About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றியவர் வேத வியாசர். இயற்பெயர் கிருஷ்ண த்வைபாயனர். வேதங்களை பிரித்து வியாசம் பண்ணியதால் வியாசர் என்றழைக்கப்படுகிறார். 

அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித். பரிக்ஷித் ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு முனிவரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அங்கு சமீகர் என்கிற முனிவர் தியானத்தில் இருந்தார். அவரிடம் தான் பரிக்ஷித் மன்னன் என்றும் தான் அம்பு எய்த ஒரு மானை தேடி வந்ததாகவும், அந்த மானை பார்த்தீரா என்று பல முறை வினவியும் அவர் மௌன விரதத்தில் இருந்ததால் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரிக்ஷித் அங்கு கிடந்த ஒரு இறந்த பாம்பை தான் வில்லினால் எடுத்து அவர் தோளில் போட்டு விட்டு சென்று விட்டான். ஆனால் அந்த துறவி அதனால் கோபப்படவே இல்லை. அவரது மகன் சிருங்கி, தவத்தில் சிறந்தவன், ஆனால் கோபக்காரன். அவன் நடந்ததை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தான். தன் தந்தையை அவமானப்படுத்திய அந்த பரிக்ஷித் மன்னன் இன்னும் ஏழு இரவுகளுக்குள் கடும் விஷமுடைய தக்ஷகன் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டு மரணமடைவனாக என்று கடும் சாபத்தை கொடுத்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரிக்ஷித் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.

சுக பிரம்ம ரிஷியிடம் 'எது ஒருவனுக்கு  உயர்ந்த லக்ஷியம்? மரணமடையுமுன்  நான்  என்ன  செய்ய வேண்டும்? மனிதனானவன் எதை கேட்க வேண்டும், செய்ய வேண்டும், ஞாபகம் கொள்ள வேண்டும்? என்று கேட்கிறான். இந்த கேள்வியில் ஆரம்பித்து சுக பிரம்ம ரிஷி மற்றும் பரிக்ஷித் இவர்களுக்குள் நடந்த சம்பாதனை ஏழு நாட்களாக நடந்தது. அதுவே பாகவதம். அதில்  ப்ரம்மாவும்  நாரதரும்,  விதுரரும் மைத்ரேயரும்  யுதிஷ்டிரனும் நாரதரும்,   கிருஷ்ணனும் உத்தவரும்,  பரிமாறிக் கொண்ட  சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான  ஹரியை  எனக்குக்  காட்டி விட்டீர்களே. வேறு என்ன  வேண்டும்? என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த  தக்ஷகன் என்கிற சர்ப்பம்  தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும்  வருத்தமோ, கவலையோ இல்லை என்றான். அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார். அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||வியாஸர் வணக்கம்||

வ்யாஸாய விஷ்ணு ரூபாய: 
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே| 
நமோ வை ப்³ரஹ்ம நித⁴யே 
வாஸிஷ்டா²ய நமோ நம:|| 

  • வ்யாஸாய - வியாசருக்கு, வியாச முனிவருக்கு
  • விஷ்ணு - விஷ்ணுவாகிய
  • ரூபாயஹ் - வடிவம் கொண்டவருக்கு
  • வ்யாஸ - வியாசரின்
  • ரூபாய - வடிவமாக இருப்பவருக்கு
  • விஷ்ணுவே - விஷ்ணுவே
  • நமோ - வணக்கம், நமஸ்காரம்
  • வை - நிச்சயமாக, உண்மையாக
  • ப்³ரஹ்ம - பரம்பொருள், பிரம்மம்
  • நித⁴யே - களஞ்சியமாக இருப்பவருக்கு, இருப்பிடமாக இருப்பவருக்கு
  • வாஸிஷ்டா²ய - வசிஷ்ட முனிவரின் வழிவந்தவருக்கு
  • நமோ - வணக்கம்
  • நமஹ - மீண்டும் வணக்கம்

விஷ்ணு வடிவமாக உள்ள வியாஸராகவும், வியாஸர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வஸிஷ்டர் குலத் தோன்றலாகிய வியாஸ பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

மூன்றாவது வார்த்தை

003. தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே|

கிருஷ்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில் விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும் செல்வான். கிருஷ்ணன், பலராமர் மற்றும் பல யாதவ குழந்தைகள் நித்தியபடி சாப்பாடு கட்டிக் கொண்டு, காட்டிற்கு தங்கள் மாடுகளை கூட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு போவது வழக்கம். அப்படி ஒரு நாள் போகும் போது சாப்பாடு எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டனர். அனைவர்க்கும் அன்று மத்தியானப் பொழுதில் நல்ல பசி. சுற்றும் முற்றும் பார்த்தான் கண்ணன். பக்கத்தில் ஒரு இடத்தில் ரிஷிகள் எல்லோருமாக சேர்ந்து ஒரு யாகம் பண்ணுவதை கேள்விபட்டான். 


அங்கு போனால் நிறைய உணவு கிடைக்கும் என்றெண்ணி மற்ற பிள்ளைகளிடத்தில், "இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று, நான் கேட்டேன்னு சொல்லி உணவு வாங்கி கொண்டு வாங்க" என்று சொல்லி அனுப்பினார். அவர்களும் சென்று ரிஷிகளிடம், "கண்ணன் அருகில் தான் இருக்கிறான். அவனுக்கு பசிக்கிறது உணவு வேண்டும்" என்று கேட்டனர். ஆனால் யாதவர்கள் சென்று பிராமணர்களை கேட்ட போது, அமைதியாக அவர்களை புறக்கணித்தனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து உணவு கொடுக்கவில்லை யாதவர்கள் மிகவும் சோகத்தோடு கிருஷ்ணனிடம் திரும்பி வந்து என்ன நடந்தது என்று கூறினர்.  யாதவர்கள் சொன்னதை கேட்டு, பின் பிராமணர்களின் மனைவிகளை பற்றி யாதவர்களிடம் கூறி, ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம் சென்று "கிருஷ்ணனும் பலராமனும் மிகவும் பசியோடு இருக்கிறார்கள், உணவு கேட்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்றார். 


அப்பெண்கள் யாதவர்கள் சொன்னதை கேட்டதும், கிருஷ்ணனையும் பலராமனையும் பார்க்க மிகவும் ஆவல் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் பலவகையான உணவுகளை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றனர்.  அவர்கள் கொண்டு வந்ததை ஏற்றுக் கொண்டு உணவருந்தினார்கள். தங்களின் கணவர்களின் தவறை மன்னிக்கும் படியும் அப்பெண்கள் கேட்டுக் கொண்டனர். "சரி மன்னித்து விட்டேன், போய் வாருங்கள். அவரவர் கணவன்மார்களின் கடமையில் உதவியாக இருங்கள்" என்று கிருஷ்ணன் கூறினார். "அவர்கள் பண்ணின தவறுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விட்டோம். ஆனால் அவர்களுக்கு இது புரிய போவது இல்லை. ஆசிரமத்துக்கு திரும்ப போனால் எங்களை கோபித்துக் கொள்வார்களே" என்று அப்பெண்கள் கூறினர். "அவர்கள் அபச்சாரம் பண்ணிணதோடு இல்லாமல் உங்களையும் கோபித்துக் கொள்வார்களோ? 



சரி  உங்களை கோபித்துக் கொள்ளாமல் இருக்க வரம் தருகிறேன். அவர்களுக்கு இது மறந்து போய்விடும். நீங்கள் போய்ட்டு வாருங்கள்" என்றார் கிருஷ்ணன். சரி என்று சொல்லி அனைவரும் கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் கணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர். புறப்பட்டு போனார்கள் ஒருத்தியை தவிர. அவள் மட்டும் கண்ணன் திருவடிகளை பற்றி, "உனக்கு வெறும் இந்த அன்னத்தை மட்டும் சமர்ப்பிப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. என்னையே நான் சமர்ப்பிப்பதற்காக வந்தேன். இனி உன் திருவடியை விட்டு போவதற்கு இயலாது. இந்த இல்வாழ்க்கை எனக்கு வேண்டாம். உன்னுடைய மீளா இன்பத்தை எனக்கு குடு" என்று அப்பெண் ப்ரார்த்திக்க ஒரே நிமிஷத்தில் அவளை கண்ணன் அங்கீகாரம் பண்ணினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இந்த அளவுக்கு பாவஸுத்தி என்னிடம் இல்லையே.! அந்த பெண் கண்ணனை விட்டு போக மாட்டேன் என்று சொன்னாள். அதை போல நான் சொல்லலையே! உயிரை பெரியதாக மதிக்காமல், தேகத்தை மதிக்காமல் கண்ணன் திருவடியே முக்கியம் என்று,  தேக யாத்திரையை விட ஆத்ம யாத்திரையில் ஆசையோடு இருந்தாளே. அவளை போல நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து விமானங்களும் முக்கியமானவைகள் தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக முக்கியமானவைகள் என்று சொல்லலாம். 

