About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பதிநான்காவது வார்த்தை

014. அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே|

இவ்வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். ஆழ்வார்கள் பெருமானின் ஒவ்வொரு அம்சமாகப் பிறந்ததாகக் கூறும் வைணவர்கள் நம்மாழ்வாரை மட்டும் விஷ்ணுவின் எட்டு அம்சங்களில் இருந்து சிறிது சிறிதாகப் பெற்று அவதரித்ததாகக் கூறுவர்.


இவர் பிறக்கும் போதே சடம் என்னும் மாயைக்குக் காரணமான வாயுவை வென்றதால் அழுதல், அசைதல் இன்றி ஜடமாக இருந்தார். குழந்தையைப் பெற்றவர்கள் பெருமாள் சந்நிதிக்கு எடுத்துச் சென்றனர். அங்குக் குழ்ந்தை தவழ்ந்து சென்று கோவிலில் இருந்த தலவிருட்சமான உறங்காப் புளியமரப் பொந்தில் சென்று அமர்ந்து யோக நிலையில் இருந்தது.

அயோத்தி சென்ற மதுரகவி ஆழ்வார், தெந்திசையில் இருந்து ஒளி வான்வழி வருவதைக் கண்டு அத்னைத் தொடர்ந்து வந்தார். ஆழ்வார் திருநகிரியை அடைந்தார். அங்கு இருந்த உறங்கா புளிய மரப்பொந்தில் இருந்து ஒளி வருவதையும் அதில் ஒருவர் யோக நிஷ்டையில் இருப்பதையும் கண்டார். அவரது நிஷ்டையைக் கலைக்க ஒரு கல்லை அவர் மீது எறிய படுத்திருந்தவர் கண் திறந்தார்.


மதுரகவி அவரைப் பார்த்து "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்றார்.

நம்மாழ்வார் சிரித்தவாறே, 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார் 

அந்த உடலின் இன்ப துன்பங்களை அனுபவித்து அந்த உடலிலேயே கிடக்கும் என அதற்குப் பொருள்.

நம்மாழ்வாரால் எங்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்த மகாலட்சுமி பெருமாளிடம் விண்னப்பிக்க, அதன் காரணமாக நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் அந்தந்த மூர்த்தியாக அவருக்கு சேவை சாதித்தார்.

பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்ந்த நம்மாழ்வார், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே நான்கு வேதங்களின் சாரமாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற பிரபந்தங்களாக இயற்றினார்.

அதில், திருவந்தாதியில் கூறுகிறார்.

இந்த உலகமும், மேலுலகமும் உன்னிடம் உள்ளன. நீயோ என் செவி வழியாக என் மனதினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கி விட்டாய். எனவே நான் உன்னை விட பெரியவனா அன்றி நீ பெரியவனா என்று எம்பெருமானே நீயே கூறு என்கிறார். ஸ்ரீமன் நாராயணனை பார்த்து நீ சிறியவன் நான் பெரியவன் என்று ஆழ்வார் கூறினார். இந்த ஜகத்தையே தாங்கி கொண்டிருப்பவன் எம்பெருமான். எம்பெருமனோ ஆழ்வாரின் செவி வழியே இருதயத்திற்குள் புகுந்து அதையே பீடமாக வைத்து அமர்ந்திருக்கிறான். அதனால் தான் பெரியன் என்று ஆழ்வார் சொல்கிறார். 

(ஆழ்வார்திருநகரியில் பெருமாள் பங்குனி உத்தரத்தின் போது வீதி புறப்பாடை முடித்துக் கொண்டு காலையில் 9 மணி வாக்கில் தாயார் சந்நிதிக்கு வருவார். பெருமாளுக்கு வேறு நாச்சியார்கள் தொடர்பு காரணமாக தாயார் சந்நிதி கதவை சாத்தி மூடுவர். பெருமாள் எவ்வளவு சொல்லியும் தாயார் சமாதானம் ஆக மாட்டார். நம்மாழ்வார் தாயாரிடம் சென்று சமாதானம் செய்ய, தாயாரும் சம்மதித்து "சரி" என சந்நிதிக் கதவைத் திறக்க சம்மதிப்பார். ஆகவே நம்மாழ்வார் பெருமானை விட பெரியவர் என பெருமைப்படுவதில் தவறில்லை)

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ஆழ்வாரை போல நான் சொல்லவில்லையே! பெருமானையே சேர்த்து நாம் தாங்கணும் என்று ஆழ்வாரை போல நான் ஆசைபடலையே! அந்த பாவசுத்தி என்னிடம் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்|

