About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 19 August 2026

ஸ்ரீ ஆதி³ லக்ஷ்மி ஸ்லோகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஆதி³ லக்ஷ்மி

பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லக்ஷ்மியே ஆதி லக்ஷ்மி. ஒவ்வொரு லக்ஷ்மிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு. ஆனால் ஆதிலக்ஷ்மிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலக்ஷ்மியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ண கும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறு பெற வேண்டியது முக்கியம்.

ஸுமனஸ வந்தி³த ஸுந்த³ரி மாத⁴வி
சந்த்³ர ஸஹொத³ரி ஹேம மயே
முனிக³ண வந்தி³த மோக்ஷ ப்ரதா³யனி
மஞ்ஜுல பா⁴ஷிணி வேத³ நுதே|
பங்கஜ வாஸினி தே³வ ஸு பூஜித
ஸத்³ கு³ண வர்ஷிணி ஸா²ந்தி யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத³ன காமினி
ஆதி³ லக்ஷ்மி ஸதா³ பாலய மாம்||

  • ஸுமனஸ வந்தி³த - நல்ல உள்ளம் படைத்தவர்களாலும் தேவர்களாலும் வணங்கப்படுபவளே
  • ஸுந்த³ரி - பேரழகு உடையவளே
  • மாத⁴வி - மாதவனின், திருமாலின் தேவியே
  • சந்த்³ர ஸஹொத³ரி - சந்திரனின் உடன் பிறந்தவளே (பாற்கடலில் தோன்றியவள் என்பதால்)
  • ஹேம மயே - தங்க மயமாக ஒளிர்பவளே
  • முனிக³ண வந்தி³த - முனிவர்களின் கூட்டத்தால் போற்றி வணங்கப்படுபவளே
  • மோக்ஷ ப்ரதா³யனி - மனிதர்களுக்கு முக்தியை, வீடுபேற்றை வழங்குபவளே
  • மஞ்ஜுல பா⁴ஷிணி - மென்மையான மற்றும் இனிமையான சொற்களைப் பேசுபவளே
  • வேத³ நுதே - நான்கு வேதங்களாலும் துதிக்கப்படுபவளே
  • பங்கஜ வாஸினி - தாமரை மலரில் வீற்றிருப்பவளே
  • தே³வ ஸு பூஜித - தேவர்களால் முறைப்படி சிறப்பாக வழிபடப்படுபவளே
  • ஸத்³ கு³ண வர்ஷிணி - நற்குணங்களை மழை போல வாரிப் பொழிபவளே
  • ஸா²ந்தி யுதே - அமைதியே வடிவானவளே, அமைதி நிறைந்தவளே
  • ஜய ஜய ஹே - உனக்கு வெற்றி உண்டாகட்டும்! வெற்றி உண்டாகட்டும்!
  • மது² ஸூத³ன காமினி - மது என்ற அரக்கனை அழித்த மதுசூதனனின், திருமாலின் அன்பிற்குரியவளே
  • ஆதி³ லக்ஷ்மி - ஆதி லட்சுமித் தாயே
  • ஸதா³ - எப்போதும் 
  • பாலய மாம் - என்னை பாதுகாத்து அருள் செய்வாயாக

தேவர்களால் வணங்கப் படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன் மயமானவளே, முனிவர்களால் போற்றப் படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப் படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலக்ஷ்மியின் முதல் உருக் கொண்ட ஆதிலக்ஷ்மியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்! எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழு வெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆதி லக்ஷ்மி நமக்கு அருள் புரிவாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment