||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||001. திருவரங்கம்||
||ஸ்ரீரங்கம் - திருச்சி||
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 5
குலசேகராழ்வார்
067. திவ்ய ப்ரபந்தம் - 668 - பெருமாள் திருமொழி - 3.1
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்*
இவ் வையம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என் தன் மாலுக்கே| (2)
068. திவ்ய ப்ரபந்தம் - 669 - பெருமாள் திருமொழி - 3.2
நூலின் நேர் இடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று*
மால் எழுந்தொழிந்தேன்* என் தன் மாலுக்கே|
069. திவ்ய ப்ரபந்தம் - 670 - பெருமாள் திருமொழி - 3.3
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்*
நல் நாரணன்* நரகாந்தகன் பித்தனே|
070. திவ்ய ப்ரபந்தம் - 671 - பெருமாள் திருமொழி - 3.4
உண்டியே உடையே* உகந்து ஓடும்,*
இம் மண்டலத்தொடும்* கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்* அரங்கன் வன் பேய் முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே|
071. திவ்ய ப்ரபந்தம் - 672 - பெருமாள் திருமொழி - 3.5
தீதில் நன்னெறி நிற்க* அல்லாது செய்*
நீதியாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்* அரங்கன் அந் தாமரைப்*
பேதை மா மணவாளன்* தன் பித்தனே|
072. திவ்ய ப்ரபந்தம் - 673 - பெருமாள் திருமொழி - 3.6
எம் பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே|
073. திவ்ய ப்ரபந்தம் - 674 - பெருமாள் திருமொழி - 3.7
எத் திறத்திலும்* யாரொடும் கூடும்*
அச்சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|
074. திவ்ய ப்ரபந்தம் - 675 - பெருமாள் திருமொழி - 3.8
பேயரே* எனக்கு யாவரும்*
யானும் ஓர் பேயனே* எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே|
075. திவ்ய ப்ரபந்தம் - 676 - பெருமாள் திருமொழி - 3.9
அங்கை ஆழி* அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்* தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்* குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே| (2)
076. திவ்ய ப்ரபந்தம் - 728 - பெருமாள் திருமொழி - 8.10
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ| (2)
திருமழிசையாழ்வார்
077. திவ்ய ப்ரபந்தம் - 772 - திருச்சந்த விருத்தம் - 3.1 (21)
அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்*
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய்*
நெருங்க நீ கடைந்த போது* நின்ற சூரர் என் செய்தார்?*
குரங்கை ஆள் உகந்த எந்தை!* கூறு தேற வேறு இதே|
078. திவ்ய ப்ரபந்தம் - 800 - திருச்சந்த விருத்தம் - 5.1 (49)
கொண்டை கொண்ட கோதை மீது* தேன் உலாவு கூனி கூன்*
உண்டை கொண்டு அரங்க ஓட்டி* உள் மகிழ்ந்த நாதன் ஊர்*
நண்டை உண்டு நாரை பேர* வாளை பாய நீலமே*
அண்டை கொண்டு கெண்டை மேயும்* அந்தண் நீர் அரங்கமே|
079. திவ்ய ப்ரபந்தம் - 801 - திருச்சந்த விருத்தம் - 5.2 (50)
வெண் திரைக் கரும் கடல்* சிவந்து வேவ முன் ஒர் நாள்*
திண் திறல் சிலைக் கை வாளி* விட்ட வீரர் சேரும் ஊர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னு சீர் அரங்கமே|
080. திவ்ய ப்ரபந்தம் - 802 - திருச்சந்த விருத்தம் - 6.1 (51)
சரங்களைத் துரந்து* வில் வளைத்து இலங்கை மன்னவன்*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன் இடம்*
பரந்து பொன் நிரந்து நுந்தி* வந்து அலைக்கும் வார் புனல்*
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த* கோயிலே|
081. திவ்ய ப்ரபந்தம் - 803 - திருச்சந்த விருத்தம் - 6.2 (52)
பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்ந்து வந்ததைப்*
பற்றி உற்று மற்ற தன்* மருப்பு ஒசித்த பாகன் ஊர்*
சிற்றெயிற்று முற்றல் மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்*
அற்றபற்றர் சுற்றி வாழும்* அந்தண் நீர் அரங்கமே|
082. திவ்ய ப்ரபந்தம் - 804 - திருச்சந்த விருத்தம் - 6.3 (53)
மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முக்கணான்*
கூடுசேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட*
வாணன் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால்*
பீடு கோயில் கூடுநீர்* அரங்கம் என்ற பேரதே|
083. திவ்ய ப்ரபந்தம் - 805 - திருச்சந்த விருத்தம் - 6.4 (54)
இலைத் தலைச் சரம் துரந்து* இலங்கை கட்டழித்தவன்*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு*
அலைத்து ஒழுகு காவிரி* அரங்கம் மேய அண்ணலே|
084. திவ்ய ப்ரபந்தம் - 806 - திருச்சந்த விருத்தம் - 6.5 (55)
மன்னு மாமலர்க் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்*
பின்னும் ஆயர் பின்னை தோள்* மணம் புணர்ந்து அது அன்றியும்*
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்*
பொன்னி சூழ் அரங்கம் மேய* புண்டரீகன் அல்லையே|
085. திவ்ய ப்ரபந்தம் - 844 - திருச்சந்த விருத்தம் - 10.3 (93)
சுரும்பு அரங்கு தண் துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே*
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே*
கரும்பு இருந்த கட்டியே!* கடல் கிடந்த கண்ணனே*
இரும்பு அரங்க வெஞ்சரம்* துரந்த வில் இராமனே|
086. திவ்ய ப்ரபந்தம் - 870 - திருச்சந்த விருத்தம் - 12.9 (119)
பொன்னி சூழ் அரங்கம் மேய* பூவை வண்ண! மாய! கேள்*
என்னது ஆவி என்னும்* வல்வினையினுட் கொழுந்து எழுந்து*
உன்ன பாதம் என்னநின்ற* ஒண் சுடர்க் கொழு மலர்*
மன்ன வந்து பூண்டு* வாட்டம் இன்றி எங்கும் நின்றதே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment