About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

108 திவ்ய தேசங்கள் - 041 - திருவஹீந்திரபுரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||041. திருவஹீந்திரபுரம்|| 
||திரு அயிந்தை - திருவந்திபுரம் - கடலூர்||
||நாற்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ தெய்வ நாயகன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - தெய்வ நாயகன்
  • பெருமாள் உற்சவர் - அச்சுதன், மூவராகிய ஒருவன்
  • தாயார் மூலவர் - ஹேமாம்புஜவல்லி
  • தாயார் உற்சவர் - வைகுந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சேஷ, கருட நதி
  • விமானம் - சுத்த ஸத்வ, சந்திர
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம்
  • ப்ரத்யக்ஷம் - சந்திரன், கருடன்
  • ஆகமம் - பாஞ்சராத்திரம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. கருடன் கொண்டு வந்த நதி, கருட நதி என்று அழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும். ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக் காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் லக்ஷ்மி நரஸிம்ஹர் சந்நதியில் நரஸிம்ஹர் லக்ஷ்மியை இடது மடியில் அமர வைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நரஸிம்ஹர் தனது வலது தொடையின் மீது அமர வைத்து அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்ற போது அநுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டதாம். உடற் பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் லக்ஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளி உள்ளார். வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவனையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார். ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில் தான் முதன் முதலில் கோயில் ஏற்பட்டது.

பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்ட போது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி, பால் உண்ணி ஆகியவை மறையும். ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஸர்ப்பத்தை வழிபட்டால் தோஷம் நீங்கும்.

பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம். வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம். தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அநுபவித்து வழிபட்டுள்ளார். தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது. யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.

ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப் பட்டார்கள். அவர்கள் ஒளஷதா சலத்துக்கு வந்து வணங்க நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது. இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரண் அடைந்தனர். எல்லாரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சி அளிப்பதாகக் கூறிய பகவான் தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்.தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் பெற்றார். அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேஷன் அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அது தான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment