About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 December 2023

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||017. திருக்கண்ணபுரம்||
||க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்||
||பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 4

திருமங்கையாழ்வார்
076. திவ்ய ப்ரபந்தம் - 1710 - பெரிய திருமொழி - 8.7.3
புயல் உறு வரை மழை* பொழிதர மணி நிரை*
மயல் உற வரை குடை* எடுவிய நெடியவர்*
முயல் துளர் மிளை முயல் துள* வள விளை வயல்*
கயல் துளு கணபுரம்* அடிகள் தம் இடமே|

077. திவ்ய ப்ரபந்தம் - 1711 - பெரிய திருமொழி - 8.7.4
ஏதலர் நகை செய* இளையவர் அளை வெணெய்*
போது செய்து அமரிய* புனிதர் நல் விரை* 
மலர் கோதிய மதுகரம்* குலவிய மலர் மகள்*
காதல் செய் கணபுரம்* அடிகள் தம் இடமே|

078. திவ்ய ப்ரபந்தம் - 1712 - பெரிய திருமொழி - 8.7.5
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுது எழ*
அண்டமொடு அகல் இடம்* அளந்தவர் அமர் செய்து*
விண்டவர் பட* மதிள் இலங்கை முன் எரி எழ*
கண்டவர் கணபுரம்* அடிகள் தம் இடமே|

079. திவ்ய ப்ரபந்தம் - 1713 - பெரிய திருமொழி - 8.7.6
மழுவு இயல் படை* உடையவன் இடம் மழை முகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய*
கொழுவிய செழு மலர்* முழுசிய பறவை பண்*
எழுவிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

080. திவ்ய ப்ரபந்தம் - 1714 - பெரிய திருமொழி - 8.7.7
பரிதியொடு அணி மதி* பனி வரை திசை நிலம்*
எரி தியொடு என இன* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அரு மறை* முறை சொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள் தம் இடமே|

081. திவ்ய ப்ரபந்தம் - 1715 - பெரிய திருமொழி - 8.7.8
படி புல்கும் அடி இணை* பலர் தொழ மலர் வைகு*
கொடி புல்கு தட வரை* அகலம் அது உடையவர்*
முடி புல்கு நெடு வயல்* படை செல அடி மலர்*
கடி புல்கு கணபுரம்* அடிகள் தம் இடமே|

082. திவ்ய ப்ரபந்தம் - 1716 - பெரிய திருமொழி - 8.7.9
புல மனும் மலர்மிசை* மலர் மகள் புணரிய*
நிலமகள் என இன* மகளிர்கள் இவரொடும்*
வல மனு படையுடை* மணி வணர் நிதி குவை*
கல மனு கணபுரம்* அடிகள் தம் இடமே|

083. திவ்ய ப்ரபந்தம் - 1717 - பெரிய திருமொழி - 8.7.10
மலி புகழ் கணபுரம் உடைய* எம் அடிகளை*
வலி கெழு மதிள் அயல்* வயல் அணி மங்கையர்*
கலியன தமிழ் இவை* விழுமிய இசையினொடு*
ஒலி சொலும் அடியவர்* உறு துயர் இலரே|

084. திவ்ய ப்ரபந்தம் - 1718 - பெரிய திருமொழி - 8.8.1
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்* 
வலி உருவின் மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட* 
தண் தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆன் ஆயன் * அவனை அம்மா விளை வயலுள்*
கான் ஆர் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

085. திவ்ய ப்ரபந்தம் - 1719 - பெரிய திருமொழி - 8.8.2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக* அங்கு ஓர் வரை நட்டு*
இலங்கு சோதி ஆர் அமுதம்* எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்*
விலங்கல் திரியத் தடங் கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை *
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

086. திவ்ய ப்ரபந்தம் - 1720 - பெரிய திருமொழி - 8.8.3
பார் ஆர் அளவும் முது முந்நீர்* பரந்த காலம்* 
வளை மருப்பின் ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய்* 
எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர் ஆர் ஆரல் இரை கருதிக்* குருகு பாயக் கயல் இரியும்*
கார் ஆர் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே|

