About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 28 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 107

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணரின் முடிவு |

கிருஷ்ணர் இருந்த இடம் பக்கமாக அப்பொழுது ஜரை என்ற வேடன் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். கிருஷ்ணரின் ரோஜா வர்ணமுள்ள பாதங்களைப் பார்த்துவிட்டு, அது ஒரு பறவை என்று அவன் நினைத்தான். அதைக் குறிபார்த்து அம்பினால் அடித்தான். அந்த அம்பு மீனின் வயிற்றிலிருந்து கிடைத்த இரும்புத் துண்டினால் ஆனது. 


இறந்த பறவை இருக்கும் என்று வேடன் அங்கே ஓடி வந்தான். ஆனால் கிருஷ்ணர் தரையில் கிடந்தார். தான் செய்த தவறை நினைத்து வேடன் நடுநடுங்கினான். 

அவன் கிருஷ்ணரின் காலில் விழுந்து, "பிரபு என்னை அறியாமல் நான் தங்களுக்கு தீங்கு இழைத்து விட்டேன். நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இந்தப் பாவத்தை நான் எப்படிப் போக்குவது என்று சொல்லுங்கள்" என்று வேண்டினான். 

கிருஷ்ணர் சிரித்தார். "எனக்கு உன்மீது சிறிது கூட கோபம் கிடையாது, நீ எனக்கு செய்துள்ள தொண்டை நான் பாராட்டுகிறேன். நீ சொர்க்கம் செல்ல வேண்டும் என்று அருள் புரிகிறேன்" என்று வாழ்த்தினார். 

கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார். 

கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் யஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். 

அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக் கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். 

என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 60

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 5

ஸ்கந்தம் 03

விதுரர் கேட்ட கேள்விகளுக்கு மைத்ரேயர் மகிழ்வுடன் பதில் கூறத் துவங்கினார். “தர்ம ராஜரின் அம்சமான தாங்கள் வெற்றி கொள்ள முடியாத பகவானின் புகழ் மாலையை நொடிக்கு நொடி புதிதாகத் தொடுக்கிறீர்கள். உலக மக்கள் அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு செயலைச் செய்து, அதனால் பெரிய துன்பத்தை அடைகிறார்கள். அது நீங்கவே நான் பகவானைப் பற்றிய இந்த பாகவதத்தைக் கூறுகிறேன்.


இதை ஒரு சமயம் ஸங்கர்ஷண மூர்த்தி ஸனகாதி முனிவர்களுக்கு தானே முன் வந்து கூறினார். குறைவற்ற அறிவின் வடிவினரான ஸங்கர்ஷண மூர்த்தி பாதாள லோகத்தில் இருக்கிறார். ப்ரும்ம தத்வத்தை அறிய விரும்பிய ஸனகாதி முனிவர்கள், அவரிடம் சென்று வினவினார்கள். மானஸீக பூஜையில் தனக்கு ஆதாரமான பகவானைப் பூஜித்துக் கொண்டு இருந்தார் ஸங்கர்ஷணராகிய ஆதிஸேஷ பகவான். ஸனகாதிகள் கேள்வி கேட்டதும், மூடியிருந்த தாமரை மொட்டுப்போன்ற தன் திருக்கண்களைத் திறந்து அவர்களை நோக்கினார். ஸனகாதிகள் ப்ரும்மலோகத்திலிருந்து கிளம்பும் போது அங்கிருந்து பாதாளம் வரை பாயும் கங்கை நதியில் நீராடி வந்தனர். அதனால், அவர்கள் திருமுடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட திருமுடியை ஸங்கர்ஷணரின் திருப்பாத தாமரைகளில் வைத்து வணங்கினர். அவரது பெருமையை நன்கறிந்த அவர்கள், கசிந்து கண்ணீர் மல்கி அவர் புகழைப் பாடினர். அவர் மகிழ்ந்து பாகவதத்தை ஸனகாதியர்க்குச் சொன்னார். அதை ஸனத்குமாரர் ப்ரும்மசர்ய விரதம் பூண்ட ஸாங்க்யாயன முனிவர்க்குக் கூறினார்.