கடவுள் தான் அழகு, கடவுள் தான் ஆனந்தம், கடவுள் தான் அமைதி. ஆகவே பகவான் பிறக்கப் போகும் இடமும் சூழ்நிலையும் எத்தனை எழிலாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும்! நள்ளிரவு. எங்கும் அமைதி நிலவியது. வானம் துல்லியமாக இருக்க, நட்சத்திரங்கள் பளிச்சென்று பிரகாசித்தன. ரோகிணி நட்சத்திரம் உச்சத்தில் இருந்தது. உலகத்திற்கு மங்கலம் ஏற்படப் போகிறது என்பதை அது காட்டியது. கிருஷ்ணன் உலகத்திற்கு வருவதைக் கண்டு ஆனந்திருப்பது போல் ஏரிகளில் உள்ள தாமரைப் பூக்கள் மலர்ந்து காணப்பட்டன. உலக நாயகனைத் தன் கருவில் தாங்கிக் கொண்டு இருக்கும் தேவகிக்கு நோகக் கூடாது என்பது போல மந்த மாருதம் மெல்லென வீசியது. காடுகளில் அழகிய பறவைகள் புதிய குரலெடுத்துப் பாடின. மயில்கள் நடமாடின. எல்லோர் மனத்திலும் அமைதி நிலவியது. தேவர்கள் பேரிசைகளை முழங்கினர். இறைவன் உலகில் அவதரிக்கப் போவதைக் குறித்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்பத்தில் பூமியின் மீது பூமாரி பொழிந்தனர். 


அதே நள்ளிரவில் எங்கும் ஒரே இருளாக இருந்த அந்நேரத்தில் மகாவிஷ்ணு தேவகிக்குக் கிருஷ்ணன் என்ற குழந்தையாகப் பிறந்தார். வசுதேவர் அந்த அழகிய குழந்தையை உற்று நோக்கினார். திடீரென்று ஓர் அதிசயம் நடந்தது. அதைக் கண்டு வசுதேவர் ஆச்சரியப்பட்டார். பிறந்த குழந்தை சாதரணக் குழந்தையாகத் தோன்றவில்லை. மகாவிஷ்ணுவாகவே அது காட்சியளித்தது. அந்தக் குழந்தைக்குத் தாமரைக் கண்கள், நான்கு கைகள். ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் சக்கரம், ஒரு கையில் கதை, இன்னொரு கையில் தாமரை மலர் இருந்தன. மார்பில் ஸ்ரீவத்ச அடையாளம். காதுகளில் வைடூரிய மணிகள் இழைத்த குண்டலங்கள், கழுத்தில் துளசிமாலை, இடுப்பில் பட்டாடை, இடுப்பை மணிச்சரங்கள் தொங்கும் அழகிய ஒட்டியாணம் அலங்கரித்தது. கங்கணங்கள், கடகங்கள், இன்னும் பல ஆபரணங்கள் உடலை அலங்கரித்தன.


இந்த அழகிய உருவைக் கண்டதும் வசுதேவரின் கண்கள் ஆச்சரியத்தில் பிரகாசித்தன. பிறந்திருக்கும் குழந்தை நாராயணன்தான் என்று அவர் தெரிந்து கொண்டார். 'இத்தனை அழகான குழந்தை பிறந்திருக்கிறது! ஆனால் என்ன பரிதாபம்! கம்சன் சீக்கிரமே இதைக் கொன்றுவிடுவானே! என்று அவர் கவலைப்பட்டார். ஆனால் அடுத்த கணமே 'இது சாதாரண குழந்தையல்ல, இறைவன் மனித உருவில் வந்துள்ளார்' என்று அவர் உணர்ந்ததும் கம்சனைப் பற்றி அவருக்கு இருந்த பயம் விலகியது. கைகூப்பிச் சிரம் தாழ்த்தி அவர் அந்தக் குழந்தையைத் துதிக்கத் தொடங்கினார்.

தங்களுடைய எல்லையற்ற கருணை காரணமாக உலகைக் காப்பாற்ற, என் குலத்தில் தாங்கள் அவதரித்துள்ளீர்கள். என்னுடைய உள்ளக் கிளர்ச்சியை நான் எப்படி விவரிப்பேன்! மனிதர்களுக்குள்ளே நான் மிகவும் பாக்கியசாலி. என் மனைவியோ இறைவனுக்குத் தாய் என்ற அரிய பேற்றைப் பெற்றவள். எங்கள் மீது தங்களுக்கு ஏற்பட்ட கருணைதான் என்னே! இறைவனே! கொடியவனான கம்சன் தாங்கள் எங்கள் குடும்பத்தில் பிறப்பதால் தனக்கு வரப்போகும் அழிவை நினைத்துப் பயந்து எங்களுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கொன்றுவிட்டான். இப்பொழுது தாங்கள் பிறந்ததைக் கேள்விபட்டதும் அவன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 5

