About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் எண்ணம்l

கம்சனுக்கு அஸ்தி, பிராப்தி என்று இரு மனைவியர் இருந்தனர். கம்சன் கொல்லப்பட்டதும் இவர்கள் தங்கள் தகப்பனாரான ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். ஜராசந்தன் மிக்க பலசாலி; ஆனால் கொடுங்கோல் மன்னன், விதவையாக்கப்பட்ட தன் பெண்களைக் கண்டதும் அவனுக்கு வருத்தம் மேலிட்டது. ஆதலால் அவன் கிருஷ்ணனை மாத்திரம் அல்ல, யாதவ குலத்தையே அழித்து விடுவது என்று தீர்மானித்தான். ஆயிரக்கணக்கான ரதங்களையும்  காலாட் படைகளையும் குதிரைகளையும்,  யானைகளும் கொண்டு மதுராவைத் தாக்க ஏற்பாடுகள் செய்தான்.


கிருஷ்ணனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்ட ஜராசந்தன் மதுரா மீது படையெடுத்தான். சிறிய நகரமான மதுராவை நோக்கி அவனுடைய படைகள் முன்னேறுவதைக் கண்டதும் மதுராவாசிகள் நடுநடுங்கினர். ஆனால் கிருஷ்ணன் நிம்மதியாக இருந்தான். ஜராசந்தனைத் தாக்கச் சரியான தருணம் எது என்று யோசித்தான்.

"நான் அவதாரம் எடுத்ததே துஷ்டர்களை அழிப்பதற்காகத்தான். அதனால் ஜராசந்தனின் படை முழுவதையும் அழித்து விட வேண்டும். அப்பொழுது தான் அவை திரும்பிச் சென்று தங்கள் படைபலத்தை அதிகரித்துக் கொள்ள முடியாது" என்று இப்படிக் கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது சூரியனைப் போல பிரகாசித்த இரண்டு ரதங்கள் ஆகாயத்திலிருந்து கீழே வந்திறங்கின. ஒவ்வொரு இரதத்திலும் ஒரு தெய்விகச் சாரதி இருந்ததோடு, எல்லா விதமான போர்க் கருவிகளும் இருந்தன.

உடனே கிருஷ்ணன் பலராமனை பார்த்து, "இரண்டு ரதங்களிலும் நிறையப் போர்க்கருவிகள் இருக்கின்றன. மதுராவுக்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ஒரு ரதத்தில் ஏறி, எல்லாப் போர் வீரர்களையும் கொல்லுங்கள். நான் இன்னொரு ரதத்தில் ஏறி, உங்களை பின் தொடர்கிறேன். நாம் எதற்காக அவதாரம் எடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும், ஆகவே இந்த முழு படையையும் நாம் அழிப்போம்" என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சொன்னதை பலராமனும் ஏற்றுக் கொண்டான். இருவரும் கவசங்கள் தரித்துச் சிறந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, ரதத்தில் ஏறி, ஒரு சிறிய படை பின் தொடர, ஊருக்கு வெளியே வந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் ஜராசந்தனுடன் போர் புரியத் தயாரானார்கள். கிருஷ்ணன் பாஞ்சசன்யம் என்ற தன் சங்கை ஊதினான். சங்கநாதத்தைக் கேட்டதும், எதிரிப் படையில் இருந்த வீரர்கள் நடுங்கினர்.

ஜராசந்தன் கிருஷ்ணனையும் பலராமனையும் பார்த்தான். அது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை தந்தது, அவன் திடகாத்திரமான இரண்டு வீரர்களை எதிர்ப்பார்த்தன். ஆனால் அவன் பார்த்ததோ கொஞ்சி விளையாடக் கூடிய இரண்டு இளம் சிறுவர்கள். இந்த இளம் சிறுவர்களான கிருஷ்ணன் எப்படித் தன் உறவினர்களை எல்லாம் கொன்றான் என்று ஜராசந்தன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இதை நினைக்க நினைக்க அவனுக்குக் கோபம் தான் அதிகரித்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அறுபத்தி நான்காவது வார்த்தை

064. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே|

வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார், நாதமுனிகளின் பேரனாக, ஈசுவரமுனிக்கு மகனாக வீரநாராயணபுரத்தில் (தற்போதைய காட்டுமன்னார் கோயிலில்), யமுனைத்துறைவன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்தவர் இவரே.