ஸாங்க்யாயனர் பகவானின் திருவிளையாடல்களை தனது சீடரும் எனது குருவுமாகிய பராசரர்க்கும், ப்ருஹஸ்பதி பகவானுக்கும் கூறினார். புலஸ்திய முனிவரின் பரிந்துரையின் பேரில், பராசர மஹரிஷி இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எனக்கு உபதேசித்தார். குழந்தாய் விதுரா, நீ மிகவும் ச்ரத்தை கொண்டவன். பக்தியும் விநயமும் கொண்ட உனக்கு நான் இதைச் சொல்கிறேன்.

படைப்பு துவங்கும் முன் ப்ரபஞ்சமே நீரில் ஆழ்ந்திருந்தது. அப்போது ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே பரிபூரண ஞான ஸ்வரூபமான ஆனந்தத்தில் திளைத்து வேறெந்த செயலுமின்றி ஆதிசேஷனாகிய படுக்கையில் கண்களை மூடிய வண்ணம் யோகத் துயில் கொண்டு இருந்தார். நெருப்பின் எரிக்கும் திறன் கட்டை முழுதும் பரவியிருப்பினும் அது மறைந்திருப்பது போல், அனைத்து ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, தன் வாசஸ்தலமாகிய நீரில் சயனித்துக் கொண்டு இருந்தார். படைப்பு துவங்கு முன் அனைத்தையும் விழிக்கச் செய்ய கால சக்தியை மட்டும் விழித்திருக்கச் செய்தார். காலசக்தி பகவானையே அச்சாணியாக உடையது. இவ்வாறு பகவான் ஆயிரம் சதுர் யுகங்கள் தனது சித் சக்தியுடன் உறங்கிக் கொண்டு இருந்த போது, தன்னாலேயே தூண்டப்பட்ட கால சக்தி ஜீவன்களையும், அவர்களது செயல்பாடுகளையும் செய்ய முடுக்கி விட்டது. அப்போது பகவானின் உடலிலேயே அத்தனை லோகங்களும் காணப்பட்டன. அவற்றின் மீது அவரது திருக்கண்ணோக்கு விழவே, பூத ஸூக்ஷ்மங்கள் ரஜோ குணத்தால் மாறுதல் அடைந்து, படைப்பைத் துவக்குவதற்கான சக்தியாக அவரது தொப்புளில் இருந்து வெளிப்பட்டன. பகவானின் தொப்புளில் இருந்து ஒரு தாமரை மலர் வெளி வந்தது. அதன் ஒளியால் ப்ரளய ஜலம் ப்ரகாசித்தது. அந்தத் தாமரையில் பகவான் அந்தர்யாமியாக உள் நுழைந்தார். அப்போது அதில் இருந்து தனக்குத் தானே அத்தனையும் உணர்ந்தவராக ப்ரும்ம தேவர் தோன்றினார்.

அவரை உலகம் ஸ்வயம்பூ (தான் தோன்றி) என்றழைக்கிறது. ப்ரும்ம தேவர் தன்னைச் சுற்றி ஏதுமின்றி தான் தனித்து இருப்பதைக் கண்டு நாலு புறங்களிலும் நோக்கினார். அப்போது அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின. முதலில் அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இத்தாமரை மலரில் அமர்ந்துள்ள நான் யார்? என் பெயரென்ன? எந்த ஆதாரமும் இன்றி தாமரை எப்படித் தோன்றியது? இதன் அடியில் ஆதாரமாக இருப்பது எது? என்றெல்லாம் யோசனை செய்தார். ஏதும் விளங்காததால், தாமரையின் உள் நாளம் வழி கீழ் நோக்கிச் சென்று நீரின் அடி மட்டத்தை அடைந்தார். இருப்பினும் ஆதாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு இருளிலேயே தேடி தேடிப் பல காலம் கடந்து விட்டது. அனைத்து உயிர்களின் காலத்தைக் கணக்கிட்டு அழிக்கும் சக்தி தான் பகவானின் ஆயுதமான காலச் சக்கரம். அது அனைவர்க்கும் பயத்தை அளிப்பது. முயற்சி பயனற்றுப் போனதால் ப்ரும்ம தேவர் மீண்டும் தன் இடத்திற்கே வந்து அமர்ந்தார். மூச்சையும் மனத்தையும் அடக்கித் தவத்தில் மூழ்கினார். தேவர் காலக் கணக்கில் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தார். த்யான ஸமாதியில் அவருக்கு ஞானம் தோன்றியது. முன்பு தேடிக் காணாதது இப்போது இதயத்தில் ஒளிரக் கண்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 27 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 115