087. திவ்ய ப்ரபந்தம் - 1721 - பெரிய திருமொழி - 8.8.4
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண் வெதும்ப* வேற்றோன் அகலம் வெம் சமத்து*
பிளந்து வளைந்த உகிரானைப் * பெருந் தண் செந்நெல் குலை தடிந்து*
களம் செய் புறவில் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

088. திவ்ய ப்ரபந்தம் - 1722 - பெரிய திருமொழி - 8.8.5
தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன் கொண்ட* மூவா உருவின் அம்மானை *
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

089. திவ்ய ப்ரபந்தம் - 1723 - பெரிய திருமொழி - 8.8.6
வடிவாய் மழுவே படை ஆக* வந்து தோன்றி மூவெழுகால்*
படி ஆர் அரசு களைகட்ட* பாழியானை அம்மானை *
குடியா வண்டு கொண்டு உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

090. திவ்ய ப்ரபந்தம் - 1724 - பெரிய திருமொழி - 8.8.7
வையம் எல்லாம் உடன் வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடி இலங்கை* குடிகொண்டு ஓட வெம் சமத்து*
செய்த வெம்போர் நம்பரனைச் * செழுந் தண் கானல் மணம் நாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

091. திவ்ய ப்ரபந்தம் - 1725 - பெரிய திருமொழி - 8.8.8
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்றத் தான் தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்* விண்பால் செல்ல வெம் சமத்து*
செற்ற கொற்றத் தொழிலானைச் * செந்தீ மூன்றும் இல் இருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

092. திவ்ய ப்ரபந்தம் - 1726 - பெரிய திருமொழி - 8.8.9
துவரிக் கனிவாய் நில மங்கை* துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள் நாள் பிறந்த அம்மானை *
உவரி ஓதம் முத்து உந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து * அடியேன் கண்டு கொண்டேனே|

093. திவ்ய ப்ரபந்தம் - 1727 - பெரிய திருமொழி - 8.8.10
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய்* முன்னும் இராமன் ஆய்த்தான் ஆய்* 
பின்னும் இராமன் ஆய்த் தாமோதரன் ஆய்க்* கற்கியும் ஆனான் தன்னை* 
கண்ணபுரத்து அடியேன்* கலியன் ஒலிசெய்த*
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை* செப்ப பாவம் நில்லாவே|

094. திவ்ய ப்ரபந்தம் - 1728 - பெரிய திருமொழி - 8.9.1
கைம் மான மத யானை* இடர் தீர்த்த கரு முகிலை*
மைம் மான மணியை* அணி கொள் மரதகத்தை*
எம்மானை எம் பிரானை ஈசனை* என் மனத்துள் அம்மானை* 
அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே|

095. திவ்ய ப்ரபந்தம் - 1729 - பெரிய திருமொழி - 8.9.2
தரு மான மழை முகிலைப்* பிரியாது தன் அடைந்தார்*
வரும் மானம் தவிர்க்கும்* மணியை அணி உருவில்*
திருமாலை அம்மானை* அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை* 
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே|

096. திவ்ய ப்ரபந்தம் - 1730 - பெரிய திருமொழி - 8.9.3
விடை ஏழ் அன்று அடர்த்து* வெகுண்டு விலங்கல் உற*
படையால் ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ்* 
கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?

097. திவ்ய ப்ரபந்தம் - 1731 - பெரிய திருமொழி - 8.9.4
மிக்கானை* மறை ஆய் விரிந்த விளக்கை* 
என்னுள் புக்கானைப்* புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானைக் கடிகைத்* தடங் குன்றின்மிசை இருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே|

098. திவ்ய ப்ரபந்தம் - 1732 - பெரிய திருமொழி - 8.9.5
வந்தாய் என் மனத்தே* வந்து நீ புகுந்த பின்னை*
எந்தாய் போய் அறியாய்* இதுவே அமையாதோ?*
கொந்து ஆர் பைம் பொழில் சூழ்* குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா* 
உன்னை என்றும்* மறவாமைப் பெற்றேனே|

