும் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்படாது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்