அரையர் சேவை என்பது திருவரங்கத்திற்கே உரிய ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இனிய இசையமைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். ஸ்ரீ ரங்கத்தில் மடம் ஒன்று அமைத்து, அரங்கனுக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆளவந்தார், முன் வரிசையில் அமர்ந்து, அரையர் சேவையைக் கண்டு, கேட்டு, பெருமாள் பெருமையில் மூழ்கித் திளைப்பார். ஒரு நாள், அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆளவந்தாரைக் கண்டு, திருவாய்மொழியில் வரும் "ஆனந்த நகரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை மூன்று முறை பாடி நடித்தனர்.

அதைக் கேட்ட ஆளவந்தார், அரங்கன், தன்னை அரையர் வாய்மொழி மூலம் அனந்தபுரம் செல்ல அறிவுறுத்துவதாக உணர்ந்தார். உடனே, நம்பெருமாளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தனது மடத்தின் பொறுப்புகளை தனது சீடரான தெய்வாரியாண்டானிடம் ஒப்படைத்து விட்டு, அனந்தபுரம், என்ற திருவனந்தபுரத்திற்கு சென்று பத்மனாப சுவாமியை தரிசித்து, பெருமாள் சேவையில் சில நாட்கள் ஈடுபட்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஆளவந்தாரைப் போல் நம்பெருமாளின் குறிப்பறிந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆத்ம தேவன் - 3

ஸ்கந்தம் 01

கோகர்ணன் தந்தைக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தம் பாராயணம் செய்யுங்கள் என்றும் கூற, ஆத்ம தேவன் ஸ்ரீமத் பாகவத புராணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை நீங்கினார் என்கிறது மாஹாத்மியம்.


தீர்த்த யாத்திரை சென்ற கோகர்ணன் கயாவில் இருந்த போது, தன் ஊர்க்காரர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களிடம் தாயும் சகோதரனும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் நடந்த வ்ருத்தாந்தங்களைச் சொல்லி, துந்துலியும், துந்துகாரியும் இறந்து விட்டார்கள் என்று கூறினர். மிகவும் வருந்திய கோகர்ணன் கயாவிலேயே அவர்களுக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளையும், பிண்ட தானங்களையும் செய்தார்.

மந்திர பூர்வமான கிரியைகளை ஒருவரின் வாரிசுகளும், தாயாதிகளும் செய்தால் மட்டுமே அது இறந்தவரைச் சென்றடையும். ஆனால், கயா க்ஷேத்திரத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பிண்ட தானங்களைச் செய்யலாம். பயணத்தில் உடன் வந்தவர், அண்டை அயலார், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம் செல்ல ப்ராணிகளுக்காகக் கூட கயாவில் ச்ராத்தம் செய்யலாம். அப்படிச் செய்தால் இறந்தவருக்கு ஸ்வாமியான கதாதரன் உயர்ந்த பதத்தைக் கொடுத்து விடுவார்.

கோகர்ணனும் கயாவில் ச்ராத்தம் செய்து விட்டு, ஊருக்கு வந்து பார்க்கலாம் என்று திரும்பி வந்தார்.

வீடு பாழடைந்து பூட்டியிருந்தது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடி, ஜபம் செய்யத் துவங்கினார். சற்று நேரத்தில் ஆடு கனைப்பது போலவும், யாரோ அலறுவது போலவும், ஊளையிடுவது போலவும் விதம் விதமான சப்தங்கள் அவரது காதில் விழுந்தன. கண்களைத் திறந்தார். எதிரே புகை போல் ஒரு உருவம் இருந்தது. அது இவரிடம் பேச விழைகின்றது என்று புரிந்து கொண்டு, சில மந்திரங்களைச் சொல்லி தீர்த்த பாத்திரத்திலிருந்து சிறிது நீரை அதன் மீது தெளித்தார். இப்போது அந்த உருவம் பேச ஆரம்பித்தது.

“கோகர்ணா! என்னைக் காப்பாத்து! என்னைக் காப்பாத்து“ அலறியது அந்த உருவம்.

கோகர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“யார் நீ? ஏன் இப்படி இருக்க? “

“நான் தான் உன் அண்ணன் துந்துகாரி. “

“துந்துகாரியா? இதென்ன கோலம்? “

“நான் பஞ்சமா பாதங்களையும் செய்ததால துர்மரணமாகி இறந்துட்டேன். ப்ரும்ம ராக்ஷஸாகிட்டேன். எனக்கு உடம்பெல்லாம் எரியுது. அகோரப் பசி. என்னால் இந்த அவஸ்தையைத் தாங்க முடியல. இந்த ராக்ஷஸ அவஸ்தை என்னை விட்டுப் போனாப் போதும். தயவு செய்து ஏதாவது செய் கோகர்ணா“ அழுதது அந்த உருவம்.

“நீயும் அம்மாவும் இறந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டு நான் உங்களுக்காக கயாவில் ச்ராத்தம் செய்தேனே. அப்றம் எப்படி இந்த அவஸ்தை உனக்கு? “

“நூறு கயா ச்ராத்தம் செய்தாக் கூட என் பாவங்கள் போகாது கோகர்ணா. அவ்வளவு பண்ணிருக்கேன். என்னால் தாங்க முடியல கோகர்ணா. நான் உன் கிட்ட அன்பா ஒரு வார்த்தை கூட பேசினதில்ல. ஆனா, நீ மஹாத்மாவாச்சே. அண்ணனாச்சேன்னு கூட வேண்டாம். கஷ்டப்படற ஜீவன்னு நினைச்சாவது இரக்கம் காட்டு. என்னை இந்த அவஸ்தைலேர்ந்து விடுவிக்க ஏதாவது செய்யப்பா..“

கோகர்ணன் பல சாஸ்திர நூல்களை ஆராய்ந்தார். வழி ஒன்றும் புலப்படவில்லை. ஊரிலுள்ள அத்தனை சான்றோர்களையும் கூட்டி ஏதாவது வழி உண்டா? சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று கேட்டார்.

பலவாறு விவாதங்கள் நடந்தன. முடிவில் கயா ச்ராத்தத்தை விட உயர்ந்த மார்கம் இல்லை. எல்லா சாஸ்திரங்களும் அதைத் தான் சொல்கின்றன என்றார்கள்.

ஒரு பழுத்த ஸாது சொன்னார், “கோகர்ணா, கதியில்லை என்று ஒருவரையும் சாஸ்திரம் தள்ளுவதில்லை. நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். நமக்குத் தான் தெரியவில்லை. ஸூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வமாவார். அத்தனை சாஸ்திரங்களையும் அறிவார். அவரை உபாசித்தால் ஏதாவது வழி புலப்படும்.“

கேட்டதும் மகிழ்ந்தார் கோகர்ணன். அவர் காயத்ரியை கோடிக் கணக்கில் ஜபம் செய்து தேஜஸ்வியாக விளங்கியதால், “அவ்வளவு தானே“ என்று சொல்லி சூர்ய மந்திரங்களைச் சொல்லி அவரை நிறுத்தி விட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 31 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 36

ஸ்கந்த: ஸ்கந்த தரோ துர்யோ 
வரதோ வாயு வாஹந:|
வாசுதேவோ ப்ருஹத் பாநு 
ராதிதேவ: புரந்தர:||

  • 328. ஸ்கந்தஸ் - வற்றச் செய்பவன்.
  • 329. ஸ்கந்த தரோ - அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
  • 330. துர்யோ - தாங்குபவன்.
  • 331. வரதோ - வரங்களைத் தருபவன்.
  • 332. வாயு வாஹநஹ - வாயுவை நடத்திச் செல்பவன்.
  • 333. வாஸுதேவோ - வாசுதேவன், எங்கும் வசிப்பவன்
  • 334. ப்ருஹத் பாநுர் - மிக்க ஒளியையுடையவன்.
  • 335. ஆதிதேவஃ - ஊழி முதல்வன்.
  • 336. புரந்தரஹ - அசுரர்களின் இருப்பிடங்களை பிளப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்