099. திவ்ய ப்ரபந்தம் - 1733 - பெரிய திருமொழி - 8.9.6
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

100. திவ்ய ப்ரபந்தம் - 1734 - பெரிய திருமொழி - 8.9.7
பெற்றார் பெற்று ஒழிந்தார்* பின்னும் நின்று அடியேனுக்கு*
உற்றான் ஆய் வளர்த்து* என் உயிர் ஆகி நின்றானை*
முற்றா மா மதி கோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான் மறக்கேன்?* இது சொல் என் ஏழை நெஞ்சே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்யமந்தக மணியின் கதை|

சத்ராஜித் என்ற ஓர் அரசர் இருந்தார், அவர் சிறந்த சூர்யபக்தர். அவருடைய பக்தியைக் கண்டு மெச்சிய சூரிய பகவான், இவருக்கு ஸ்யமந்தகம் என்ற மணியை பரிசாக அளித்தார். சூரியனைப் போலவே அந்த மணி பிரகாசித்தது. இந்த மணியை சத்ராஜித் கழுத்தில் கட்டிக் கொண்டு அவரும் சூரியனைப் போலவே பிரகாசித்தார். இந்த மணியின் புகழ் எங்கும் பரவியது. இந்த மணி உள்ள இடத்தில் வறுமையே இருக்காது என்ற சக்தியும் இதற்கு இருந்தது.


சூரிய பகவானுக்காகக் கட்டிய கோவிலில் இந்த மணியை வைத்து சத்ராஜித் பூஜை செய்து வந்தார். அது நாள்தோறும் எட்டுப் பாரம் தங்கம் தந்து வந்தது. இது காரணமாகச் சத்ராஜித் மிகுந்த பணக்காரர் ஆனதுடன் மிகவும் ஆணவம் உடையவராகவும் ஆகி விட்டார். ஒரு நாள் கிருஷ்ணர் சத்ராஜித்திடம் பேசிக் கொண்டு இருந்த போது, "தயவு செய்து இந்த மணியை உக்கரசேன மன்னருக்குக் கொடுங்கள். அது காரணமாகச் சூரிய பகவானின் அருள் பெற்று அந்த நாடு செழிப்படையும்" என்று சொன்னார். ஆனால் அதற்குச் சத்ராஜித் மறுத்து விட்டார்.

ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பியான பிரசேனன் கட்டுக்கு வேட்டையாடக் கிளம்பினான். ஒரு நாளைக்கு என்று சொல்லி அந்த மணியைத் அவன் அண்ணனிடம் இருந்து பெற்று, அதைக் கழுத்தில் அணிந்து, குதிரையேறி வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு பெரிய சிங்கம் அவனைத் தாக்கியது, அது அவனையும் அவன் குதிரையையும் கொன்றது. ஆனால் அந்த மணிதான் அந்தச் சிங்கத்தை மிகவும் கவர்ந்தது. அதனால் அது மணியை வாயில் கவ்விக் கொண்டு அதன் குகைக்குள் நுழைந்தது. 

கரடிகளின் அரசனான ஜாம்பவான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் குகைக்குள் நுழைந்து, சிங்கத்தோடு சண்டை போட்டு, அதைக் கொன்றார். அந்த மணியை அவர் எடுத்துக் கொண்டார். மணியைக் கண்ட அவருடைய மகன் அது தனக்கு வேண்டும் என்று கேட்க, அதை அவர் அந்தப் பையனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

எண்பத்தி ஒன்றாவது வார்த்தை

081. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே|

சிதம்பரம் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார். பகவர் அந்தணரோ சந்நியாசியோ அல்ல.


ஆனாலும் அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டு விட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்.

ஒரு முறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும் துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்.