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 85

உத்³ப⁴வஸ் ஸுந்த³ரஸ் ஸுந்தோ³ 
ரத்ந நாப⁴ஸ் ஸுலோசந:|
அர்க்கோ வாஜஸநஸ்² ஸ்²ருங்கீ³ 
ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ:||

  • 796. உத்பவ: உயர்ந்தவர். ஸம்சாரத்தை விட உயர்ந்தவர். மேன்மையான பிறவியில் இருப்பவர். தனக்கு விருப்பமான போது, ​​விரும்பிய இடத்தில் பிறப்பை எடுக்கிறார். உயர்ந்த இடத்தில் (ஸ்ரீ வைகுந்தம்) வசிப்பவர். தேவர்களைப் படைத்தவர். தர்மத்தின் பாதுகாப்பிற்காக மீண்டும் மீண்டும் பிறந்தவர். 
  • 797. ஸுந்தர: அழகியவர்.
  • 798. ஸுந்த: உருகச் செய்பவர். தனது பக்தர்களிடம் இரக்கமுள்ளவர்.
  • 799. ரத்நநாப: மணிபோன்று அழகிய நாபியை உடையவர். ரத்தினம் போன்ற தொப்புளை உடையவர்.
  • 800. ஸுலோசந: அழகிய பார்வையை உடையவர். மயக்கும் கண்களை உடையவர்.

எட்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 801. அர்க்க: துதிக்கப்படுபவர். வணக்கத்திற்கு தகுதியானவர்.
  • 802. வாஜஸந: நிறைந்த அளவில் அன்னம் உண்ணச் சொல்பவர். எல்லா உயிர்களுக்கும் ஊட்டத்தை அளிப்பவர்.
  • 803. ச்ருங்கீ: கொம்புகளுடன் தோன்றுபவர். இறைவன் தனது மத்ஸ்ய மற்றும் வராஹ அவதாரங்களில் கொம்புகளைக் கொண்டிருந்தார். கோவர்த்தன மலையின் உச்சியை கையில் ஏந்தியவர். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் சக்தியை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியவர். தன் பக்தர்களின் மறுபிறவி பயத்தை அழிப்பவர்.
  • 804. ஜயந்த: வென்றவர். எதிரிகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக வெல்கிறார். தனது பக்தர்களின் வெற்றிக்கு கருவியாக இருக்கிறார்.
  • 805. ஸர்வ: விஜ்ஜயீ: சிறந்த அறிவாளிகளையும் வென்றவர். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவர்களை வென்றவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.52 

யதா³ தே மோஹ கலிலம் 
பு³த்³தி⁴ர் வ்யதித ரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர் வேத³ம் 
ஸ்²ரோ தவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச||

  • யதா³ - எப்பொழுது 
  • தே - உனது 
  • மோஹ - மயக்கமெனும் 
  • கலிலம் - அடர்ந்த காடு 
  • பு³த்³தி⁴: - அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு 
  • வ்யதிதரிஷ்யதி - கடந்து செல்லுகிறதோ 
  • ததா³ - அப்போது 
  • க³ந்தாஸி - நீ ஆவாய் 
  • நிர்வேத³ம் - சமநிலை 
  • ஸ்²ரோதவ்யஸ்ய - கேட்க வேண்டியவை 
  • ஸ்²ருதஸ்ய - முன்னரே கேட்டவை 
  • ச - மற்றும்

உனது அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு, எப்போது மோகக் குழப்பத்தை கடந்து செல்லுகிறதோ, அப்போது நீ கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் வேதனையேற்படாது, நீ சமநிலை ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்