குலசேகராழ்வார்
067. திவ்ய ப்ரபந்தம் - 668 - பெருமாள் திருமொழி - 3.1
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* 
இவ் வையம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என் தன் மாலுக்கே| (2)

068. திவ்ய ப்ரபந்தம் - 669 - பெருமாள் திருமொழி - 3.2
நூலின் நேர் இடையார்* திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்* என் தன் மாலுக்கே|

069. திவ்ய ப்ரபந்தம் - 670 -  பெருமாள் திருமொழி - 3.3
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்* 
நல் நாரணன்* நரகாந்தகன் பித்தனே|

070. திவ்ய ப்ரபந்தம் - 671 - பெருமாள் திருமொழி - 3.4
உண்டியே உடையே* உகந்து ஓடும்,* 
இம் மண்டலத்தொடும்* கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்* அரங்கன் வன் பேய் முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே|

071. திவ்ய ப்ரபந்தம் - 672 - பெருமாள் திருமொழி - 3.5
தீதில் நன்னெறி நிற்க* அல்லாது செய்*
நீதியாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்* அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்* தன் பித்தனே|

072. திவ்ய ப்ரபந்தம் - 673 - பெருமாள் திருமொழி - 3.6
எம் பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே|

073. திவ்ய ப்ரபந்தம் - 674 - பெருமாள் திருமொழி - 3.7
எத் திறத்திலும்* யாரொடும் கூடும்* 
அச்சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|

074. திவ்ய ப்ரபந்தம் - 675 - பெருமாள் திருமொழி - 3.8
பேயரே* எனக்கு யாவரும்* 
யானும் ஓர் பேயனே* எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|

075. திவ்ய ப்ரபந்தம் - 676 - பெருமாள் திருமொழி - 3.9
அங்கை ஆழி* அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்* தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்* குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே| (2)

076. திவ்ய ப்ரபந்தம் - 728 - பெருமாள் திருமொழி - 8.10
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே* 
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே* 
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே* 
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ| (2)

திருமழிசையாழ்வார் 
077. திவ்ய ப்ரபந்தம் - 772 - திருச்சந்த விருத்தம் - 3.1 (21)
அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்* 
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய்*
நெருங்க நீ கடைந்த போது* நின்ற சூரர் என் செய்தார்?* 
குரங்கை ஆள் உகந்த எந்தை!* கூறு தேற வேறு இதே|

078. திவ்ய ப்ரபந்தம் - 800 - திருச்சந்த விருத்தம் - 5.1 (49)
கொண்டை கொண்ட கோதை மீது* தேன் உலாவு கூனி கூன்* 
உண்டை கொண்டு அரங்க ஓட்டி* உள் மகிழ்ந்த நாதன் ஊர்*
நண்டை உண்டு நாரை பேர* வாளை பாய நீலமே* 
அண்டை கொண்டு கெண்டை மேயும்* அந்தண் நீர் அரங்கமே|

079. திவ்ய ப்ரபந்தம் - 801 - திருச்சந்த விருத்தம் - 5.2 (50)
வெண் திரைக் கரும் கடல்* சிவந்து வேவ முன் ஒர் நாள்* 
திண் திறல் சிலைக் கை வாளி* விட்ட வீரர் சேரும் ஊர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்* 
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னு சீர் அரங்கமே|

080. திவ்ய ப்ரபந்தம் - 802 - திருச்சந்த விருத்தம் - 6.1 (51)
சரங்களைத் துரந்து* வில் வளைத்து இலங்கை மன்னவன்* 
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன் இடம்*
பரந்து பொன் நிரந்து நுந்தி* வந்து அலைக்கும் வார் புனல்* 
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த* கோயிலே|

081. திவ்ய ப்ரபந்தம் - 803 - திருச்சந்த விருத்தம் - 6.2 (52)
பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்ந்து வந்ததைப்* 
பற்றி உற்று மற்ற தன்* மருப்பு ஒசித்த பாகன் ஊர்*
சிற்றெயிற்று முற்றல் மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்* 
அற்றபற்றர் சுற்றி வாழும்* அந்தண் நீர் அரங்கமே|

082. திவ்ய ப்ரபந்தம் - 804 - திருச்சந்த விருத்தம் - 6.3 (53)
மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முக்கணான்* 
கூடுசேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட* 
வாணன் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால்* 
பீடு கோயில் கூடுநீர்* அரங்கம் என்ற பேரதே|

083. திவ்ய ப்ரபந்தம் - 805 - திருச்சந்த விருத்தம் - 6.4 (54)
இலைத் தலைச் சரம் துரந்து* இலங்கை கட்டழித்தவன்* 
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு* 
அலைத்து ஒழுகு காவிரி* அரங்கம் மேய அண்ணலே|