அதற்கு பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன். ராமானுஜரைப் பின்பற்றுபவன். நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம். ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள். இவை இரண்டும் ஒன்று சேராது. ஆகவே தான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " நான் அந்த பகவரைப் போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் முற்று பெற்றது

Tuesday, 12 December 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பாண்டவரின் ஸ்வர்க ஆரோஹணம்

ஸ்கந்தம் 01

உலகிலுள்ள அசுரர்கள் அனைவரையும் பல யுத்தங்கள் மூலமாக அழித்து முக்தி அளித்து பூபாரம் குறைத்த பெருமான், அதற்காகத் தன் உதவிக்கு இறங்கிய பரிவாரத்தின் பாரத்தை, முள்ளை முள்ளால் எடுப்பது போல் குறைத்தார். பின்னர் தன் உடலையும் மறைத்து விட்டார். ஆம், உடலைத் தான். ஜ்யோதிஸாகக் கிளம்பி ஸ்ரீமத் பாகவதத்திற்குள் புகுந்து விட்டான் என்று சொல்கிறது மாஹாத்மியம்.


புராண லக்ஷணத்திற்காக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்கள், ஸ்வர்க நரகாதி வர்ணனைகள் எல்லாம் சொல்லப்பட்டாலும், பக்தர்களின் மேன்மையும், க்ருஷ்ண லீலைகளையுமே ப்ரதானமாய்ச் சொல்கிறது ஸ்ரீ மத் பாகவதம்.

ஆம், பக்தர்களின் சரித்திரத்திலும், அவனது லீலைகளை விளக்கும் கதைகளிலும், பாடல்களிலும் அவன் பூரண ஸாந்நித்யத்தோடு விளங்குகிறான். அதைப் படிப்பவர், பாடுபவர் நெஞ்சங்களில் குடி கொண்டு அவர்களோடு ப்ரத்யக்ஷமாக விளையாடவும் துவங்குகிறான்.

தர்ம புத்ரர் கலி பிறந்து விட்டது, தானும் கிளம்ப வேண்டிய காலம் வந்தது என்று உணர்ந்தார். தன் பேரனான பரீக்ஷித்திற்கு முடி சூட்டினார். கார்ஹபத்யம் என்ற அக்னியை ஒரு இஷ்டி யாகம் செய்து தன் மேல் ஏற்றிக் கொண்டார். தினமும் அக்னி ஹோத்ரம் செய்து பாதுகாக்கபடும் மூவித அக்னிகளை துறவு பூணும் போது தன்னிடமே ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. பின்னர் அனைத்தையும் துறந்து மனத்தை அடக்கி ப்ரும்மத்தை உணர்ந்தார்.

மரவுரி உடுத்து, பேச்சை அடக்கி, உணவை விரித்து, தலை விரிகோலமாய், பார்ப்பவர்கள் பித்தென்று எண்ணும் படியாக ப்ரும்மத்தை த்யானம் செய்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி வட திசை நோக்கிக் கிளம்பினார். மற்ற பாண்டவர்களும் மனத்தில் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்து அண்ணனின் வழிச் சென்று நற்கதியை அடைந்தனர்.
த்ரௌபதியும் தன்னைத் தன் கணவர்கள் எதிர் பார்க்காமல் சென்றதை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ண த்யானம் செய்து அவரையே அடைந்தாள்.

இந்த பரம மங்கலமான சரித்திரத்தைச் சிரத்தையுடன் கேட்பவர்கள் பகவானிடம் பக்தி பெற்று மோக்ஷத்தை அடைவர்கள் என்று பலச்ருதி சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த போதிலும், மரணத்தை எவ்வாறு அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாக உரைக்கிறது இந்நிகழ்வு.

பரீக்ஷித் பெரியோர்கள் அறிவுரைப்படி செவ்வனே ஆட்சி செய்து வந்தான். அவன் பிறந்த போது ஜோதிட வல்லுநர்கள் உரைத்த அத்தனை நற்குணங்களையும் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். ஸ்வர்கபுரி போல் பூமியை மாற்றினான். தன் மாமன் உத்தரனின் மகளான இராவதியை மணந்து ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

ஒரு சமயம் திக் விஜயம் செல்லும் போது, ஓரிடத்தில் குரூரமாக நீசன் போலிருந்த ஒருவன், அரச வேஷம் தாங்கி ஒரு காளையையும், பசுவையும் காலால் உதைப்பது கண்டு அவனைப் பிடித்து தண்டித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்