1. ப்ரண வாக்குருதி விமானம், 2. விமலாக்குருதி விமானம், 3. சுத்தஸ்த்வ விமானம், 4. தாரக விமானம், 5. சுகநாக்ருதி விமானம், 6. வைதிக விமானம், 7. உத்பலா விமானம், 8. சௌந்தர்ய விமானம், 9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம், 11. சஞ்சீவி விக்ரஹ விமானம், 12. அஷ்டாங்க விமானம், 13. புண்யகோடி விமானம், 14. ஸ்ரீகர விமானம், 15. ரம்ய விமானம்,  16. முகுந்த விமானம், 17. விஜய கோடி விமானம், 18. சிம்மாக்கர விமானம், 19. தப்த காஞ்சன விமானம், 20. ஹேமகூட விமானம் 

என்பனவாகும். இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும், ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப்போகிறது. இந்த விமானங்களைச் சேவித்த மாத்திரத்திலேயே பாவ நாசம் உண்டாகிற தென்பதும், இதன் அடிப்படையிலேயே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்னும் பழமொழி உண்டாயிற்றெனவும் ஆன்றோர் மொழிவர். 

இந்த 108 திவ்ய தேசங்களில் இரண்டு ஸ்தலங்கள் இந்நிலவுலகில் பார்க்க முடியாதவைகளாகும். ஒன்று பரம பதம். மற்றொன்று பாற்கடல். முற்காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் ஏற்படுத்தினார்களில்லை. பூமியின் உள்ளே மனித ஜீவாதார சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப்பெயர். அது நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும். இத்தகைய இடம் நம் இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான் இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும் கூறினார். ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில் ஆலயங்கள் பல தோன்றின. 

இந்த 108 திவ்ய தேசங்கள் எங்கெங்கு உள்ளன. இதோ படம் பிடித்துக் காட்டுகிறது ஒரு பழம் பாடல். 

  ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
  ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் - சீர்நடுநாடு
  ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட
  நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள். 

  அதாவது, 

  • சோழநாட்டில்  - 40 திவ்ய தேசங்கள் 
  • நடு நாட்டில்  - 2 திவ்ய தேசங்கள்
  • தொண்டை நாட்டில் - 22 திவ்ய தேசங்கள்
  • மலை நாட்டில் - 13 திவ்ய தேசங்கள் 
  • பாண்டி நாட்டில் - 18 திவ்ய தேசங்கள் 
  • வட நாட்டில் - 11 திவ்ய தேசங்கள் 
  • திருநாட்டில் - 2 திவ்ய தேசங்கள்

    என மொத்தம் 108  திவ்ய தேசங்கள்
                      
இந்த 108 திவ்ய தேசங்களில் 106 னைச் சேவித்தவர்களை அவர்கள் இப்பூவுலகில் வாழ வேண்டிய காலக்கட்டாயம் முடிவுற்றதும் எம்பெருமானே இரண்டு திவ்யதேசங்கட்கும் அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது தலையாய வைணவக் கொள்கையாகும். 

இந்த 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று நிலைகளில் பக்தர்கட்கு காட்சியளிக்கிறார். அவைகள் நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், சயன (கிடந்த) திருக்கோலம். 

அதாவது, பரம்பொருள் ஸ்ரீவிஷ்ணு அமர்ந்த திருக்கோலத்தில் சகல உலகங்களையும், அவ்வுலக இயக்கக் காரணிகளான தேவர்களையும், அதிதேவதைகளையும் படைக்க எண்ணிய மாத்திரத்தில் எழுந்து நின்றார். அவ்வளவிலேயே அனைத்தும் படைக்கப்பட்டு விட்டன. இவ்வியக்கம் தொடர்ந்து முறை வழுவாது செயல்பட அறிதுயில் திருக்கோலத்தில் சயனித்து அனைத்தையும் நிர்வகித்துக் கொண்டே அறிதுயிலில் உள்ளார். 

திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர பாத்மத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

  • 1. ஸ்தாபனா - திருமாலை நின்ற திருக்கோலத்தில் 
  • 2. அஸ்தாபனா - அமர்ந்த திருக்கோலத்தில் 
  • 3. ஸமஸ்தாபனா - பள்ளி கொண்ட திருத்தலத்தில் 
  • 4. பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல ரூபங்களில் 
  • 5. பிரதிஷ்டானா - சன்மார்ச்சையுடன் அமைப்பது

இவ்வகைத் திருக்கோலங்களில் ஆலயங்களில் அமைக்கப்படும். திருமால், யோகம், போகம், வீரம், ஆபிசாரிகம் என நால்வகைப்படுவர். யோகிகள் யோக மூர்த்திகளையும், குடும்பத்தில் உள்ளவர்கள் போக மூர்த்திகளையும், வீரர்கள் வீர மூர்த்திகளையும், பகைவர்கட்குத் துன்பம் விழைவிக்க விரும்புவர்கள் ஆபிசாரிக மூர்த்திகளையும் வணங்குவர். இன்று போக, யோக மூர்த்திகளே பழக்கத்தில் அமைந்துள்ளன. வீர மூர்த்திகள் மிக அரிது. ஆபிசாரிக மூர்த்திகள் இன்று இல்லவே இல்லை. இதனை வேண்டும்போது அமைத்து அழித்து விடுவதுண்டு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்