084. திவ்ய ப்ரபந்தம் - 806 - திருச்சந்த விருத்தம் - 6.5 (55)
மன்னு மாமலர்க் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்* 
பின்னும் ஆயர் பின்னை தோள்* மணம் புணர்ந்து அது அன்றியும்*
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்* 
பொன்னி சூழ் அரங்கம் மேய* புண்டரீகன் அல்லையே|

085. திவ்ய ப்ரபந்தம் - 844 - திருச்சந்த விருத்தம் - 10.3 (93)
சுரும்பு அரங்கு தண் துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே* 
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே*
கரும்பு இருந்த கட்டியே!* கடல் கிடந்த கண்ணனே* 
இரும்பு அரங்க வெஞ்சரம்* துரந்த வில் இராமனே|

086. திவ்ய ப்ரபந்தம் - 870 - திருச்சந்த விருத்தம் - 12.9 (119)
பொன்னி சூழ் அரங்கம் மேய* பூவை வண்ண! மாய! கேள்* 
என்னது ஆவி என்னும்* வல்வினையினுட் கொழுந்து எழுந்து*
உன்ன பாதம் என்னநின்ற* ஒண் சுடர்க் கொழு மலர்* 
மன்ன வந்து பூண்டு* வாட்டம் இன்றி எங்கும் நின்றதே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் – 3 - திருப்பல்லாண்டு 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 3 - இராமனைப் பாடு
திருப்பல்லாண்டு - மூன்றாம் பாசுரம் 

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்* 
வந்து மண்ணும் மணமும் கொண்மின்* 
கூழாட்பட்டு நின்றீர்களை* 
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்*
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்* 
இராக்கதர் வாழ்* 
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப்* 
பல்லாண்டு கூறுதுமே|


இது தொடக்கமாக மூன்று பாசுரங்களில் இவ்வுலக இன்பத்தை விரும்புமவர்கள், ஆத்மாவை அனுபவிக்க விரும்புமவர்கள் மற்றும் பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்கள் ஆகிய மூன்று வர்க்கத்தினரையும் தன்னுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார். இப்பாசுரத்தில், பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை அழைக்கிறார்.

  • வாழ் ஆள் - கைங்கர்யம் பண்ண 
  • பட்டு - தகுதியுடையவர்களாக 
  • நின்றீர் - அடிமையாகி 
  • உள்ளீரேல் வந்து - இருக்க விரும்பினீர்களானால் 
  • மண்ணும் - உற்சவத்திற்கு மண் சுமந்து
  • மணமும் - உத்ஸவத்துக்கு அபிமாகிகளாக  
  • கொண்மின் - இருங்கள் 
  • கூழாட்பட்டு - உணவுக்காக அடிமைகளாக 
  • நின்றீர்களை - நிற்கும் உங்களை 
  • எங்கள் குழுவினில் - எங்களுடைய கோஷ்டியிலே 
  • புகுதலொட்டோம் - நுழைய விட மாட்டோம் 
  • நாங்கள் - நாங்களோவெனில் 
  • ஏழு ஆள் காலும் - ஏழு தலைமுறைகளிலும் 
  • பழிப்பு இலோம் - ஒருவகைக் குற்றமும் இல்லாமலிருப்பவர்கள் 
  • இராக்கதர் வாழ் - அரக்கர்கள் வாழும் 
  • இலங்கை - இலங்கை 
  • பாழ் ஆள் ஆக - வேரோடே அழிந்து போகும் படி 
  • படை - வாநர சேனையைக் கொண்டு
  • பொருதானுக்கு - போர் செய்த பெருமானுக்கு 
  • பல்லாண்டு கூறுதுமே - பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்

ஆழ்வார் அக்கறையுடன் எல்லோரையும் எம்பெருமானை வழிபட அழைக்கிறார். கைங்கர்யமாகிற வாழ்ச்சியை ஆசைப்படுபவர்களானால், விரைவாக வந்து, எம்பெருமானின் உத்ஸவத்துக்கு/ கைங்கர்யத்துக்கு மண் எடுப்பது, விருப்பத்துடன் இருப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள். சோற்றுக்காக ஆசைப்படுபவர்களை எங்கள் கூட்டத்தில் நாங்கள் சேர்ப்பதில்லை. நாங்கள் பல தலைமுறைகளாக கைங்கர்யத்தைத் தவிர வேறு விஷயங்களை ஆசைப்படும் குற்றம் அற்றவர்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையில் இருந்த எதிரிகள் அழியும்படி வில்லெடுத்துப் போர் புரிந்தவனுக்கு நாங்கள் மங்களாசாஸனம் செய்பவர்கள். நீங்களும் எங்களுடன் வந்து பல்லாண்டு பாடுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்